Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Tuesday, 31 December 2013

தலைமுறைகள் - விமர்சனம்...!

0 comments
அர்த்தமுள்ள தலைமுறைகள்  -ஜி.ராமகிருஷ்ணன்


கடந்த டிசம்பர் 20, 2013 ல் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘தலைமுறைகள்’ திரைப்படம் மூன்று தலைமுறைகள் பற்றிய கதை.தாத்தா, மகன், பேரன் ஆகிய மூன்று தலைமுறைகளுக்குள் இருக்கும் இடைவெளியையும், பிறகு மூன்று தலைமுறைகளும் ஒரு புள்ளியில் (கருத்தால்) இணைவதையும் அழகுற இயக்குநர் பாலுமகேந்திரா கையாண்டுள்ளார். பத்தாம்பசலித்தனமான நடைமுறையை கொண்ட தாத்தா, சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு சென்னையில் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மகன், தமிழ் தெரியாத ஆங்கிலம் மட்டுமே தெரிந்த சென்னையில் பிறந்து வளரும் பேரன் ஆகிய மூன்று தலைமுறைகளை கொண்ட படம். 

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டு தன்னை சந்திக்க வந்த மகனையும், மருமகளையும் கடுமையாக திட்டி விரட்டிவிடுகிறார். தாத்தாவிற்கு உடல்நலம் பாதித்த போது அவருக்கு உதவி செய்ய மகனும், மருமகளும், பேரனும் கிராமத்திற்கு வருகிறார்கள். தாத்தா தன்னுடைய மகன் மற்றும் மகள் வழி பேரக் குழந்தைகளுக்கு பிள்ளை என்ற சாதிய அடையாளத்தோடு தான் பெயர் வைத்தார். தன்னுடைய பேரன் ஆதித்யாவை அழைத்து ‘உன்னுடைய பெயர் ஆதித்யா அல்ல ஆதித்யாபிள்ளை’ எனக் கூறுகிறார். தாத்தாவினுடைய கிராம நண்பர் (கிறித்துவ பாதிரியார்) தாத்தவைச் சந்தித்து ‘இந்த சாதி மதமெல்லாம் நம்மோடு போகட்டுமே, ஏன் இன்றைய தலைமுறைக்கு கொண்டுட்டு போற’ என்று கூறியதை தாத்தா அசைபோடத் துவங்கிவிட்டார். ஒரு நாள் தன்னுடைய மருமகள் (கிறித்துவர்) 8 கி.மீட்டர் தூரம் நடந்து அடுத்த கிராமத்தில் உள்ள சர்ச்சுக்கு சென்று வருகிறார். தனக்கு எல்லா உதவிகளையும் செய்து வரும் மருமகள் மழை, வெயிலை பாராமல் 8 கி.மீட்டர் தூரம் நடந்து சென்று வருவதைப் பார்த்து, ஏம்மா ஏன் கஷ்டப்படுறே எனக் கேட்கிறார். அடுத்தநாள் பேரன் தன்னுடைய தாயிடம் ‘அம்மா தாத்தா பூஜை ரூம வந்து பாருங்க:’ என்று அழைக்கிறான். 

இந்துக் கடவுளை வணங்கும் தாத்தா (சைவப்பிள்ளை) பூஜை அறையில் இந்துக் கடவுளுக்கு மத்தியில் ஏசுநாதர் படம் இருக்கிறது. இதைப் பார்த்த மருமகள் உணர்ச்சிவசப்படுகிறார்.கிராமத்தில் இருப்பவர்கள் தாத்தாவைச் சந்தித்து நம்ம ஊர்ல மருத்துவமனை இல்லையே என்று கேட்டதை அறிந்த மருமகள் அதே கிராமத்தில் ஒரு சிறிய மருத்துவமனையை துவக்குகிறார். ‘சென்னையிலிருக்கும் மருத்துவமனையை யார் பார்ப்பது, நீ சென்னைக்குத் தான் வர வேண்டும். பையன் சென்னையில் தான் சரியாக படிக்க முடியும், இங்கு படிப்பதற்கு வசதியில்லை’ என்று தனது கணவன் கூறியதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு மருமகள் கிராமத்திலேயே தங்கி கிராமத்து மக்களுக்கு மருத்துவ சிகிச்சையளிக்கிறார். மகனையும், அந்தப் பகுதியில் உள்ள தமிழ் வழி பள்ளியிலேயே சேர்க்க முடிவு செய்கிறார். இதைக் கண்ட தாத்தா நெகிழ்ந்து விடுகிறார். தாத்தாவிற்கும், பேரனுக்கும் இரண்டு தலைமுறை இடைவெளியாயிற்றே! தாத்தாவுக்கு ஆங்கிலம் தெரியாது, பேரனுக்கு தமிழ் தெரியாது. பேரனுக்கு தாத்தா தமிழ் கற்றுத் தர, தாத்தாவிற்கு பேரன் ஆங்கிலம் கற்றுத் தருகிறான். 

இந்தக் காட்சியெல்லாம் நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பாலுமகேந்திரா. சாதி, மத ஆச்சாரத்தோடு வாழ்க்கை நடத்திய தாத்தா நவீனமாகிறார். சாதி, மத வேறுபாடு கூடாது என்பதை எளிமையாக அனைவரும் ஏற்கும்படி அழகாக தாத்தா மூலம் இயக்குநர் வெளிப்படுத்துகிறார். பேரனிடம் உங்க அப்பா இந்து, உங்க அம்மா கிறிஸ்தவர், நீ யார்? என்று கேட்க, நான் ஆதி என்று மட்டும் பதில் சொல்ல வைத்திருப்பது அருமை.தாத்தா இறந்த பிறகு பேரன் ஆதித்யா வளர்ந்து பெரியவனாகி சென்னைக்குச் சென்று விடுகிறான். சென்னையில் தாத்தா, பேரன் உறவு குறித்து அவன் எழுதிய தமிழ்க் கவிதை நூலுக்கு விருது கிடைக்கிறது. விருதைப் பெற்றுக் கொண்ட ஆதித்யாவை பேசச் சொல்லுகிறார்கள். தாத்தா இறுதியாக பேரனுக்கு சொன்ன வார்த்தைகளை நினைவுப்படுத்தி பேரன் மேடையில் கண்ணீர் வடிக்கிறான். கடைசியாக இறப்பதற்கு முன்னதாக தாத்தா பேரனிடம் கூறியது, ‘ஆதி தமிழை மறந்திடாதே, தாத்தாவையும் மறந்திடாதே’திரைப்படத்தில் பாடல் இல்லை. ஆனால் இளையராஜாவின் பின்னணி இசை அருமை. இயக்குநர் பாலுமகேந்திரா தாத்தாவாக நடித்திருப்பது அபாரம். பாலுமகேந்திராவின் கேமராவின் கை வண்ணம் சொல்லத் தேவையில்லை. 

நுகர்வு கலாச்சாரம் அனைத்து துறை சார்ந்தவர்களையும், ஆட்டிப் படைக்கின்ற போது என்னுடைய படம் இப்படித் தான் இருக்கும். நான் பணம் சம்பாதிக்க படம் எடுக்க மாட்டேன் என்று தொடர்ந்து கூறி வருபவர் இயக்குநர் பாலு மகேந்திரா. அவருடைய சமீபத்திய படங்களில் ஏதாவது அர்த்தமுள்ள செய்தி ஒன்று இருக்கும். இன்றுள்ள சமூகத்தை ஒருபடி முன்னேற்ற அவரது படம் பயன்படும். அர்த்தமுள்ள படங்களை தொடர்ந்து எடுத்து வரும் பாலு மகேந்திராவின் கலைப் பணி தொடரட்டும். ஜாதியம் தகர்க்கும் தலைமுறைகள் வெற்றி பெறும்.
                                                                                             நன்றி: தீக்கதிர்...!

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com