Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Tuesday, 31 December 2013

தலைமுறைகள் - விமர்சனம்...!

0 comments
அர்த்தமுள்ள தலைமுறைகள்  -ஜி.ராமகிருஷ்ணன்


கடந்த டிசம்பர் 20, 2013 ல் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘தலைமுறைகள்’ திரைப்படம் மூன்று தலைமுறைகள் பற்றிய கதை.தாத்தா, மகன், பேரன் ஆகிய மூன்று தலைமுறைகளுக்குள் இருக்கும் இடைவெளியையும், பிறகு மூன்று தலைமுறைகளும் ஒரு புள்ளியில் (கருத்தால்) இணைவதையும் அழகுற இயக்குநர் பாலுமகேந்திரா கையாண்டுள்ளார். பத்தாம்பசலித்தனமான நடைமுறையை கொண்ட தாத்தா, சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு சென்னையில் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மகன், தமிழ் தெரியாத ஆங்கிலம் மட்டுமே தெரிந்த சென்னையில் பிறந்து வளரும் பேரன் ஆகிய மூன்று தலைமுறைகளை கொண்ட படம். 

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டு தன்னை சந்திக்க வந்த மகனையும், மருமகளையும் கடுமையாக திட்டி விரட்டிவிடுகிறார். தாத்தாவிற்கு உடல்நலம் பாதித்த போது அவருக்கு உதவி செய்ய மகனும், மருமகளும், பேரனும் கிராமத்திற்கு வருகிறார்கள். தாத்தா தன்னுடைய மகன் மற்றும் மகள் வழி பேரக் குழந்தைகளுக்கு பிள்ளை என்ற சாதிய அடையாளத்தோடு தான் பெயர் வைத்தார். தன்னுடைய பேரன் ஆதித்யாவை அழைத்து ‘உன்னுடைய பெயர் ஆதித்யா அல்ல ஆதித்யாபிள்ளை’ எனக் கூறுகிறார். தாத்தாவினுடைய கிராம நண்பர் (கிறித்துவ பாதிரியார்) தாத்தவைச் சந்தித்து ‘இந்த சாதி மதமெல்லாம் நம்மோடு போகட்டுமே, ஏன் இன்றைய தலைமுறைக்கு கொண்டுட்டு போற’ என்று கூறியதை தாத்தா அசைபோடத் துவங்கிவிட்டார். ஒரு நாள் தன்னுடைய மருமகள் (கிறித்துவர்) 8 கி.மீட்டர் தூரம் நடந்து அடுத்த கிராமத்தில் உள்ள சர்ச்சுக்கு சென்று வருகிறார். தனக்கு எல்லா உதவிகளையும் செய்து வரும் மருமகள் மழை, வெயிலை பாராமல் 8 கி.மீட்டர் தூரம் நடந்து சென்று வருவதைப் பார்த்து, ஏம்மா ஏன் கஷ்டப்படுறே எனக் கேட்கிறார். அடுத்தநாள் பேரன் தன்னுடைய தாயிடம் ‘அம்மா தாத்தா பூஜை ரூம வந்து பாருங்க:’ என்று அழைக்கிறான். 

இந்துக் கடவுளை வணங்கும் தாத்தா (சைவப்பிள்ளை) பூஜை அறையில் இந்துக் கடவுளுக்கு மத்தியில் ஏசுநாதர் படம் இருக்கிறது. இதைப் பார்த்த மருமகள் உணர்ச்சிவசப்படுகிறார்.கிராமத்தில் இருப்பவர்கள் தாத்தாவைச் சந்தித்து நம்ம ஊர்ல மருத்துவமனை இல்லையே என்று கேட்டதை அறிந்த மருமகள் அதே கிராமத்தில் ஒரு சிறிய மருத்துவமனையை துவக்குகிறார். ‘சென்னையிலிருக்கும் மருத்துவமனையை யார் பார்ப்பது, நீ சென்னைக்குத் தான் வர வேண்டும். பையன் சென்னையில் தான் சரியாக படிக்க முடியும், இங்கு படிப்பதற்கு வசதியில்லை’ என்று தனது கணவன் கூறியதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு மருமகள் கிராமத்திலேயே தங்கி கிராமத்து மக்களுக்கு மருத்துவ சிகிச்சையளிக்கிறார். மகனையும், அந்தப் பகுதியில் உள்ள தமிழ் வழி பள்ளியிலேயே சேர்க்க முடிவு செய்கிறார். இதைக் கண்ட தாத்தா நெகிழ்ந்து விடுகிறார். தாத்தாவிற்கும், பேரனுக்கும் இரண்டு தலைமுறை இடைவெளியாயிற்றே! தாத்தாவுக்கு ஆங்கிலம் தெரியாது, பேரனுக்கு தமிழ் தெரியாது. பேரனுக்கு தாத்தா தமிழ் கற்றுத் தர, தாத்தாவிற்கு பேரன் ஆங்கிலம் கற்றுத் தருகிறான். 

இந்தக் காட்சியெல்லாம் நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பாலுமகேந்திரா. சாதி, மத ஆச்சாரத்தோடு வாழ்க்கை நடத்திய தாத்தா நவீனமாகிறார். சாதி, மத வேறுபாடு கூடாது என்பதை எளிமையாக அனைவரும் ஏற்கும்படி அழகாக தாத்தா மூலம் இயக்குநர் வெளிப்படுத்துகிறார். பேரனிடம் உங்க அப்பா இந்து, உங்க அம்மா கிறிஸ்தவர், நீ யார்? என்று கேட்க, நான் ஆதி என்று மட்டும் பதில் சொல்ல வைத்திருப்பது அருமை.தாத்தா இறந்த பிறகு பேரன் ஆதித்யா வளர்ந்து பெரியவனாகி சென்னைக்குச் சென்று விடுகிறான். சென்னையில் தாத்தா, பேரன் உறவு குறித்து அவன் எழுதிய தமிழ்க் கவிதை நூலுக்கு விருது கிடைக்கிறது. விருதைப் பெற்றுக் கொண்ட ஆதித்யாவை பேசச் சொல்லுகிறார்கள். தாத்தா இறுதியாக பேரனுக்கு சொன்ன வார்த்தைகளை நினைவுப்படுத்தி பேரன் மேடையில் கண்ணீர் வடிக்கிறான். கடைசியாக இறப்பதற்கு முன்னதாக தாத்தா பேரனிடம் கூறியது, ‘ஆதி தமிழை மறந்திடாதே, தாத்தாவையும் மறந்திடாதே’திரைப்படத்தில் பாடல் இல்லை. ஆனால் இளையராஜாவின் பின்னணி இசை அருமை. இயக்குநர் பாலுமகேந்திரா தாத்தாவாக நடித்திருப்பது அபாரம். பாலுமகேந்திராவின் கேமராவின் கை வண்ணம் சொல்லத் தேவையில்லை. 

நுகர்வு கலாச்சாரம் அனைத்து துறை சார்ந்தவர்களையும், ஆட்டிப் படைக்கின்ற போது என்னுடைய படம் இப்படித் தான் இருக்கும். நான் பணம் சம்பாதிக்க படம் எடுக்க மாட்டேன் என்று தொடர்ந்து கூறி வருபவர் இயக்குநர் பாலு மகேந்திரா. அவருடைய சமீபத்திய படங்களில் ஏதாவது அர்த்தமுள்ள செய்தி ஒன்று இருக்கும். இன்றுள்ள சமூகத்தை ஒருபடி முன்னேற்ற அவரது படம் பயன்படும். அர்த்தமுள்ள படங்களை தொடர்ந்து எடுத்து வரும் பாலு மகேந்திராவின் கலைப் பணி தொடரட்டும். ஜாதியம் தகர்க்கும் தலைமுறைகள் வெற்றி பெறும்.
                                                                                             நன்றி: தீக்கதிர்...!
Read more...
Tuesday, 17 December 2013

பாகூர் ஐ.டி.ஐ.க்கு NCVT வழங்க கோரி எஸ்.எப்.ஐ. - டி.ஒய்.எப்.ஐ. போராட்டம்...!

0 comments
புதுச்சேரி பாகூர் அரசு ஐ.டி.ஐ. துவங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் இது வரை மத்திய அரசின்  NCVT அங்கீகாரம் இல்லாததால் இங்கு படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அவலம் ஏற்பட்டுலத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் 16-12-2013 அன்று காலை வகுப்புகளை புறக்கணித்து பேரணியாக பாகூர் தபால் நிலையத்தில் இருந்து புதுச்சேரி முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தப்பட்டது. 

*2008ம் ஆண்டு புதுச்சேரி அரசால் துவங்கப்பட்ட பாகூர் ஐ.டி.ஐ.க்கு மத்திய அரசின் NCVT அங்கீகாரம் இல்லாததால் இங்கு படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் நிலையை கண்டித்து...

*ஐ.டி.ஐ.க்கு தேவையான உபகரணங்களையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்திட கோரி...

*ஐ.டி.ஐ.க்கு போதுமான ஆசிரியர்களையும், அலுவலக பணியாளர்களையும் நியமித்திட வலியுறுத்தி...

*FITTER பிரிவில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கையை நடத்தக்கோரி...

*ELECTRICIAN/ COMPUTER DATA ENTRY/ TAILORING போன்ற புதிய பிரிவுகளை துவங்கிட கோரி போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க பாகூர் கொம்யூன் செயலாளர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். வாலிபர் சங்கத்தின் பாகூர் தலைவர் அரிதாஸ் முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தை வாழ்த்தி இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச தலைவர் அருண்குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் சரவணன், முன்னாள் வாலிபர் சங்க செயலாளர் தமிழ்செல்வன், மாணவர் சங்க நிர்வாகிகள் பிரசாந்த், பாஸ்கரன், ரூபன், விஷ்ணு உட்பட திரளான மாணவர்கள் பங்கேற்றனர்.

Read more...
Wednesday, 11 December 2013

புதுச்சேரி பல்கலைகழக பாலியல் சீண்டல் புகார் - மாநிலங்களவையில் எதிரொலி...!

1 comments
                                                     பத்திரிக்கை செய்தி 
புதுச்சேரி  பல்கலைகழக பாலியல் சீண்டல் புகார் - மாநிலங்களவையில் எதிரொலி...!
புதுச்சேரி: 11/12/2013.
இந்திய மாணவர் சங்கம் விடுத்த வேண்டுகோளை ஏற்று மதிப்பிற்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.சி.பி.நாராயணன் அவர்கள் புதுவை பல்கலைகழகத்தில் நடைபெற்ற பாலியல் சீண்டல் மற்றும் அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகளையே குற்றவாளிகளாக மாற்றி தண்டித்த வெட்கக்கேடான செயலை கண்டித்து மாநிலங்களவையில் 09-12-2013 (திங்கட்கிழமை) பின்வரும் கேள்விகளை எழுப்பினார்.

*பாதிக்கப்பட்ட புதுவை பல்கலைகழக மாணவிகளிடம் இருந்து புகார் ஏதேனும் வந்துள்ளதா?

*ஆம், என்றால் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

*பாதிக்கப்பட்ட மாணவியையே குற்றவாளியாக மாற்றி பல்கலைகழகத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட கொடுமையை மத்திய அரசு அறியுமா?

*புதுவை பல்கலைகழகத்தின் நடவடிக்கைகள் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட பாலியல் சீண்டல் மற்றும் பாலியல் தொந்தரவுகளுக்கு எதிரான சட்டங்களுக்கு முரணாக உள்ளது என்பதை மத்திய அரசு அறியுமா?

*மத்திய பல்கலைகழகங்கள் மற்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய சூழலில், பாதிக்கப்பட்ட மாணவிகளையே குற்றவாளிகளாக கருதி தண்டிக்கும் சூழலில் இது போன்ற செயல்கள் இனி தடுப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?

பல்கலைகழக  மாணவிகள்  காவியா, வித்யா பாதிக்கபட்டது இல்லாமல் "மேலும் பல மாணவிகள் மற்றும் பெண் பேராசிரியைகள் கூட பாதிக்கபட்டுள்ளனர்" என்று புகார்கள் வரத்துவங்கியுள்ளது. கல்வி கட்டணம்  உயர்வு, கட்டுமான பணிகளில் ஊழல், பணி  நியமனத்தில் முறைகேடு என பல்கலைகழக நிர்வாகம்  ஒரு திறமையற்றவையாகவும், மெத்தனமாகவும் சமூக பொறுப்பற்ற விதத்தில் செயல்படுவது வேதனைக்குரியது. பாலியல் புகார்களை முறையாக விசாரிக்காமல் மெத்தனமாகவும், ஆணவமாகவும் செயல்படும் பல்கலைகழக துணைவேந்தரின் நிர்வாக திறமையற்ற போக்கின் மீது மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி பிரதேச குழு வலியுறுத்துகிறது.

புதுவை மாநிலத்தில் பல்கலைகழகம் துவங்கி நடுநிலை  பள்ளி வரை பாலியல் சீண்டல் மற்றும் தொந்தரவினால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஆதரவாக மனம் குமுறிக்கொண்டு இருக்கும் பல்லாயிரகணக்கான மாணவிகளின் குரலை பாராளுமன்றத்தில் ஒலிக்க செய்த திரு.சி.பி.நாராயணன் அவர்களுக்கு இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி பிரதேச குழு தனது இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்து கொள்கிறது.

தலைவர்                                 செயலாளர் 
எஸ்.அருண்குமார்             அ.ஆனந்த்


Read more...
Tuesday, 3 December 2013

போதை-பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மாணவர்-இளைஞர் கலைவிழா..!

0 comments

புதுச்சேரி,நவ.30,2013.
வில்லியனூரில் போதை-பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மாணவர் இளைஞர் ஒற்றுமை கலைவிழா புதுச்சேரியில் நடைபெற்றது.
 
போதை-வன்முறை,பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை ஆகியவைக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து அறுவடை- 2013 என்ற தலைப்பில் மக்கள் ஒற்றுமை கலைவிழா புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தில் நடைபெற்றது.
 
இவ்விழாவிற்கு வாலிபர் சங்கத்தின் வில்லியனூர் நெட்டப்பாக்கம் கொம்யூன் குழு தலைவர் சண்முகம்,எஸ்எப்ஐ கொம்யூன்குழு செயலாளர்  திவானந்த் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். டிஒய்எப்ஐ கொம்யூன் செயலாளர் செல்வராசு வரவேற்புரையாற்றினார். புதுச்சேரி சமூகநலத்துறை அமைச்சர் பி.ராஜவேலு,டிஒய்எப்ஐ தமிழ்மாநில தலைவர் செ.முத்துகண்ணன்,எஸ்எப்ஐ தமிழ்மாநில துணைத்தலைவர் ரெ.ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்கள். இவ்விழாவில் வாலிபர் சங்க பிரதேச தலைவர் இரா.சரவணன்,செயலாளர் ப.சரவணன், பொருளாளர் கதிரவன், நிர்வாகிகள் மோகன், அரிதாஸ், மாணிக்கம், பத்மநாபன், அருள்குமரன்,எஸ்எப்ஐ பிரதேச தலைவர் அருண், துணைத்தலைவர் ரஞ்சித், செயலாளர் ஆனந்த் உளிட்ட திரளான வாலிபர்கள் மாணவர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.
 
முன்னதாக புதுவை சப்தர்ஹஷ்மி கலைக்குழுவினரின் கிராமிய பாடல்கள் மற்றும் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
                                                                                                
நன்றி : தீக்கதிர்...! 
Read more...
Sunday, 1 December 2013

புதுச்சேரியில் ஆபாச படம் காட்டிய ஆசிரியர்கள் : கைது செய்ய வலியுறுத்தல்

0 comments
புதுச்சேரியில் ஆபாச படம் காட்டிய ஆசிரியர்கள் : பாலியல் வன்புணர்ச்சி சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்..!
புதுச்சேரி, நவ.30,2013.
ஆபாச படம் காட்டிய 4 ஆசிரியர்களை பாலியல் வன்புணர்ச்சி சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அரும்பார்த்தபுரம் அரசு பள்ளியில் கணினியில் மாணவிகளுக்கு ஆபாச படம் காண்பித்த 4 ஆசிரியர்களை பாலியல் வன்புணர்ச்சி சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். நான்கு ஆசிரியர்களை நிரந்தரமாக பணியில் இருந்து நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
புதுச்சேரி கல்வித்துறை அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பிரதேச தலைவர் தெய்வானை தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்க பிரதேச துணைத்தலைவர் ரஞ்சித் முன்னிலை வகித்தார்.மாதர் சங்க பிரதேச துணைத்தலைவர் சுமதி, டிஒய்எப்ஐ பிரதேச தலைவர் ஆர்.சரவணன், மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மாதர் சங்க நிர்வாகிகள் மாரிமுத்து, சந்திரா, ஜெயலட்சுமி, வாலிபர் சங்க நிர்வாகிகள் பாஸ்கர், அழகப்பன், நாகமுத்து உள்ளிட்ட திரளான மாணவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக புதுச்சேரி மகளிர் ஆணையத்தை செயல்படுத்தக்கோரி முழக்கமிட்டனர்.

ஆசிரியர்கள் இடைநீக்கம்:கல்வித்துறை நடவடிக்கை

இந்நிலையில் ஆபாச படம் காண்பித்த ஆசிரியர்கள் நான்கு பேரையும் புதுச்சேரி கல்வித்துறை இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
                                                                                           
நன்றி:தீக்கதிர்...!
Read more...
 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com