Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Sunday, 10 November 2013

ராகிங் - பாலியல் சீண்டல் புகார் புதுச்சேரி பல்கலையை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்...!

0 comments
பாலியல் புகார் அளித்தவர்களை இடைநீக்கம் செய்த புதுச்சேரி பல்கலைக்கழகம்..!
புதுச்சேரி, நவ. 6-2013.
பாலியல் புகார் அளித்த மாணவியை இடைநீக்கம் செய்த புதுச்சேரி பல்கலைகழக நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் முதலாம் ஆண்டு படித்து வரும் எம்.காவியா என்ற மாணவி கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி பல்கலைகழகத்தில் தனது தோழி வித்யா என்ற மாணவியோடு நடந்து செல்லும் போது உடற்கல்விதுறை 2ஆம் ஆண்டு படித்து வரும் மாணவன் ஸ்ரீஜித் மற்றும் அவரது நண்பர்களும் சேர்ந்து காவியாவிற்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளனர். மேலும் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். எனவே, ஸ்ரீஜித் மீது நடவடிக்கை எடுக்ககோரி பல்கலைகழக நிர்வாகத்திலும், காலாப்பட்டு காவல்நிலையத்திலும் மாணவி காவியா புகார் அளித்துள்ளார்.

பாரபட்சமான நடவடிக்கை:
இந்நிலையில் பாலியல் துன்புறுத்தல் செய்த மாணவன் ஸ்ரீஜித் தனது சக மாணவர்களோடு சேர்ந்து மாணவிகள் காவியா, வித்யா ஆகியோர் எங்களது சமூகத்தை பற்றி இழிவாக பேசினார்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாணவிகளோடு சேர்ந்து பல்கலைகழக மாணவர்கள், குற்றச்சாட்டுக்கு உள்ளான மாணவன் ஸ்ரீஜித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து இந்திய மாணவர் சங்கம் தலைமையில் போராடி வந்தனர். இந்நிலையில் பல்கலைகழக நிர்வாகம் புகார் கொடுத்த மாணவிகள் மீதும், அவர்களுக்கு ஆதரவாக போராடிய சகமாணவர்களையும் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மாணவன் ஸ்ரீஜித் உட்பட 11 மாணவர்களை பொத்தாம் பொதுவாக 6 மாதகாலத்திற்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.

போராட்டம்:
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாணவிகள் காவியா, வித்யா மற்றும் அவருக்கு ஆதரவாக போராடிய 5 மாணவர்கள் மீதும் பல்கலைகழகம் இடைநீக்கம் செய்திருப்பது, குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே உள்ளது எனக்கூறி இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரி பல்கலைகழக வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதர் சங்க புதுச்சேரி பிரதேச துணைத் தலைவர் சுமதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர் சங்க பிரதேச நிர்வாகிகள் அருண், ஆனந்து, ரஞ்சித், வாலிபர் சங்க பொருளாளர் கதிரவன் உட்பட திரளானோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்கலைகழத்தின் நடவடிக்கையை உடனே திரும்பபெறக்கோரி முழக்கமிட்டனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக புதுச்சேரி தாகூர் கலைகல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாதர் சங்கம் கண்டனம்:
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சுதாசுந்தரராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பல்கலைகழகத்தில் மாணவிகளுக்கு எதிராக நடந்துள்ள சம்பவத்தில் பல்கலைகழக நிர்வாகம் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக புகார் கொடுத்த மாணவிகள் மீதே நடவடிக்கை எடுத்திருப்பது சட்டத்திற்கு விரோதமானது. எனவே பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான மாணவிகள் மீதான நடவடிக்கையை பல்கலைகழகம் உடனே திரும்பபெறவேண்டும். மேலும் பல்கலைகழகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான புகார் கமிட்டிகளை உடனே அமைக்க வேண்டும். எனவே நடந்த சம்பவம் குறித்து தேசிய பெண்கள் ஆணையத்திற்கும், பல்கலைகழக மானியக்குழுவிற்கும் மாதர் சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

உண்ணாவிரதம்
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் காவியா, வித்யா உள்ளிட்ட 7 மாணவர்கள் பல்கலைகழத்தின் முடிவை திரும்பப்பெறக்கோரி பல்கலைகழக இரண்டாம் வாயில் முன்பு இரண்டாவது நாளாக புதனன்றும் (நவ. 6) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையிலும் மாணவர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
புதுச்சேரி, பல்கலைகழகம்,போராட்டம், சந்திராகிருஷ்ணமுர்த்தி,பாலியல் சீண்டல் 

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com