Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Saturday, 6 July 2013

வன்முறையால் கொல்லப்படும் காதல் - சுபாஷினி அலி

0 comments
வன்முறையால் கொல்லப்படும் காதல் 
                                               - சுபாஷினி அலி
திவ்யா -இளவரசன்
இளவரசன் தற்கொலை செய்துகொண்டதாக வந்துள்ள செய்தி இளம் காதல்மண இணைகள் எந்த அளவுக்கு சாதிய, அரசியல் நிர்ப்பந்தங்களால் பிரிக்கப்படுகிறார்கள் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது. நவீன இந்தியா என்ற ஒப்பனை சாதி மறுப்புத் திருமணங்கள் முறிக்கப்படுகிற ஒவ்வொரு முறையும் கலைகிறது. இளவரசன்-திவ்யா கதையைப் போல, காதலித்து மணந்துகொண்ட வர்களில் ஒருவர் தலித் என்றால் ஒரு கும்பல் வெறிகொள்வது என்பது ஒரு மரபாகிவிட்டது.ஓராண்டுக்கு முன்பு, வன்னியர்-தலித் சமூகங்களைச் சேர்ந்தவர்களான, இன்று ‘தருமபுரி இணை’ என்று அறியப்படுகிற திவ்யா-இளவரசன் இருவரது கலப்புத் திருமணம் பற்றிய செய்தி வந்தபோதே இந்த இணைப்பு எத்தனை நாட்களுக்கு நீடிக்குமோ என்று நிகழ்வுகளைக் கவனித்து வந்த பலரும் நினைக்கவே செய்தார்கள். மனப்பூர்வமாகக் காதலித்த அந்த இருவரையும் பொறுத்தவரையில் அவர்களது திருமண உறவு வேதனையான முறையில் குலைந்துபோனது. சில நாட்களுக்கு முன்னர்தான் ‘தி ஹிண்டு’ நாளேட்டிற்கு பேட்டியளித்த இளவரசன், “நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம். திவ்யா தன்னுடைய குடும்பத்தைவிடவும் என்னோடு மிகமகிழ்ச்சியாக வாழ்ந்தார். ஆனால், நாங்கள் ஒரு அரசியல் சூழ்ச்சிக்கு பலியாகிவிட்டோம்,” என்று கூறினார். திவ்யாவே கூட முன்பு பத்திரிகையாளரிடம், தானும் தனது கணவரும் பெரும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும் “எனது காதலையும் திருமணத்தையும்” சாதியின் பிடியில் சிக்கியுள்ள சமுதாயத்திற்காக தியாகம் செய்ய முடிவு செய்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார். இவ்வாறு திருமணத்தை முறிப்பதற்குக் கட்டாயப் படுத்திய அமைப்புகளில் ஒன்றாகக் கூறப்படும் பாட்டாளி மக்கள் கட்சி தனக்கும் இதற்கும் எந்த வெளிப்படையான பங்கும் கிடையாது என்று கூறுகிறது. ஆனாலும், தங்களது பிள்ளைகளின் திருமணத்தை முடிவு செய்கிற உரிமை பெற்றோருக்கு உண்டு என்று அக்கட்சி வலியுறுத்துகிறது. மகிழ்ச்சிகரமாகத் தொடங்கிய ஒரு திருமண வாழ்வு இப்படி ஒரு சோக முடிவை அடைந்திருப்பது சில மாதங்களுக்கு முன் மதுரைக்கு நான் மேற்கொண்ட ஒரு அசாதாரணமான பயணத்தை நினைவுபடுத்துகிறது. குடும்பத்தின் எதிர்ப்பையும் அச்சுறுத்தல்களையும் தாக்குதல்களையும் மீறி துணிவுடன் சாதி விட்டு சாதி திருமணம் செய்துகொண்ட பல தம்பதிகள் இவ்வாண்டு ஜனவரி 24 அன்று, அங்கு நடந்த ஒரு விழாவில் பாராட் டப்பட்டனர். அவர்களது அந்தத் துணிவைப் பாராட்டுகிற விழாவுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. விழாவின் ஒரு பகுதியாக அந்த மேடையிலேயே ஒரு சாதி மறுப்புத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் இன்னொரு காட்சி : 
மற்றொரு நிகழ்வில், துயரத்தில் மூழ்கி யிருந்த 24 வயது அபிராமி கூறிய அவரது சோகக் கதை நமது நாட்டின் சமுதாய வாழ் வில் எந்த அளவிற்கு காட்டுமிராண்டித்தனம் நெருக்கமானதாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டியது. அவரைப் போன்ற ஆயிரக்கணக்கான பெண்கள் அனுபவிக்கிற காட்டுமிராண்டித்தனம் அது. நிகழ்ச்சியில் கூடியிருந்த மகிழ்ச்சிகரமான ஒவ்வொரு காதல் இணையையும் அச்சுறுத்திய காட்டுமிராண்டித்தனம் அது.தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் சூரக் கோட்டையில் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரான அபிராமி, தனது ஊருக்கு அருகில் உள்ள ஒரத்தநாடு நகரின் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்திருந்தார். கல்லூரிக்குச் செல்லும் பேருந்தில் தலித் இளைஞன் மாரிமுத்துவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. 

இது அபிராமியின் குடும்பத் தினருக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து அவரை அவர்கள் வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்தார்கள். குடிகாரனான 35 வயது தாய்மாமனுக்கு அவரை வலுக்கட்டாயமாக மணமுடிக்க முயன்றார்கள். மாரிமுத்துவுடன் அபிராமி தொடர்புகொண்டார். பின்னர் இருவரும் ஊரைவிட்டு ஓடினர். திக்கற்றவர்களாக அவர்கள் ஊர் ஊராகச் சென்றனர். மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிலரை சந்தித்த பிறகுதான் அவர்களால் கும்ப கோணத்திற்குச் சென்று திருமணம் செய்து கொள்ள முடிந்தது. 2010 செப்டம்பர் 16ல் அந்தத் திருமணம் நடைபெற்றது. சென்னை யில் ஒரு போராட்ட வாழ்க்கையை நடத்திய அவர்கள், மகள் சௌந்தர்யா பிறந்த பிறகு மாரிமுத்துவின் குடும்பத்துடன் வாழ்வதற்காக ஊர் திரும்பினர். ஆனால், சௌந்தர்யாவின் முதல் பிறந்தநாள் வருவதற்கு சில நாட்களே இருந்தபோது அபிராமியின் அண்ணன் அந்தக் குழந்தைக்கு ஒரு தங்கச் சங்கிலி பரிசளிக்க விரும்புவதாகக் கூறி மாரிமுத்துவைத் தொடர்பு கொண்டார். 2012 மே 25 அன்று தனது மச்சானை சந்திப்பதற்காக வீட்டைவிட்டுச் சென்றார் மாரிமுத்து. ஆனால், திரும்பி வர வில்லை. மறுநாள் காலையில், துண்டு துண்டாக வெட்டப்பட்ட அவரது உடல் ஆற்றுக்கு அருகில் கிடந்தது. அபிராமியின் தந்தையும் அண்ணனும் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டு காவல்துறையிடம் சரணடைந்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஆனால், விரைவிலேயே விடுவிக்கப்பட்டார்கள். ஏனென்றால், அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்ல யாரும் முன் வரவில்லை. 

அபிராமி பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் தலித் மரணங்களுக்கான இழப்பீட்டுத் தொகை அவருக்குக் கிடைக்காது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஒரு நல்வாய்ப்பாக இந்த வழக்கு ஒரு பொது விசாரணையின் போது தேசிய மனித உரிமைகள் ஆணையத் தின் தலைவர் முன் வந்தது. அபிராமிக்கும் அவரது மகளுக்கும் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஆணையம் மாவட்ட ஆட்சியருக்கு ஆணையிட்டது. அத்துடன் அபிராமிக்கு ஒரு வேலை அல்லது அவரது வாழ்க்கைக்காக நிலம் அளிக்கவும் ஆணையம் பணித்தது. தனக்குக் கிடைத்த பணத்தை அவர் மாரிமுத்துவின் பெற்றோருக்குக் கொடுத்துவிட்டார். ஆனால், இன்று வரையில் அவருக்கு வேலை வழங்கப்படவில்லை. மாரிமுத்துவின் குடும்பத்தினர், தங்கள் ஊரில் உள்ள நில உடைமையாளர்களான சாதியின ரின் பொருளாதார புறக்கணிப்புக்கு உள்ளான வர்களாக, வீட்டைவிட்டுச் சென்றுவிடுமாறு அபிராமியிடம் கூறிவிட்டனர்.தொடுக்கப்படும் வன்முறை சாவில் முடிந் தாலும் சரி, மணமக்கள் பிரிக்கப்படுவதில் முடிந்தாலும் சரி, அல்லது சமூகப் புறக்கணிப் பில் முடிந்தாலும் சரி - ஒவ்வொரு பிரச்சனை யும் “கௌரவக் குற்றங்கள்” என்பதைக் கை யாள்வதற்கான ஒரு தனிச்சட்டம் தேவை என்பதையே வலியுறுத்துகிறது. 

மத்திய அரசுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அளித்துள்ள மனுவில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதே போன்று ஒரு தனிச்சட்டம் தேவை என்பதை 242வது சட்ட ஆணையமும், அண்மையில் வெளி யிடப்பட்ட நீதிபதி வர்மா குழு அறிக்கையும் வலியுறுத்தியுள்ளன. இந்தக் குற்றங்களின் பல்வேறு அம்சங்கள் அந்தப் பரிந்துரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. கட்டப் பஞ்சாயத் துகள், சாதிப் பஞ்சாயத்துகள் ஆகியவை செய் கிற வேலைகளும் அதில் குறிப்பிடப்பட்டுள் ளன. சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளுக் கும் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு கெடுவாய்ப்பாக, பிற்போக்கான சாதிப் பாகுபாட்டு நடைமுறைகளாலும், அதன் மூலம் கெட்டிப்படுத்தப்படுகிற வலுவான ஆணாதிக் கக் கட்டமைப்புகளாலும் நிகழ்த்தப்படுகிற இத்தகைய மனிதத் தன்மையற்ற குற்றங் களைச் செயல்முனைப்புடன் கையாள வேண்டியதன் அவசியத்தை மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொஞ்சமும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.மத்தியில் ஆட்சி செய்கிற கட்சிதான் ஹரியானா மாநிலத்திலும் ஆளுங்கட்சியாக இருக்கிறது.

கட்டப்பஞ்சாயத்துகளின் பிற்போக்குத்தனமான செயல்கள் மிக அதிகமாக நடைபெறுகிற மாநிலம் அது. பிரச்சனையின் அடிவேரில் தாக்குதல் தொடுக்க வேண்டு மென்றால் சமூக சமத்துவமும் பாலின சமத்து வமும் தேவை. கட்டப் பஞ்சாயத்துகளுக்கும் அரசியல் செல்வாக்குள்ள சாதி-மத அமைப்பு களுக்கும் இடையே ஒன்றை ஒன்று சார்ந்தி ருப்பது அந்த அடிவேர். ஆனால், அதைத் தாக்குவதற்கான சமூக, பாலின சமத்துவம் தொடர்பான கொள்கை உறுதிப்பாடு காங்கிரஸ் கட்சிக்கும் இல்லை. இதர பெரிய கட்சிகளுக்கும் இல்லை. பல அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நேரத்தில் ஆதரவு திரட்டுவதற்கு இந்த கட்டப் பஞ்சாயத்துகள் தேவைப்படுகின்றன. ஒன்றை ஒன்று அனுசரித்துப்போகிற ஒரு நாசகரமான நிலைமையை இது உரு வாக்கியிருக்கிறது. அது சாதி அரசியலையும் அடையாள அரசியலையும் மேலும் வலுப் படுத்தியிருக்கிறது.நடப்பு ஆண்டில் “கௌரவம்” என்ற பெய ரால் பல இந்திய இளைஞர்கள் கொல்லப் பட்டுவிட்டார்கள். ஒரு செயலூக்கமுள்ள சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை என்பதைத் தான் இந்தக் கொடூர மரணங்கள் உணர்த்து கின்றன.

கட்டுரையாளர்: (அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர்களில் ஒருவரான சுபாஷினி அலி, மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினருமாவார்) 

                                      நன்றி : தி இந்து(ஜூலை 5)
                                   தமிழில்: அ. குமரேசன்.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com