Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Tuesday, 2 July 2013

உலகில் ஊட்டச்சத்து குறைவானோர் - 40 விழுக்காட்டினர் இந்தியர்களே..!

0 comments



உலகில் ஊட்டச்சத்து குறைவுடையோரில் 40 விழுக்காட்டினர் இந்தியர்கள்...!
உலகில் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டோர், மற்றும் அரசின் கொள்கைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படாததால் குறைவான எடை கொண்ட குழந்தைகள் எண்ணிக்கையில் நாற்பது விழுக்காட்டினர் இந்தியாவில் அதிகம் உள்ளனர்.

வளரும் பொருளாதார வல்லரசு என்று அழைக்கப்படும் இந்தியா சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகிய அம்சங்களில் பிரேசில், நேபாளம், வங்கதேசம், சீனா ஆகியவற்றை விட பின் தங்கியுள்ளது என்று கனடாவைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனமான மைக்ரோநியூட்ரியண்ட் இனிஷியேடிவ் அமைப்பின் தலைவரான எம்.ஜி.வெங்கடேஷ் மன்னார் கூறியுள்ளார். இந்தியாவில் இவற்றுக்குரிய அனைத்து திட்டங்களும் உள்ளன. அதற்குரிய கொள்கைகளும் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதில் மத்திய சுகாதாரம், மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சகம், கல்வி, கிராமப்புற வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் ஊடாடி வருகின்றன. ஆயினும் இவற்றை முன்னின்று நடத்தும் பொறுப்பாளர்கள் இல்லை. செயல்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் விளக்கம் கூறும் ஆட்களும் இல்லை என்று அந்த அமைப்பு கூறுகிறது. மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பும் இல்லை. 

2005ம் ஆண்டு முதல் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு நடத்தப்படவில்லை என்பது திகைப்பளிக்கும் விஷயமாகும். பழைய புள்ளிவிவரங்கள் மட்டும் கையில் உள்ளதால் இவ்விஷயங்களில் நாம் முன்னேறியிருக்கிறோமா அல்லது பின்னடைந்திருக்கிறோமா என்று அறியமுடியவில்லை என்று அமைப்பின் ஆய்வு கூறுகிறது. இந்திய நாடு தனது முன்னோடிகளை தேடி அலைய வேண்டியதில்லை. பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்குரிய கொள்கைகளும், திட்டங்களும், ஆதாரங்களும் அதனிடம் உள்ளன. எனவே அரசு நடவடிக்கைகளை தொடங்க வேண்டியது மட்டுமே பாக்கி என்று மன்னார் சொல்கிறார். யுனிசெப் தயாரித்த 2013ம் ஆண்டில் உலக குழந்தைகள் அறிக்கையில் ஐந்து வயதுக்குட்பட்டவர்கள் இறப்பு விகிதத்தில் இந்தியா 49வது இடத்தில் இருப்பதாக கூறுகிறது. அதே வேளையில் நேபாளம், வங்கதேசம் ஆகியவை முறையே 57, 60ம் இடங்களில் உள்ளன. இந்தியாவில் உயிருடன் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளுக்கு நடுவில் 32 விழுக்காடு குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன் என்று அந்த அறிக்கை சொல்கிறது.

அதேவேளையில் பிரேசிலில் அந்த விகிதாசாரம் 10 ஆகவும், வங்கதேசத்தில் 26 ஆகவும் உள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் பிறந்த சிசுக்கள் இறப்பு விகிதம் 1990ல் 81 விழுக்காடாக இருந்தது. 2011ல் இது 47 ஆக குறைந்துள்ளது இதே காலகட்டத்தில் இந்த விகிதம் பிரேசிலில் 49ல் இருந்து 14 ஆக குறைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக ஆண்டுக்கு எட்டு விழுக்காடாக உள்ளது. இந்த வளர்ச்சி மத்திய தர வர்க்கத்தின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்தியுள்ளது. பிரிட்டனை விட அதிகமாக கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். அதேவேளையில் குழந்தைகளுக்கு நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. இந்தியாவில் ஆண்டு தோறும் இரண்டு லட்சம் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மடிகின்றனர். அசுத்தமான தண்ணீர், முறையான துப்புரவு வசதிகள் இல்லாமை ஆகிய காரணங்களால் உருவாகும் வயிற்றுபோக்கு வியாதியால் இவை மடிகின்றன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. நீரால் உருவாகும் வியாதிகள் உற்பத்தியையும் பாதிக்கின்றன. ஆண்டு தோறும் 7.3 கோடி வேலைநாட்கள் இதனால் இழப்புக்கு ஆளாகின்றன. 

சுகாதாரமற்ற சூழலில் வாழும் குழந்தைகள் கிருமிகளையும் உள்வாங்கிக் கொள்கிறார்கள். இவை குழந்தைகளின் குடல், இரைப்பை போன்ற பகுதிகளில் குடியேறுகின்றன. குடல் பகுதிகளில் உள்ள பாதுகாப்பு வளையங்களால் இவைகள் உருவாக்கும் அறிகுறிகள் வெளியில் தெரிவதில்லை. இக்கிருமிகள் ஊட்டச்சத்துகள் குடல் சுவர்கள் மூலமாக ரத்தத்துக்குள் உறிஞ்சப்படுவதை தடுத்து விடுகின்றன. எனவே ஊட்டச்சத்து எவ்வளவு கொடுத்தாலும் அது குழந்தைகள் மத்தியில் பிரதிபலிப்பதில்லை என்று பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் நடத்திய ஆய்வு கூறுகிறது. இந்த நிலைமையை தூய்மையான குடிநீர் வழங்குவதாலும், ஆரோக்கியமான இலவச உணவு வழங்குவது மூலம் அகற்ற முடியும். இந்தியாவில் நாள்தோறும் 600 கோடி காலன் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. 

அதில் 26 விழுக்காடு மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது. இந்தியாவில் போதுமான கழிப்பறை வசதிகள், துப்புரவு வசதிகள் இல்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றன. கடந்த அறுபது ஆண்டுகளில் குடிநீர், துப்புரவு வசதிகள் திட்டங்களுக்காக இந்தியா சுமார் 2800 கோடி டாலர்களை செலவிட்டுள்ளது. ஆயினும் அதிகரிக்கும் மக்கள் தொகையின் தேவைகளை ஈடுகட்டுவது பெரும் போராட்டமாகவே உள்ளது. அரசின் மெத்தனமும், அதிகாரிகள்-அரசியல்வாதிகள்-மோசடி பேர்வழிகளின் கூட்டு இவற்றில் பெரும் தொகையை ஏப்பம் விட்டுள்ளது என்பதை மறந்து விடக்கூடாது.
                                                                              
                                                                                                                      நன்றி: தீக்கதிர்...!

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com