Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Saturday, 29 June 2013

பெயரளவிலே உள்ள கல்வி கட்டண நிர்ணய சட்டம்...!

0 comments
சட்டமாகவே உள்ள கல்வி கட்டண நிர்ணய சட்டம் - ஒன்றுபட்ட மாணவர், பெற்றோர் கண்காணிப்பு மற்றும் போராட்டத்தினால் மட்டுமே தடுக்கமுடியும்..! 
கல்வி விற்பனைக்கு அல்ல... கட்டுரையாளர்: கே.எஸ்.கனகராஜ்( மாநில தலைவர் )
இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு மாநில குழு.
புதிய கல்வியாண்டு துவங்கிவிட்டது. மாணவர்கள் மேல் வகுப்பிற்கு செல்லும் மகிழ்ச்சியோடு பள்ளி செல்ல துவங்கியுள்ளனர். தங்கள் குழந்தைகளின் இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள இயலாமல், கனத்த மனதோடும், துயரத்தோடும், நெஞ்சில் கனன்று எரியும் கோபத்தோடும் உள்ளனர். தனியார் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்.கல்வியாண்டு துவங்கும் முன்னரே  மார்ச், ஏப்ரல் மாதங்களிலேயே, பெற்றோரை அடுத்த கல்வியாண்டிற்கான கட்டணம் கேட்டு நச்சரிக்க தொடங்கிவிடுகின்றன. தனியார் பள்ளிகள். புதிதாக மாணவர் சேர்க்கை என்றால் ஜனவரி முதலே வசூல் வேட்டையை தொடங்கி விடுகின்றனர். இத்துணை அவசரப்பட்டு அரசு நிர்ணயித்த கட்டணத்தைதான் வசூலிக்கின்றனரா? என்றால் அதுவும் இல்லை.தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த முதலில், அவற்றின் கட்டணங்களை அரசு நிர்ணயிக்க வேண்டும் எனக் கேட்டு இந்திய மாணவர் சங்கம் நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக, தமிழக அரசு, 2009ல் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கட்டண ஒழுங்குமுறைச் சட்த்தை கொண்டுவந்தது.அச்சட்டத்தின்படி, நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் பத்தாயிரம் தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. தனியார் பள்ளி நிர்வாகங்களிடமிருந்து, அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களுக்கான ஊதியம், இதர அடிப்படை வசதிகள் மற்றும் ஓராண்டிற்கான பராமரிப்பு செலவு உள்ளிட்ட தகவல்களை பெற்று, பள்ளிகளுக்கான கட்டணங்களை நிர்ணயம் செய்தது அக்குழு.

பள்ளிகளுக்கான ஓராண்டிற்கான செலவோடு 15 சதவிகித இலாபத்தைக் கூட்டி கட்டணத்தை நிர்ணயம் செய்ததாக சொன்னது அக்குழு. ஆனாலும், தனியார் பள்ளி நிர்வாகங்கள் அக்கட்டண நிர்ணயிப்பை பெற்றுக் கொள்ள மறுத்தன. நீதிமன்ற படியேறினர். மேலும் அக்குழுவிடம் மேல்முறையீடும் செய்தனர். அதற்குள், நீதிபதி கோவிந்தராஜூக்கு பதிலாக நீதிபதி ரவிராஜ்பாண்டியன் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். மேல்முறையீட்டு மனுக்களையெல்லாம் விசாரித்து. அவர் புதிய கட்டண விகிதங்களை நிர்ணயம் செய்தார். பல பள்ளிகளுக்கு 15 சதவிகித கட்டண உயர்வு செய்யப்படடது. அந்த கட்டண உயர்வையும், தனியார் பள்ளிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இப்படி, இருமுறை கட்டண நிர்ணயம் செய்யும் போதும், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கருத்துக்கள் கேட்கப்படவே இல்லை.கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்ட ஒவ்வொரு முறையும், தனியார் பள்ளி நிர்வாகங்களின் வேண்டுக்கோளின்படியே கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டன. பெற்றோர் மற்றும் மாணவர்கள் வேண்டுகோள்கள் காதுகொடுத்து கேட்கப்படவே இல்லை. அது மட்டுமல்ல, நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணங்களை மட்டுமே வசூல் செய்த பள்ளிகளை மாநிலம் முழுவதும் விரல்விட்டு எண்ணிவிடலாம். நீதிபதி கோவிந்தராஜன்குழு நிர்ணயம் செய்த கட்டணங்களை விட மிக அதிகமான வசூல் செய்த பள்ளிகளுக்கு எதிராக வந்த புகார்கள் பற்றியும் பள்ளிக்கல்வித்துறை கண்டுகொள்ளவில்லை.

குறிப்பாக கோயமுத்தூர் மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை கண்டுகொள்ளவே இல்லை. தாங்களாகவே ஒரு கட்டணத்தை நிர்ணயித்துக் கொண்டு, வரம்பில்லாமல் வசூல் வேட்டையாடினார்கள். 2010-11கல்வியாண்டிலேயே பள்ளி நிர்வாகங்களின் இத்தகைய நடவடிக்கைகளால், வெறுப்புற்ற பெற்றோர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர். கோவையில் எஸ்.பி.ஓ.ஏ பள்ளி, அல்வேனியா, ஜோசப் பள்ளி, சந்திரா மெட்ரிக், சின்மயா வித்யாலயா, அமிர்தா பள்ளி, லிசிக்ஸ் மெட்ரிக் பள்ளி போன்ற பள்ளி பெற்றோர்கள், அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பது, நுஊ ( நுஒவசய உயசiஉரடயவச) என்ற பாடத்திட்டம் சாராத திறன்களை வளர்ப்பது என்ற பெயரில் கட்டணம், அதுதவிர நூலக கட்டணம், கணிப்பொறி கல்விக் கட்டணம், ளஅயசவ உடயளளநள க்கான கட்டணம் என பல்விதமான பெயர்களில் கட்டணங்களை இணைத்து பெருந்தொகை வசூலிப்பதை கண்டித்து, பள்ளிகள் முன் பெறோர்கள் போராட்டம் நடத்தினர். சாலை மறியல் கூட பல இடங்களில் நடத்தப்பட்டது. மாணவர் சங்கமும் பல இடங்களில் அவர்களோடு இணைந்து கொண்டது. அச்சமயங்களில், கல்வித்துறையும், கோவை மாவட்ட நிர்வாகமும் பள்ளி நிர்வாகங்களுக்கு சாதகமாக இருந்ததே தவிர, போராடும் மாணவர்கள்- பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கைளின் நியாயத்தை உணர முன்வரவில்லை. இதன் கரணமாக பெற்றோர்கள் பள்ளிவாரியாக பெற்றோர் நலச் சங்கங்களை உருவாக்கினர். மாவட்ட பெற்றோர்- மாணவர் நலச்சங்கமும் உருவாக்கப்பட்டது.2011-12 ஆம் கல்வியாண்டில் உயர்த்தப்பட்ட கல்வி கட்டணங்களை குறைக்க வலியுறுத்தி பெற்றோர்கள் போராடினர். மேலும் கல்விக்கட்டணத்தைவிட அதிகமாக வசூலிப்பதை எதிர்த்தும், கட்டும் பணத்திற்கு இரசீது கேட்டும் போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்றவற்றை முற்றுகையிடப்பட்டன. அதன் விளைவாக சில பள்ளிகளில் அரசு அதிகாரிகள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் பெற்றோர் கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உடன்பாடு ஏற்பட்டது. ஆனாலும பள்ளி நிர்வாகங்கள் உடன்பாட்டை அமல்படுத்தவில்லை. அதுமட்டுமல்லாது போராட்டத்தில் பங்கேற்ற மற்றும் வழிநடத்திய பெற்றோர் சங்க நிர்வாகிகளின் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க மறுத்து பழிவாங்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை மட்டும், கட்டிய பெற்றோர்களின் குழந்தைகளுக்கு தனிவகுப்பறைகளில் அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்கு பாடம் நடத்த மறுத்தனர்.

இது குறித்தெல்லாம், மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கையில்லை. இந்நிலையில் 2012 ஜூலையில் பெற்றோர் சங்கம் சார்பில் அனைத்துக் கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் கோவை நடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தலைமையில் நடைபெற்றது. அதன்பிறகு கல்வித்துறை சார்பில் பள்ளிக்களுக்கு எச்ரிக்கை சுற்றறிக்கை மட்டும அனுப்பப்பட்டது.பள்ளிக்கல்வித்துறை மற்றும் கோவை மாவட்ட நிர்வாகத்தினர் கல்வி வியாபார ஆதரவு நடவடிக்கையால் தைரியம் பெற்ற தனியார் பள்ளி நிர்வாகங்கள் இந்த க் கல்வியாண்டில் கூடுதல் அராஜகத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பல்லாண்டு காலம் போராடிப்பெற்ற இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த மறுத்து வருகின்றனர். கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி மே மாதம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். ஆனால் பல பள்ளிகள் பிப்ரவரி மாதமே விளம்பரம் வெளியிட்டு மாணவர் சேர்க்கையை துவக்கின. மாணவர் சங்கம் தலையிட்ட பிறகு பல பள்ளிகளில் விண்ணப்ப விநியோகம் நிறுத்தப்பட்டது. சமூகத்தில் நலிவுற்றவர்களுக்கான 25 சதவிகித இடஒதுக்கீட்டிற்கான விண்ணப்பம் எந்த பள்ளியிலும் வழங்கப்படவில்லை. மாணவர் வாலிபர் அமைப்புகளின் போராட்டத்திற்கு பிறகு, சி பள்ளிகளில் மட்டும் வழங்கப்பட்டது. சுமார் 300க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ள கோவையில் 200 விண்ணப்பங்களே வழங்கப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. பல மேல்நிலைப்பள்ளிகளில் தலித் மாணவர்களுக்கு இடம் கொடுக்கப்படவே இல்லை. எங்கள் பள்ளிகளுக்கு அரசு கட்டணம் நிர்ணயிக்கக் கூடாது. இவ்வளவுதான் நீங்கள் இலாபம் சம்பாதிக்க வேண்டும் என அரசு முடிவெடுக்கக்கூடாது அதை சந்தையின் போக்கில் விட்டுவிட வேண்டும் என்ற தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கி வைத்திருக்கும் மனநிலையின் வெளிப்பாட்டைத்தான் கோவை தனியார் பள்ளி நிர்வாகிகளின் செயல்பாட்டில் பார்க்க முடிகின்றது. நேர்மை, கட்டுப்பாடு, கீழ்படிதல் மற்றும் சுய ஒழுக்கம் இவையெல்லாம் ஒரு மாணவனுக்கு அடிப்படையான குணங்கள் என்று பள்ளியில் சொல்லிக்கொடுத்துக் கொண்டே, இலாப நோக்கிற்காக அவற்றை அப்பட்டமாக மீறுகின்றனர். குழந்தைகள் இவர்களிடமிருந்து என்ன கற்றுக் கொள்ளமுடியும்? கடையில் வாங்கும் பொருளுக்கு பில் வாங்கவேண்டும் என்று மாணவனுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டே, கல்விக் கட்டணம் கட்டும் பெற்றோருக்கு ரசீது தர மறுக்கின்றனர். இன்னும் சில படிகள் மேலே போய். சினிமா வில்லன்களை போல, நியாயம் கேட்ட பெற்றோரின் குழந்தைகளை அதேபள்ளியில் அடுத்த வகுப்பிற்கு சேர அனுமதி மறுக்கின்றனர். கோவை கோபால்நாயுடு பள்ளி 5ம் வகுப்பிலிருந்து 6ம் வகுப்பிற்கு அனுமதி மறுத்து விட்டது.

லிசிக்ஸ் பள்ளி ஸ்ரீபதி என்ற மாணவன் அப்பள்ளியில் 10ம் வகுப்பில் 455 மதிப்பெண்கள் பெற்ற போதும், 11ம் வகுப்பிற்கு அனுமதி மறுத்துவிட்டது. அம்மாணவர்களின் பெற்றோர் அரசு நிர்ணயித்த கட்டணத்தை கட்டியதே காரணம்.தற்போது சிபிஎஸ்சி பள்ளிகள் என்ற பெயரில் லட்சக்கணக்கில் நன்கொடை கொள்ளை நடந்து வருகின்றது. மாவட்ட நிர்வாகம் மௌனமாய் வேடிக்கை பார்க்கின்றது. இவற்றுக்கு எதிராக உறுதியாக செயப்படவேண்டிய மாநில அரசோ, அரசு பள்ளிகளை இன்றைய சூழலுக்கு மேம்படுத்தாமல், பலவீனப்படுத்துகிறது. மறுபுறம் நீதிபதி சிங்காரவேலு குழு மூலம் 40 சதவிகிதம் கட்டண உயர்வை அறிவித்து தனியார் பள்ளிகளை குளிரவைக்கின்றது. அதையும் வசூலிக்கமாட்டோம். நாங்கள் நிர்ணயிப்பதுதான் கட்டணம் என கொக்கரிக்கின்றன தனியார் பள்ளி நிர்வாகங்கள். 


                                                                              

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com