Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Thursday, 28 March 2013

பெண்கள் மீதான வன்முறைகளை ஒரு போதும் அனுமதியோம்...!

0 comments
உலக மகளிர் தினத்தில் சபதம் ஏற்போம்..!
கட்டுரையாளர் : ஷாபானுவாசுதேவன், புதுச்சேரி பல்கலைகழகம்.

தினசரி அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலின சமத்துவம் குறித்த விவாதங்கள், எங்கே எனது இந்தியா என பல்வேறு கேள்விகனைகளோடும், விவாதங்களோடும் இதுவரை இல்லாத அளவில் ஒருபெரும் போராட்டங்களை பெண்களை சமமானவர்களாய் போற்றப்படவேண்டும் என குரல்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்ற தருணத்தில் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக்குவது குறித்து பேசப்படுவதற்கு முக்கிய காரணம் கடந்த டிசம்பர் 16 ம் தேதி அன்று டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஒரு முக்கிய காரணம். நாட்டின் தலைநகர் மட்டுமின்றி இமயம் முதல் குமரி வரை கல்லூரி மாணவர்கள் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக்க தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். குறிப்பாக இன்றைய இளம் தலைமுறையினர் அதிகம் பயன்படுத்தி வரும் சமூக வலைதலங்களான (facebook, twitter) மூலமாக தங்களுடைய கண்டனக்குரல்களை பதிவு செய்தது மட்டுமின்றி போராட்டங்களுக்கான அறைகூவல்களே வலைத்தளங்கள் மூலம் விடுக்கப்பட்டு அதன் மூலம் பங்கேற்றவர்களும் அதிகம் என்பதை குறிப்பிட்டாகவேண்டும்.


டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார சம்பவத்தை போல் புதுவை திருவண்டார்கோயிலை அடுத்த கொத்தபுரினத்தம் கிராமத்தை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி ஜனவரி 1ம் தேதியன்று பேருந்து நடத்துனரால் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஏற்கனவே " எரிந்து கொண்டிருக்கிற தீயில் எண்ணெய்யை ஊற்றியதை போல் " மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. புதுச்சேரியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் என்றாலே மாணவ, மாணவிகள்  தங்கள் கல்லூரி வளாகத்திலே கண்டன ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு கலைந்து செல்வது வழக்கம். ஆனால் இம்முறை புதுச்சேரி பள்ளி மாணவி பலாத்கார சம்பவத்தை கண்டித்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைப்பதற்காக ஜனவரி 03,04 - 2013 ஆகிய இரு தினங்கள் புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு கலை அறிவியல் கல்லூரி, சமுதாய கல்லூரி, மோதிலால் நேரு அரசு தொழில்நுட்ப கல்லூரி, அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லூரி, தவளகுப்பம் ராஜீவ் காந்தி கல்லூரி, மதகடிப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி  மாணவர்கள் 3000க்கும் வகுப்புகளை புறக்கணித்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிகேட்டு கலெக்டர் அலுவலகத்தை தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கல்லூரி மாணவிகள் ஆயிரக்கணக்கில் வீதியில் இறங்கி போராடியது அநேகமாக டெல்லியை அடுத்து புதுவையில் தான். டில்லி மாணவி பலாத்கார சம்பவம் நடைபெற்ற போது  அங்கே அனைத்து கட்சி தலைவர்களும் அம்மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர், மாறாக புதுவையில் நடந்ததோ நேர்மறையான நிகழ்வு. மாணவர்கள்,அரசியல் கட்சிகளின்  பலகட்ட போராட்டத்திற்கு பிறகு தான் இரண்டு அமைச்சர்கள் அம்மாணவியை சந்தித்து ஆறுதல் கூறினர்.

பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில் கல்வித்துறை அதிரடி நடவடிக்கை என கூறி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போல புதுவை கல்வி அமைச்சர் தியாகராஜன்  சட்டத்தை கடுமையாக்குவது குறித்து ஆலோசிக்காமல்  "பாதிப்புக்குள்ளாகும் பெண்களையே குற்றவாளிகள் ஆக்குகிற வகையில் "   பள்ளி மாணவிகள்  ஓவர் கோட் அணிவிக்க வேண்டும் ,ஆண்கள் /பெண்களுக்கு தனித்தனி பேருந்து விடப்படும்  என பிற்போக்குத்தனமான கருத்துக்களை கூறியது  கல்வியாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கல்வி அமைச்சர் கூறுவதை போல் அப்படியே பெண்கள் ஓவர் கோட் அணிந்து சென்ற பிறகும் இதுபோன்ற பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்தால்? என்ன செய்வார்கள் இவர்கள், பெண்களை முக்காடு அணிந்து செல்ல சொல்வார்களா? இல்லை தலிபான் தீவிரவாதிகள் போல் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல தடை விதிப்பார்களா ?உச்ச நீதி மன்ற வழிகாட்டல் படி நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிலையங்களில் ஆண், பெண் பாலியல் சமுத்துவத்தை வளர்க்கும் நிகழ்சிகளை நடத்துவதற்கு முயற்சிகளை எடுக்காமல், இருபாலர் பள்ளிகளை அதிகரிக்க வேண்டிய இன்றைய உலகமய சூழ்நிலையில் கடந்த பத்து ஆண்டுகளாக புதுச்சேரி முழுவதிலும் ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து படித்து வந்த பள்ளிகளை கொஞ்சம் கொஞ்சமாக கல்வியின் தரத்தை உயர்த்துவதாக நினைத்து ஆண்கள் பள்ளியாகவும், பெண்கள் பள்ளியாகவும் மாற்றியதை கைவிட்டு, கல்விநிலையங்களில் சகோதரத்துவத்தை, ஆண்/பெண் பாலின சமத்துவத்தை வளர்க்கும் விதமாக இருபாலர் பள்ளிகளை துவங்க வலியுறுத்தி தொடர்ந்து போராடுவோம் ஆண்/பெண் பாலியல் சமத்துவத்தை நிலைநிறுத்த என்றும் மாணவர்களுக்காக குரல் கொடுக்கும் இந்திய மாணவர் சங்கத்தோடு  இணைந்து மாணவிகளுக்காக கரம் கோர்ப்போம்..! குரல் கொடுப்போம்..!
                                                                                                     நன்றி: SFIன் புதிய பாதை..!

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com