Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Wednesday, 30 January 2013

உள்நோக்க அரசியலுக்காக கமல் படத்திற்கு தடை?

0 comments
கருத்துச்சுதந்திரத்திற்கு தடை விதிப்பதா ? 

கருத்துச் சுதந்திரத்திற்காகவும் கலை வெளிப்பாட்டு உரிமைக்காகவும் எப்போதும் நிற்கிற SFI கமல்ஹாசனின் விஸவரூபம் படத்திற்கு அரசு தடையாணை பிறப்பித்திருப்பதை உறுதியாக எதிர்க்கிறது. உயர்நீதிமன்றம் அந்தத் தடை தொடர்வதற்கு அனுமதித்துத் தீர்ப்பளித்திருப்பது குறித்து தனது கவலையையும் இந்திய மாணவர் சங்கம்  தெரிவித்துக்கொள்கிறது.


கலை இலக்கியவாதிகளின் படைப்புச் சுதந்திரத்திற்காகக் குரல்கொடுக்கிற எஸ்.எப்.ஐ, அதே நேரத்தில் அவர்களது சமூகப் பொறுப்பையும் உயர்த்திப்பிடிக்கிறது. கருத்து சுதந்திரமும் கலைஞனின் பொறுப்புணர்வும் ஒரு நானயத்தின் இரு பக்கங்கள்.இக்கண்ணோட்டத்துடன் விஸ்வரூபம் படம் தொடர்பாக எழுந்த பிரச்சனைகளை எமது சங்கம் உன்னிப்பாகக் கவனித்து வந்திருக்கிறது. படம் தொடர்பான நிகழ்ச்சிப்போக்குகள் ஆரோக்கியமற்ற திசையில் போவது ஆழ்ந்த கவலையை அளிப்பதாக இருக்கிறது.

இந்தத் திரைப்படத்தை மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்கள் முன்கூட்டியே பார்ப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. சில இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அவர்கள் படத்தில் தங்களது எதிர்ப்புக்குரிய காட்சிகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

தற்போது கமல்ஹாசன் படத்தில் சில காட்சிகளை நீக்க ஒப்புக்கொண்டிருப்பதாக வந்துள்ள தகவல் வரவேற்கத்தக்கது. கமல்ஹாசன் இந்த முடிவுக்கு வந்திருப்பதை இஸ்லாமிய அமைப்புகள் பரிசீலிக்க வேண்டும். அரசும் தனது பிடிவாதமான உடும்புப்பிடி நிலையைக் கைவிட வேண்டும் என்றும் சங்கம் கருதுகிறது. இத்தகைய போக்கு தொடர்வது, எதிர்காலத்தில் அரசியல் - சமூக விமர்சனங்கள் உள்பட எப்படிப்பட்ட கருத்துகளையும் கலை ஆக்கங்களில் சொல்ல இயலாது என்ற நிலைமையை ஏற்படுத்தும் என்றும் SFI அஞ்சுகிறது.

இதனிடையே, புதனன்று காலையில் படம் திரையிடப்பட்ட அரங்குகளில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வந்துள்ளன. ரசிகர்கள் விரட்டப்பட்டதாகவும், அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பரங்கள் கிழிக்கப்பட்டதாகவும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வழக்கு முடிவுறாத நிலையில், ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடையாணையை நியாயப்படுத்துவதற்காக இப்படிப்பட்ட தாக்குதல்கள் திட்டமிட்டு உள்நோக்க அரசியல் காரணமாக தொடுக்கப்படுகிறதோ என்ற கருத்தும் நிலவுகிறது.

ஆகவே, ஒரு கலைப்படத்தின் நிறைகுறைகளை மக்கள் தாங்களே பார்த்து முடிவு செய்வதற்கான உரிமையைப் பறிப்பது போன்ற இந்தத் தடையாணையை இனியும் நீட்டிக்காமல் விலக்கிக்கொள்ள வேண்டும், மாநிலம் முழுவதும் ரசிகர்கள் அச்சமின்றிப் படம்பார்க்கிற வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று அரசை இந்திய மாணவர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com