Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Tuesday, 30 October 2012

யார் இந்த மலாலா - நாங்களும் மலாலா தான்..?

1 comments

மலாலா யூசுப்சாய் புகைப்படம் ஒன்றை அண்மையில் பார்த்தேன். எனது இளமைக்காலத்தை நினைவுபடுத்தியது அவரது முகம். என்ன வியப்பு என்றால் எனது தோழிகள் பலரும் அவ்வண்ணமே உணர்ந்தது தான். ஓரளவு நெருக்கமாகத் தென்பட்ட உருவ ஒற்றுமை மட்டிலுமே காரண மல்ல, நாங்களும் மலாலா என்று கருதிக் கொண்டதற்கு. அந்த வலிகள் தான் நாங்களும் மலாலா என்று உணர்ந்ததற்குக் காரணம்.மலாலா யூசுப்சாய் ஒரு 14 வயது சிறுமி. பாகிஸ்தானில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் கல்வி பயில்பவர். எங்களது இளமைக் காலத்தில் பெரும்பான்மையான பெண் குழந்தைகளைப் போலவும், தற்போது எங்களது பிள்ளைகளைப் போலவும், அவளும் பள்ளிக்குச் சென்று படிக்கும் ஒரு குழந்தை. அது ஒரு சாதாரண குற்றமல்ல. அதைவிடவும் அவள் இழைத்த இன்னும் பெரிய குற்றம் என்னவெனில், தனது வயதையொத்த மற்ற பெண் குழந்தைகளையும் அவள் படிக் கத் தூண்டியது தான். குற்றங்கள் புரிந்தோர் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. அதுவும், மத அடிப்படைவாதிகள் வாழும் பூமியில் நடக்குமா? எனவே அவள் தண் டிக்கப்பட்டாள். சுடப்பட்டாள். அவளோடு சேர்ந்து வேறு இரண்டு சிறுமிகளுக்கும் படுகாயம். மலாலா இப்போது தனது உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள்.ஆஃப்கானிஸ்தானில், இப்போது அதிகமாக பாகிஸ்தானிலும், பெண்கள் கல்வி பெறுவது மிகவும் அரிதாகி வருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதி வேலைகளின் தயவில், தலிபான் மற்றும் இதர அடிப்படைவாத சக்திகள் புற்றீசல் போல் வேகமாக வளர்ந்துவிட்டதில் பெண் கல்வி என் பது ஒரு ஜீவ மரண போராட்டமாகிப் போனது. மிரட்டல்களுக்குப் பணியாத பெண்கள் மிகக்கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். அமிலம் வீசி முகங்கள் சிதைக்கப்பட்டன; பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்; சிலர் கொல்லப்பட்டனர். அவர்களது குடும்பத்தார் பெரும் தொல்லைகளுக்கு ஆட்படுத்தப்பட்டனர்.

இவை எல்லாம் வீடியோ எடுக்கப் பட்டு "செய்தி" பரப்பப்பட்டது. பாகிஸ்தானில் பயங்கரவாதத்தின் ஆளுகையும், வன்முறையும் பரவி வருவதன் பின்னணியில் இத்தகைய நடப்புகள் தொடர் நிகழ்வுகளாகி வருகின்றன. கொடுமைக்கு உள்ளாகியுள்ள முதல் பெண் அல்ல மலாலா, கடைசி பெண்ணுமல்ல! தங்களது செய்கைகளை நியாயப்படுத்த அடிப்படைவாதிகள் மதத்தையும், மத நூல்களையும் தவறாகப் பயன்படுத்துகின்றனர். இத்தகைய போக்கு ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது சமூகத்தோடு மட்டும் தொடர்புடையது அல்ல. பெண் கல்வி என்பது எப்போதும் சவாலான ஒரு விஷயம் தான். இந்தியாவில் நாம் அறியாததா? பழங்காலத்தைச் சொல்லவில்லை, அப்போது சூத்திரர்களோடு பெண்களுக்கும் (பஞ்சமர்களுக்கும் சேர்த்து), கல்வியை விடுங்கள், வேதங்களைக்காதால் கூடக் கேட்பதற்குத் தடை இருந்தது. பெண்கள் போராடினர். அப்போதே ஒரு கார்க்கி இருந்தார். கடந்த நூற்றாண்டில் சாவித்ரிபாய் ஃபுலே இருந்தார். இன்றோ, நமக்கு பெயர் தெரியாத எத்தனையோ போராளிகள் இருக்கின்றனர். ஒரிசாவைச் சேர்ந்த அந்த தலித் பெண்ணை நினைவிருக்கிறதா, ஒரு பெண், அதிலும் ஒரு தலித் பெண், படிக்கக் கூடா தென தனது கிராமத்தைச் சார்ந்த உயர்சாதியினரால் அனுமதி மறுக்கப்பட்ட பெண். அவள் இந்தத் தடையை எதிர்த்தாள்; போராடினாள். கடைசியில், காவல்துறையின் பாதுகாவலோடு அவள் தனது படிப்பைத் தொடரமாநில அரசு ஏற்பாடு செய்யுமாறு நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. பள்ளிக்கு அவள் சைக்கிளில் செல்லும் போது, கூடவே இரண்டு காவல்துறையினரும் தமது சைக்கிளில் அவளுக்குக் காவலாக உடன் செல்லும் காட்சி பரவசம் ஊட்டியது. அதே நேரத்தில், இப்படியான நிலை நீடிக்கிறதே என்பதையும் அது எடுத்துக் காட்டியது.ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு பெண், மிகவும் புத்திசாலி மாணவி இருந்தாள். அப்போது அவள் பத்தாம் வகுப்பு படித்துக் கொண் டிருந்தாள். தேர்வுக் கட்டணம் செலுத்த அவ ளுக்குக் கொஞ்சம் பணம் தேவைப்பட்டது. அவளது தாய் வீட்டு வேலைகள் செய்து வந்த பெண்மணி. தனது பெண்ணுக்குத் தேவைப்படும் அந்தத் தொகை அவளது சக்திக்கு அப்பாற்பட்டதாயிருந்தது. நகரம் முழுக்க அலைந்து பணத்தைத் திரட்டிவிட லாம் என்று நினைத்து அந்த மாணவி அலைந்ததுதான் மிச்சம், ஒன்றும் கைகூடவில்லை. தனது அத்தை தனக்கு உதவக்கூடும் என எண்ணினாள். முப்பது கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றாள், நிராசையோடு திரும்பினாள். அடுத்த நாள், நம்மையும் நிலைகுலையச் செய்துவிட்டுச் சென்று விட்டாள் வெறும் நூறு ரூபாய் தான் அவளுக்குத் தேவைப்பட்டது. அதற்கு விலையாகத் தன்னுயிரையே கொடுத்துவிட்டாள் அந்த பேதைப் பெண்.கேரளத்தின் அந்த இரண்டு பெண் களைப் பற்றி நாம் அறிவோம். அவர்கள் பக்கம் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது. பிளஸ்- 2 தேர்ச்சி பெற்றனர் இருவரும். பொறியியல் கல்லூரியில் சேர்ந்தனர். சும்மா இருப்பவர்களை எல்லாம் அழைத்து கார் வாங்கக் கடன் தருகிறேன், வாருங்கள் என்று நச்சரிக்கும் வங்கிகள், இந்தப் பெண்களுக்கு கல்விக் கடன் வழங்க மறுத்துவிட்டன. கடனுக்காக அடமானம் வைக்க சொத்து பத்து இருக்கிறதா என்று கேட்டன வங்கிகள். அந்தப் பெண்களிடம் அப்படி எந்த சொத்தும் கிடையாது. அவர்களால் வழங்க முடிந்த ஒரே விஷயம் அவர்களது உயிர் தான். அதைக் கொடுத்தனர், அடுக்குமனைக் குடியிருப்புகளின் உச்சியிலிருந்து கீழே குதித்துவிட்டனர். இங்கிலாந்து நாட்டில், டோனி பிளேர் பிரதமராக ஆகிறவரை, கல்வி என்பது இலவசமாகத் தான் இருந்தது. புதிய தொழிலாளர் கட்சியின் பிரதிநிதியான அவர் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டார்.

அது மக்களுக்கு மிகப்பெரிய அடியாக வந்து விழுந்தது. எவ்வளவு அதிகம் என்றால், பெண்கள் நடனம் ஆடிப் பொருள் ஈட்ட முனைந்தனர். பள்ளி கட்டணத்திற்கான அளவு பவுண்ட் (பணம்) சேர்க்க கம்பு நடனம், ஆடை அவிழ்ப்பு நடனம் என தங்களது மனசாட்சியின் குரலுக்கு எதிராக ஆடி னர். வேறு சிலர் பள்ளிக் கல்விக்காகத் தங்களது சினை முட்டைகளைக் கூட விற்றனர். பெண்கள் சந்திக்க வேண்டியது இந்தக் கொடுமைகள் மட்டும் தான் என்றில்லை. இத்தகைய பெண்கள் எல்லோருமே மலாலாக்கள் தான். பாலியல் தொல்லைகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருப்போர் உள்ளனர். பாலியல் தொல்லைகள் என்பது, ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கதையில் பணவீக்கத்தின் அளவைக் கூட விஞ்சுவதாகும். ஆனால் நமது அரசியல் தலைவர்களில் சிலர் என்ன பேசுகிறோம் என்பது குறித்த எச்சரிக்கை கூட இல்லாத அளவுக்குப் பேசும் திமிரோடு கருத்துக்களை முன்வைக்கின்றனர். பரிவர்த்தனை (மாற்றம்) குறித்து அனல் பறக்க பேசிக் கொண்டிருக்கும் ஒரு பெண் தலைவர் (மம்தாபானர்ஜி), பையன்களும் பெண்களும் சுதந்திரமாகக் கலந்து பழகும் இன்றைய போக்கு தான் இதற்கெல்லாம் காரணம் என்று சொல்கிறார். நூடுல்ஸ் சாப்பிடுவதால் தான் இப்படி எல்லாம் நடக்கிறது என்கிறார் அவரது சகோதரர் ஒருவர். அடுத்து ஒருவர், தாம் பின் தங்கி விடக் கூடாது என்று முந்திக்கொண்டு, பெண் களை மிக இளம் வயதிலேயே கல்யாணம் கட்டிக் கொடுத்துவிடுவது நல்லது என்று ஆலோசனை சொல்கிறார். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இழைக்கப்பட்டதற்கும், இப்போது இழைக்கப்படுவதற்கும் பெண்களே காரணம் என்ற கருத்தை முன் வைப்பதில் இவர்களுக்குள் எத்தனை கருத்து ஒற்றுமை! பெண்கள் அணிந்து கொள்ளும் உடை ஆகட்டும், அவர்களது பழகும் தன்மை ஆகட்டும், இதெல்லாம் தான் காரணம் என்பது அவர்களது பார்வை. கைக்குழந்தை முதல், எண்பது வயதைக் கடந்த மூதாட்டிகள் வரை பாலியல் பலாத் காரத்திற்குத் தப்புவதில்லை என்பது இவர்கள் கண்ணில் எல்லாம் படவில்லையா, அல்லது கண் அவிந்து போயிற்றா? பழியைப் பெண்கள் மீது போடு. முடியுமானால் அவர்கள் பிறக்கும் முன்பாகவே கூட அவர்களைக் கொன்றுவிடு. பாதிக்கப்பட்டவர்களுக்கே தண்டனையை வழங்கு. குற்றவாளிகளைத் தப்ப விடு.பேருந்துகள், பாதாள ரயில், ரயில், ஆட்டோ பயணங்களில், நடந்து போகையில், நிற்கையில், வகுப்பறைகளில், பணியிடங்களில், ஏன், வீடுகளில், எங்காவது ஒரு இடத்தில் பாதுகாப்பு உண்டா பெண்களுக்கு? கருவறைக்குள்ளும் கிடையாது, வெளியுலகத்திலும் கிடையாது! இந்த ஆணாதிக்க சமூகம் சிறுமிகளுக்கும், பெண் களுக்கும் பாதுகாப்பாக விட்டு வைத்திருக்கும் ஒரே இடம் - கல்லறை! நாங்கள் எல்லோருமே மலாலாக்கள் தான்!இந்தத் தடைகளை எல்லாம் சமாளித்துக் கொண்டு தான் பெண்கள் படிப்பைத் தேடி வெளியே வருவது. அவர்களது போராட்டம், சாதி, மதம் உள்ளிட்ட அனைத்து விதமான அடிப்படைவாதங்களுக்கும் எதிரா னது. அடிப்படைவாதிகள் ஏகாதிபத்தியத் திற்கு சாதகமாயிருப்பது போலவே, ஏகாதிபத்தியமும் அடிப்படைவாதத்திற்கு ஒத்திசைவாயிருக்கிறது.

இரண்டுமே வேலை யில்லாத் திண்டாட்டம், வறுமை மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைத் தமக்கு சாதகமாக்கிக் கொள்கின்றன. அந்தக் கொடுமைகளை எதிர்த்து முறியடிப்பதன் மூலமே எல்லோருக்குமான ஓர் சமதையான வாழிடமாக இந்த உலகத்தை நாம் உருவாக்க முடியும். மலாலா இந்தப் போராட்டத்தில் ஒரு முன்னுதாரணம். அவள் அடிப்படைவாதிகளுக்கு எதிராகப் போராடப் புறப்பட்டவள். இப்போது தனது உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறாள். மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சையும், வசதிகளும் மலாலாவின் உயிரைக் காக்க உதவக்கூடும். ஆனால், அவள் கனவுகண்ட ஒரு சமூ கத்தை நாம் எப்படி சமைக்க முடியும்? அதுவும் ஓர் அவசர சிகிச்சை தேவைப்படும் விஷயம் தான். நீங்களும் வந்து சேருங்கள். சமூகம் என்கிற அந்த நோயாளியை உடனே ஆபரேஷன் தியேட்டருக்குள் கொண்டு சேருங்கள். அறுவை சிகிச்சையை மேற் கொள்ளுங்கள்; அடிப்படை மாற்றத்தை உறுதி செய்யுங்கள். நாம் தான் மருத்துவர்கள், நாமே செவிலியர்கள். நாமே மலாலாக்கள். இந்தப் புற்று நோயை மருந்துகள் கொண்டும், அறுவைக் கத்தி கொண்டும் நம்மால் குணப்படுத்தி விட முடியும்.

நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசிதமிழில்: எஸ்.வி.வேணுகோபாலன்...

One Response so far.

  1. arumai enadhu thozhare.... nanum sfi in oozhiyardhan.... naan vollorei saarndhavan....

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com