Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Saturday, 29 September 2012

சாட்டை திரைப்படம் ஒரு பார்வை..!

1 comments
சாட்டை திரைப்படம் ஆசிரியர்-மாணவர் உறவு நிலை குறித்து மறு ஆய்வு செய்யப்படவேண்டிய தருணம் இது..! 
சாட்டை சமூகத்தில் அரசு பள்ளிகளின் இன்றைய நிலை, ஆசிரியர்கள் கற்பித்தல் முறை குறித்தும் , வகுப்பறை என்பது ஒரு வழிசாலையாக இருப்பதை டைரக்டர் அன்பழகன் தெளிவாக சுட்டி காண்பித்து இருக்கிறார். திருவண்ணாமலை அருகே வந்தாரங்குடி என்ற கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி, இப்பள்ளிக்கு ஆசிரியராக புதிதாக பணியாற்ற வரும் தயா என்ற பெயரில் நடித்திருக்கும் சமுத்திரகனி வருகிறார். வகுப்பறையில் மதிப்பெண் அடிப்படையில் அமர்ந்திருக்கும் மாணவர்களை அவர்கள் விருப்பம் போல் அமரச்சொல்லுவதில் ஆரம்பித்து தினமும் பதினைந்து நிமிடம் தோப்பு கரணம் போட்டால் தூங்கும் மூளை சுறுசுரப்பாக இயங்கும் என்பதில் அராம்பித்து, வகுப்பறையில் பாடம் நடத்தாமல் வட்டி  கணக்கை பார்த்துகொண்டு இருக்கும் தம்பி ராமையா அதனை தட்டி கேட்கும் ஆசிரியர்  தயாவை வகுப்பறையல் மாணவர்கள் மத்தியில் தவறாக பேசுவதும் என காட்சிகளிலும் வசனங்களிலும் மிரட்டி இருக்கிறார் சமுத்திரக்கனி.

வகுப்பறை  ஜனநாயகம் மேம்படுத்த:

வகுப்பறையில் புகார் பெட்டி வைத்து உன்னுடைய ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என நீ நினைக்கிறாய்? என மாணவர்களே புகார் பெட்டியில் தாங்கள் விரும்பும் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என கூறுவது பேராசிரியர்: நா. மணி தன்னுடைய முதல் நாள் வகுப்பில் நீ விரும்பும் ஆசிரியர்..? என்ற தலைப்பில் எழுத கூறிய போது ஒவ்வொரு மாணவனும் தன்னுடைய பள்ளியில் உள்ள உடற்பயிற்சி ஆசிரியர் தங்கள் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவதற்காக செய்த உதவி என, தான் செய்த தவறை திருத்திய ஆசிரியர் என ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் தனக்கு வரபோகும் ஆசிரியர் குறித்த எதிர்பார்புகளை கோர்வையாக்கி அக்கடிதங்களை தொகுப்பாக பள்ளி கூட தேர்தல் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

வகுப்பறை ஜனநாயகம் குறித்து இன்றைய ஆசிரியர்கள் கவலைபடுவதில்லை என்பதை நையாண்டியாக குறிப்பிடுவதும், சாக்ரடிஸ், ஐன்ஸ்டீன் போன்ற உலக அறிஞர்களை பற்றி பேசுவதும், ஆசிரியர்கள் மீடிங்கில் தம்பி ராமையா ஆசிரியர் தயா மீது அடுக்கடுக்கான புகார்கள் கூறுவதும் பதிலுக்கு சமுத்திரகனி இந்த பள்ளியில் நடக்கும் தவறுகளுக்காக இங்கு வேலை செய்யும் ஒவ்வொரு ஆசிரியர் மீதும் நான் புகார் கூறுவேன். நீங்கள் கூறும் புகார்கள் என்னை ஒன்றும் செய்யாது ஆனால் நான் குடுக்கும் புகாருக்கு விசாரணை மாணவர்களிடம் போகும் அதையும் மீறி புகார் தர வேண்டும் என்றால் பள்ளியின் எச்.எம். உங்க மீதும் புகார் கொடுப்பேன் என கூறுவது, மாணவர்கள் புகார் பெட்டியில் எழுதி போட்ட கடிதங்களை படிக்க சொல்லி வீசிவிட்டு ஆசிரியர்கள் மீடிங்கில் இருந்து வகுப்பிற்கு பாடம் நடத்த நேரம் ஆகிடுச்சு நான் கெளம்புகிறேன் என்று கூறி வெளியேறுவது ஒரு பொறுப்பான ஆசிரியருக்குரிய கடமையை சரி வர செய்ய மறுக்கும் ஆசிரியர்கள் மீட்டிங் என்றால் வெட்டிக்கதை பேசுவதும் அதில் கொடுக்கும் நொறுக்கு தீனி தின்னுவிட்டு வரும் ஆசிரியர்களுக்கு பலத்த அடி.

வகுப்பறைகளில் மாணவிகளுக்கு ஏற்படும் தொந்தரவுகள் :

செய்முறை தேர்வை காட்டி ஒரு சில வக்கிர புத்தியுடைய ஆசிரியர்கள் மாணவிகள் மீது தொடுக்கும் பாலியல் தொந்தரவு உட்பட அதனை அணுகும் முறை, அவசர அவசரமாக தம்பி ராமையா ஆசிரியர் தயாவை தன்னுடைய ஊர் மக்களை கொண்டு பள்ளியில் இருந்து அடித்து வெளியேற்ற நினைப்பது என அனைத்திலும் இயக்குனர் அன்பழகன் உழைப்பு  மற்றும் சமுத்திரக்கனி நடிப்பு வெளிப்பட்டிருகிறது. அதே போல் ஒவ்வொரு மாணவனின் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டிய முக்கியத்துவம் குறித்தும் சாட்டை சுழற்றப்பட்டுள்ளது. அதே போல் பள்ளியில் உள்ள பொருட்களை ஊர் மக்கள் தங்கள் வீட்டு விஷேசத்துக்கு எடுத்து செல்ல இனி அனுமதிக்க முடியாது என கூறுவது நமக்கு என் வம்பு என ஒதுங்கிக்கொள்ளும் ஆசிரியர்கள் மத்தியில் ஒரு பொறுப்பான ஆசிரியருகுடைய கடைமையை சரி வர செய்யவேண்டும் என்பதை உணர்த்துகிறது.

பள்ளியில் உள்ள ஆசிர்யர்களை ஒருங்கிணைக்க..!

ஒரு சிறந்த பள்ளியை உருவாக்க முதலில் ஆசிரியர்களின் ஒன்றுபட்ட கூட்டு செயல்பாட்டை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆசிரியர் தயா ரோட்டரி கிளப் மூலம்  மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்யும் போதும்  அதில் நாயகன் பழனியை பள்ளியின் மாணவர் தலைவராக நியமிக்க  முற்படும் போதும் பலத்த எதிர்ப்புகள்  கிளம்புகிறது. ஆசிரியர் தயா நாயகன் பழனியை தேர்வு செய்தது அவனுக்குள் உள்ள திறமையை அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் அவன் அப்பாவே புரிந்து கொள்ளாத போது தயா வைத்த நம்பிக்கையினால் தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளி  மாணவர்களாலும் போட்டிகளில் வெற்றி  முடியும் அதற்க்கான வாய்ப்புகளை மட்டும் உருவாக்கிகொடுத்தால் போதும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. ஒரு சிறந்த பள்ளியை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு எவ்வளவு உள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதுடன்  அரசு பள்ளி மாணவர்களாலும்  சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உண்டாக்க வேண்டும்.

அடுத்த இலக்கை நோக்கிய பயணம்:

ஒரே பள்ளியில் 10 ஆண்டுகள் வேலை செய்வதை பெருமையாக கருதும் ஆசிரியர்களுக்கு மத்தியில் ஒரு ஆசிரியரின் கடமை கல்வி அறிவு அல்லாத கிராமப்புற மாணவர்களுக்காகவும்,  ஏழ்மையான குடும்பத்தில் இருந்து அரசு பள்ளிகளில் படிக்க வரும் மாணவர்களுக்காக அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அர்பணிக்க வேண்டும் என்ற உணர்வை அரசு பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் விதைக்கிறது.இறுதியாக  ஆசிரியர் தயாவின்  செயல்கள் அனைத்து ஆசிரியர்களையும் அர்பணிப்பு உணர்வோடு பணி செய்ய தூண்டுகிறது. உண்மையில் புரட்சியாளன் என்பவன் ஒரு சிறு வட்டத்தில் அடைந்து விடாமல் தன்னுடைய அடுத்த தேடலுக்கான பயணத்தை நோக்கி பயணிக்கச்செய்கிறது. மாணவர்களை சிறு வட்டத்தில் புதைந்து விடாமல் தன்னுடைய இலக்கை குன்றின் மீது வைக்காதே, இலக்கை வானத்தின் மீது 'வை ' என தேடலுக்கான பயணத்தை சிகரத்தை நோக்கி வையுங்கள் என்று "சாட்டை" சுழற்றப்பட்டுள்ளது.யாருக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்குவது?

இன்றைக்கு மத்திய, மாநில அரசுகள் அரசு பள்ளி, கல்லூரிகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக விருதுகள் வழங்கப்படுகிறது. பெரும்பாலான விருதுகள் அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்களால் மட்டுமே பெறப்படுகிறது. ஆனால் யார் சிறந்த ஆசிரியர் என்பதை யார் முடிவு செய்ய வேண்டும்? ஆசிரியர் யாருக்கு பாடம் நடத்துகிறாரோ ( மாணவர்கள் ) அவர்களிடம் நாம் கேட்கிறோமா என்பது ? அவர்கள் தீர்மானிப்பார்கள் யார் சிறந்த ஆசிரியர் என்று? ஒரே பள்ளியில் பத்து, இருபது என வருடக்கணக்கில் வேலை செய்வது முக்கியமல்ல? நாம் பணியாற்றிய காலத்தில் எத்தனை மாணவர்களை சிறந்த ஆசிரியராக, விஞ்ஞானியாக, கிராமபுரங்களில் பணியாற்றும் அல்லது நகர்புறத்தில் சேவை செய்யும் மருத்துவராக, உருவாக்கியிருக்கிறோம்.விடுதலை அடைந்து 63 ஆண்டுகள் கழிந்த பிறகும்  இன்னும் இந்நாட்டில் 40 கோடி மக்கள் எழுத படிக்க தெரியாதவர்கள், நாட்டு மக்கள் தொகையில் இன்னுமும் 70% பேர் நாள் ஒன்றுக்கு 20/-ரூபாய்  கூட செலவு செய்ய முடியாமல் வறுமையில் வாழ்ந்து கொண்டிருகிறார்கள். இப்படி ஏற்றத்தாழ்வு மிகுந்த சமுதாயத்தில் அரசு பள்ளி, கல்லூரிகளை பாதுக்காக மட்டுமின்றி அரசு கல்வி நிலையங்களில்  பயிலும் மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றவும், கல்வித்தரத்தை மேம்படுத்த ஆசிரிய - மாணவ உறவுநிலையை வலுப்படுத்த கரம்கோர்ப்போம்.
                                                                                                  கட்டுரையாளர் : ஆனந்த்,
                                                      இந்திய மாணவர் சங்கம் - புதுச்சேரி பிரதேச குழு.

One Response so far.

  1. vasdev says:

    இவ்வளவும் சரியே ..ஆனால் இன்னொரு பக்கமும் இருப்பதாக எனக்குப்படுகிறது.அமச்சர்கள் ,அதிகாரிகள் .பொதுமக்கள் எல்லோரும் அரசுப்பள்ளிகள் தரமற்றவை .அதற்குக்காரணம் ஆசிரியர்கள்..அவர்கள் மோசமானவர்கள் என்று தொடர்ந்து ஆசிரியர்களை குற்றவாளிகள் என பிச்சாரம் செய்கிறார்கள். இப்படத்தில் அதனையே ஒரு ஆசிரியரைக்கொண்டு செய்கிறார்கள். எது தரமான கல்வி ?அதை தீர்மானிக்க ஆசிரியர்களுக்கு இருக்கும் சுதந்திரம் எவ்வளவு ?பள்ளி மோசமாக இருப்பதற்கு ஆசிரியர்கள் மட்டும்தான் காரணமா ? தனியார் மயம் போன்றவை அரசுப்பள்ளிகள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் என்ன?என்பவையும் விவாதிக்கப்பட வேண்டும்.மக்கள் மத்தியில் தங்கள் பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேசவில்லை இஞ்சினியர் ஆகமுடியாது டாக்டர் ஆகமுடியாது அதற்குக்கரணம் எராளமாக சம்பளம் வாங்கும் வாத்திங்கதான் என்பதாக உள்ளகோபத்தை பயன்படுத்திக்கொள்ள எடுக்கப்பட்ட படம்போலவும் தோன்றுகிறது

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com