Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Monday, 14 May 2012

நாடாளுமன்ற 60ம்ஆண்டு விழா - சமத்துவ இந்தியா மலரட்டும்!

0 comments
சமத்துவ இந்தியா மலரட்டும்! - நாடாளுமன்ற 60ம்ஆண்டு விழாவில் 
சீத்தாராம் யெச்சூரி முழக்கம்
ஒளிரும் இந்தியாவுக்கும் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முரண்பாட்டை - சமத்துவமின்மையை - ஏற்றத்தாழ்வை ஒழித்து சிறந்ததோர் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பொறுப்பினை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி வேண்டுகோள் விடுத்தார்.
அதைச்செய்ய மறுத்தால், சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் கூறியது போல, சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்தியாவின் அரசியல் ஜனநாயக கட்டமைப்பையே தகர்த்துவிடுவார்கள் என்றும் சீத்தாராம் யெச்சூரி எச்சரித்தார்.


சுதந்திர இந்தியாவின் ஜனநாயகக் காவலனாக உயர்ந்து நிற்கும் மேன்மைமிகு நாடாளுமன்றத்தின் அறுபதாம் ஆண்டு துவக்கவிழா ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்பட்டது. அதனை யொட்டி நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:

நாடாளுமன்றத்தின் அறுபதாம் ஆண்டு பிறந்தநாளை நாடே சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. சஷ்டியப்த பூர்த்தி என்றால் புதிய வாழ்க்கைத் துவங்குவதாக முன்னோர்கள் நம்பினார்கள். ஆயினும் அது ‘சிறந்ததோர் வாழ்க்கை’யாக இருக்கும் என்று அவர்கள் கூறவில்லை. ஆயினும் நாடாளுமன்ற மக்களவையையும் மாநிலங்களவையையும், நம் ஜனநாயக அமைப்பு முறையையும் எதிர்காலத்தில் சிறந்ததொன்றாக மாற்றுவது நமது கடமையாகும். இதற்குக் குறைந்தபட்சம் நான்கு அம்சங்களை நாம் பரிசீலிப்பது அவசியமாகும்.


நமது நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து பிரிட்டன் பிரதமராக இருந்த சர் அந்தோணி ஈடன் மிகவும் புகழ்ந்து கூறிய வாசகங்களை நினைவுகூர விரும்புகிறேன். ‘‘இந்தியாவில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் மிகவும் கிளர்ச்சியூட்டக்கூடிய விதத்திலும், உற்சாகமளிக்கக்கூடிய விதத்திலும் அமைந்திருக்கின்றன. அவர்கள் நம்முடைய நடைமுறையை அப்படியே கண்மூடித்தனமாகப் பின்பற்றவில்லை. மாறாக, அவர்கள் நாம் கனவிலும் கருதமுடியாத அளவிற்கு பன்மடங்கு சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்
றனர்’’ என்று கூறினார். உண்மைதான். கடந்த அறுபதாண்டுகளில், நாம் இதன் உள்ளடக்கத்தை செறிவூட்டியிருக்கிறோம். உள்நாட்டு அவசரநிலைப் பிரகடனம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு போன்ற சவால்களையும் எதிர்கொண்டு முன்னேறியிருக்கிறோம்.

100 நாட்கள் கூடுவது அவசியம் :


நம் அரசமைப்புச் சட்டத்தின் மையக்கருத்து, நம் மக்களின் இறையாண்மையையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இது நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.ஆட்சியாளர்கள் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் பதில் கூறக் கடமைப்பட்டவர்கள். நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் மக்களுக்குப் பதில் கூறக் கடமைப் பட்டவைகளாகும்.நாடாளுமன்றம் முறையாக, குறிப்பிட்ட கால அளவிற்குச் செயல்படுவதன் அடிப்படையில் அதன் செயல்திறனும், பயன்பாடும் அமைந்திடும். இது தொடர்பாக இன்னும் சரியான நடவடிக்கை நமக்குத் தேவைப்படுகிறது. கடந்த இருபதாண்டுகளில், நாடாளுமன்றம் எந்தவொரு ஆண்டிலும் நூறு நாட்களுக்கு மேல் அமர்வினை நடத்தியதில்லை. 1992இல் அதிகபட்சமாக 98 நாட்கள் நடை பெற்றிருக்கிறது.
14ஆவது மக்களவை நாடாளுமன்ற நடவடிக்கை வரலாற்றிலேயே மிகவும் குறைவான அமர்வுகளைக் கொண்டதாக மாறிப்போனது. அதாவது 332 அமர்வுகள்தான் நடைபெற்றிருக்கிறது. சராசரியாக ஓராண்டிற்கு 66 அமர்வுகள் மட்டுமே. அதிலும் மோசமான விஷயம் என்னவெனில், இதிலும் 24 விழுக்காடு நேரம் குறுக்கீடுகளிலும், ஒத்திவைப்புகளிலும் வீணாய்ப் போயின.பிரிட்டிஷ் நாடாளுமன்றம் சராசரியாக ஆண்டில் 160 நாட்கள் தங்கள் அமர்வினை நடத்துகின்றன என்பதை நாம் குறித்துக்கொள்ள வேண்டும்.
நாடாளுமன்றம் அதிக நாட்களுக்கு நடைபெறாவிட்டால், அதனால் மிகவும் விழிப்புடனிருந்து அரசாங்கத்தைக் கண்காணிப்பது என்பது வலுவாக அமைந்திடாது. இதனால், ஆட்சியாளர்கள் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் பதில் சொல்ல வேண்டுமென்பது பெயரளவிலானதாக மாறிப் போகிறது. இது நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே அரித்து வீழ்த்தி, ஆட்சியாளர்களை எதேச்சதிகார அணுகுமுறையுடன் செயல்படத் தள்ளிவிடுகிறது. நாடாளுமன்ற அமர்வு ஓராண்டில் குறைந்த பட்சம் 100 நாட்களாவது இருந்திட வேண்டும் என்கிற வகையில் ஓர் அரசமைப்புச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படவேண்டும்.

நீதித்துறையின் பங்கு :

இரண்டாவது பிரச்சனை, நம் நாட்டின் நீதித்துறையின் பங்கு குறித்த தாகும். நம் அரசமைப்புச் சட்டத்தையும், நாட்டின் அனைத்துச் சட்டங்களையும் வியாக்கியானம் செய்யக்கூடிய, நாட்டு மக்களின் உரிமைகளுக்குப் பாதுகாவலனாக இருக்கக்கூடிய நீதித் துறையின் நிலை எப்படி இருக்கிறது?சென்ற அமர்வின்போது நமது நிதியமைச்சர், உயர் நீதிமன்றங்களிலும் கீழமை நீதிமன்றங்களிலும் 3.2 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், உச்சநீதிமன்றத்தில் மட்டும் 56 ஆயிரத்து 383 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறினார். 2010 டிசம்பர் மாதத்தில் 3 லட்சத்து 50 ஆயிரத்து 003 விசாரணைக் கைதிகள் விசாரணை முடியாமல் சிறையில் உழன்று கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. நீதி வழங்குவது தாமதமாவது என்பது நீதி வழங்குவதை மறுப்பதாகும் என்று கூறுவார்கள். நீதி வழங்கும் முறையானது இவ்வாறு வலிமையூட்டவேண்டிய நிலையில் இருக்கிறது.
தற்சமயம் நீதித்துறையின் செயல்பாடுகள் ஜனநாயகத்தின் மூன்று அங்கங்களுக்கும் இடையேயான வரம்புகளை மீறுகிறதோ என்கிற எண்ணத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. நீதித்துறை சட்டத்தை வியாக்கியானம் செய்யலாம். ஆனால் அது அரசின் கொள்கைகளை உருவாக்குவதோ அல்லது தீர்மானிப்பதோ கூடாது.நாட்டின் ஜனநாயகத்தின் மூன்று அங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் கலந்து ஒரு தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்க வேண்டியது குறித்து ஆழமாகப் பரிசீலிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இதன் மூலம் நீதிபதிகள் நியமனம், மாற்றல், நீதிபதிகள் மீதான ஊழல்கள் குறித்து ஆய்வு செய்தல், நீதித்துறை துர்நடத்தை குறித்து வரும் புகார்களை விசாரித்தல் மற்றும் நீதித்துறை யினரும் ஓர் அமைப்பிற்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்பதை உத்தரவாதம் செய்திட முடியும்.

விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை :

மூன்றாவதாக, நம் நாட்டின் முதிர்ந்த ஜனநாயக அமைப்பை, சில அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் மேலும் சிறப்பானதாக மாற்றுவதாகும். நாட்டின் வரலாற்றில் பொதுத் தேர்தல்கள் 1952ல் தொடங்கியது. அதிலிருந்து இதுவரை மத்தியில் அமைந்த அனைத்து அரசாங்கங்களுக்கும் ஆதரவாக வாக்களித்த மக்களைவிட, எதிராக வாக்களித்த மக்களே அதிகமாகும். இதில் அதிக அளவுக்கு மக்கள் ஆதரவுடன் அமைந்த ஆட்சி என்றால் அது ராஜீவ்காந்தி ஆட்சிதான். அதாவது 1984ல் 48.1 விழுக்காடு ஆதரவுடன் 415 இடங்களை அது கைப்பற்றியிருந்தது. மிகவும் குறைவான ஆதரவுடன் அமைந்த அரசாங்கம் 1998ல் அமைந்த தேசிய ஜன நாயகக் கூட்டணி அரசாங்கமாகும். அக்கூட்டணிக்கு 36.2 விழுக்காடு ஆதரவுதான் இருந்தது. இவ்வாறு, ஜனநாயகம் என்றால் பெரும்பான்மையினர் ஆதரவுடனான ஆட்சி என்பது இன்னமும் முழுமையான அர்த்தத்துடன் அமைந்திடவில்லை. எனவே, விகிதாச்சார பிரதிநிதித்துவ அமைப்பு முறையைக் கொண்டுவருவது குறித்து ஆழ்ந்து பரிசீலித்திட வேண்டும். இதன்படி மக்கள் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு வாக்களிப்பார்கள். அக்கட்சிகள் நாடாளுமன்றத்திற்கு தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை அளித்திடும். அக்கட்சி பெற்ற வாக்குகளின் விகிதாச்சார அடிப்படையில், முன்பே அளித்திட்ட பட்டியலில் கண்டுள்ள வரிசையின்படி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு தேர்தல் அமைப்புமுறையைக் கொண்டுவருவோமானால், வாக்காளர்களில் பெரும்பான்மையோர் வாக்களித்தபடிதான் உறுப்பினர்களின் எண்ணிக்கை அமைந்திருக்கும். அதன்படியே பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவினைப் பெற்றவர்களின் ஆட்சியும் அமைந்திடும். இந்தப் பிரச்சனை நம் அரசியல் நிர்ணயசபையிலும் மிகவும் ஆழமாக விவாதிக்கப்பட்டது. ஆயினும் அது பிரிட்டிஷ் பாணி நாடாளுமன்ற முறையை நிறைவேற்றியது.


1928ல் மோதிலால் நேரு குழு அறிக்கை விகிதாச்சார பிரதிநிதித்துவ அமைப்புமுறை தான் இந்தியாவின் பன்முகத்தன்மையை மிகவும் சிறப்பாகப் பிரதிபலித்திடும் என்று கூறி அம்முறையைப் பரிந்துரைத்திருந்தது.


இந்தியப் பின்னணியில், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும், இப்போதைய வடிவமும் இரண்டறக் கலந்து கொண்டுவருவதும் சிறந்ததாக அமையலாம். உதாரணமாக, அடுத்தடுத்த இரு தொகுதிகளுக்கு மக்களி டம் இரு வாக்குகளை (ஒன்று தாங்கள் விரும்பும் கட்சிக்கும், மற்றொன்று தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கும் செலுத்துமாறு) செய்திட முடியும்.
இந்த முறையில் உள்ள மற்றுமோர் நன்மை, தேசிய அளவில் குறைந்தபட்ச விழுக்காடு வாக்குகளைப் பெற்ற கட்சிதான் நாடாளுமன்றத்திற்குத் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பிட முடியும். தனிப்பட்ட வேட்பாளர்களும் வெற்றி பெற்று நாடாளு மன்றத்திற்குள் வரமுடியும்.
இன்றைய கூட்டணி சகாப்தத்தில், சிறிய கட்சிகளின் ஏற்றுக்கொள்ளமுடியாத நிர்ப்பந்தங்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு இந்த முறை மூலம் முற்றுப்புள்ளி வைத்திட முடியும்.

இரண்டு இந்தியாக்கள்!

இறுதியாக, கடந்த இருபதாண்டு கால பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பின் மக்களின் எதார்த்த நிலை என்ன? இருவித இந்தியர்களை - ‘ஒளிரும் இந்தியர்களை’ யும், ‘அல்லலுறும் இந்தியர்களை’யும் உருவாக்கி இருக்கிறோம். இந்தச் சூழ்நிலையில் பாபா சாகேப் அம்பேத்கர், அரசியல் நிர்ணயசபையில் அரசமைப்புச் சட்டவரைவைத் தாக்கல் செய்து கூறிய வாசகங்களை நினைவுகூர விரும்புகிறேன்.


“1950 ஜனவரி 26 அன்று முரண்பாடுகளின் வாழ்க்கைக்குள் நுழைய இருக்கிறோம். அரசியலில் நாம் சமத்துவத்தைப் பெற்றிருப்போம். ஆனால் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் நாம் சமத்துவமின்மையைப் பெற்றிருப்போம். அரசியலில், ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு மற்றும் ஒரு வாக்குக்கு ஒரு மதிப்பு என்பதை அங்கீகரித்திருப்போம். ஆனால் நம் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையில், நம் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பின் காரணமாக, ஒருமனிதனுக்கு ஒரு வாக்கு என்னும் விதியை அளித்திட மறுப்பது தொடரும்.
இத்தகைய முரண்பாடுகளுடனான வாழ்க்கையை இன்னும் எத்தனை காலத்திற்கு நீட்டிக்கப் போகிறோம்? மக்களின் சமூகப் பொருளாதார வாழ்க்கையில் சமத்துவத்தை மறுப்பதை இன்னும் எத்தனை காலத்திற்குத் தொடரப் போகிறோம்?

இவ்வாறு நாம் நீண்ட காலத்திற்கு மறுப்பது தொடருமானால், நம் அரசியல் ஜனநாயகமே பேரிடர்க்கு உள்ளாகும் நிலை உருவாகும். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இம்முரண்பாட்டை நாம் ஒழித்திட வேண்டும். இல்லையேல், சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்ட மக்கள், இந்த அரசியல் நிர்ணயசபை கடுமையாக உழைத்து உருவாக்கிய இந்த அரசியல் ஜனநாயகக் கட்டமைப்பையே தகர்த்துவிடுவார்கள்.” (1949 நவம்பர் 25)


நாடாளுமன்றம் நம் மக்கள் பொருளாதார ரீதியாகவும், அரசியல்ரீதியாகவும், சமூக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் மேம்பாடு அடையக்கூடிய விதத்தில் தேவையான சட்டங்களை இயற்றிட வேண்டும். ஒரு மனிதன், ஒரு வாக்கு, ஒரு மதிப்பு ஆகியவை ஒரு மனிதன், ஒரு வாக்காக மாற்றப்பட வேண்டும். இந்த எச்சரிக்கையை மிகவும் அக்கறையுடன் செவிமடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. தற்போது நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களாக இருக்கக்கூடிய நாம், சிறந்ததோர் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்வோம்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com