Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Tuesday, 24 April 2012

உயர்கல்வியா ? துயர்கல்வியா ?

0 comments
உயர்கல்வியா? துயர்கல்வியா
                                                           - பேரா.வ.பொன்னுராஜ் 
         மாண்புமிகு பிரதமர் மன்மோகன்சிங் அவர்களே,
         வணக்கம். உங்களைப் பற்றியும் உங்களின் சில செயல்பாடு  குறித்தும்   
இம்மடலில் எழுத இருக்கிறேன். அப்படி எழுதுவதற்கு முன்னால் நான் யாரென்று உங்களுக்குச் சொல்லவேண்டுமல்லவா?
புதிய ஆசிரியன் 
         நான், தமிழகத்தில் பணிபுரியும்  ஓர் ஆசிரியன். "எமக்குத் தொழில் கவிதை; இமைப் பொழுதும் சோராதிருத்தல்" என்று பாடி தொழில் நெறியைத் தூக்கிப்பிடித்தானே புரட்சிக் கவிஞன் பாரதி, அவன் வழி வந்த புதிய ஆசிரியன். 'யார் எதைச்  சொன்னாலும் எதைச் செய்தாலும் சொல்லுக்கும் செயலுக்கும் பின்னே ஒளிந்திருக்கும் உண்மையை புரிந்துகொள்; சொல்லும் செயலும் உண்மையில் யார் நலனுக்காக என்பதைத் தெரிந்துகொள்' என்று மாணவருக்குப் பாடம் சொல்லும் புதிய ஆசிரியன். என் சுய அறிமுகம் இத்தோடு நிற்கட்டும். இம்மடலின் நோக்கத்திற்கு வருகிறேன். 
உலக வங்கியின் ஒய்வு பெற்ற அதிகாரி 
     உங்களுக்கு வணக்கம் சொன்ன எனக்கு வாழ்த்து சொல்ல மனம் வரவில்லை. உங்களை மிகப்பெரிய பொருளாதார மேதை என்று  மேலை நாடுகள் சொல்கின்றன; நாணயம் மிக்கவர்  என்று நம் நாடு போற்றுகின்றது; நம்பகமானவர் என்று காங்கிரஸ் தலைமை சொல்கிறது. இருந்தாலும் உங்களை வாழ்த்த எனக்கு மனம் வரவில்லை. எப்படி வரும்? 1990 ல் இந்தியாவின் மத்திய நிதி அமைச்சரானீர்கள். அன்று வரை கட்சியின் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத உங்களை காங்கிரஸ் தலைமை சடாரென்று  இந்திய நிதியமைச்சராக்கியது. அது உலக வங்கியின் ஆணை என்ற உண்மை மெல்ல மெல்ல வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன் காரணமோ என்னவோ உங்களிடம்  இந்தியப் பிரதமர் என்பதை விட உலக வங்கியின் ஓய்வுபெற்ற அதிகாரி  என்ற உணர்வே  மேலோங்கியிருக்கிறது. இதை என்னால் புரிந்து கொள்ள முடிகிற போது வாழ்த்த எப்படி மனம் வரும். உலக வங்கியின் நவீன தாராளமய கொள்கையை அச்சரம் பிறழாமல் பிடிவாதமாக நடைமுறைப் படுத்துகிறீர்கள்.  அக்கொள்கைகளால்  கடந்த 20 ஆண்டுகளாக உலகில் கோடானு கோடி மக்களின் வாழ்வாதாரம் சிதைந்து போனதைக் கண்ட பின்னரும்  உங்கள் பிடிவாதம் கொஞ்சமும் தளரவில்லையே. 
               புதிய தாராளமயக் கொள்கைகளை கல்வித்துறையில் நடைமுறைப்படுத்துவதில் உங்கள் தலைமையிலான  UPAஅரசுக்கும் முன்பு வாஜ்பாய் தலைமையிலிருந்த NDA அரசுக்கும் போட்டியோ போட்டி, அப்படி ஒரு போட்டி. கல்வியில்  என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதை  ஆய்வு செய்ய 2000 ல் வாஜ்பாய் இரு நபர் குழு ஒன்றை அமைத்தார். முகேஷ் அம்பானியும் குமாரமங்கலம் பிர்லாவும் தான் அந்த இரு நபர் குழு உறுப்பினர்கள். 2006 ல் நீங்களும் அதைப்போல ஒரு குழு அமைத்தீர்கள். அக்குழிவின் தலைவராக தொழிலதிபர் சாம் பிட் ரோடவையும்  பெருபான்மையான உறுப்பினர்களாக பெரும் நிறுவனத்தைச் சார்ந்தவர்களையும் நியமித்து  வாஜ்பாய்க்கு நீங்கள் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபித்தீர்கள். கல்விக்குழுவில் கல்வியாளர்களை புறந்தள்ளிவிட்டு தொழிலதிபர்களை நியமனம் செய்வதன் மூலம் கல்வியைச் சந்தைப் பொருளாக்குவதில் உங்களுக்குள்ள அக்கறை தெரிகிறது.  
 I am freed of left chain 
                 2009  ம் வருடம் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இரண்டாவது முறையாக மத்திய அரசை அமைத்த போது இடதுசாரிகளின் கடிவாளம் இல்லை. தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் " I am freed of left chain" என்று உங்கள் சித்தாந்த உணர்வை வெளிப்படையாகச் சொன்னீர்கள். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி  நவீன தாராளமய கொள்கைகளை அதிரடியாகவும் அதிவிரைவாகவும் பல துறைகளிலும் நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. உயர்கல்வித்  துறையில்  இப்பணியை திறம்படச்  செய்ய கபில்சிபல்தான் பொருத்தமானவர் என்று மிகச் சரியாக முடிவெடுத்தது, காங்கிரஸ்  தலைமை.  திரு. கபில்சிபல் மத்திய மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றவுடன் "1990 களில் மதிப்பிற்குரிய மன்மோகன்சிங் பொருளாதாரத்துறையில் என்ன மாற்றத்தைச் செய்தாரோ அதை நான் இப்போது கல்வித்துறையில்  செய்வேன்" என்று தனது நோக்கம் மற்றும் பணி குறித்து  வெளிப்படையாகவே அறிவித்தார்.   கபில்சிபல் மீது கட்சி தலைமை வைத்திருந்த நம்பிக்கை வீண் போகாது என்பதை இந்த அறிவிப்பு உறுதி செய்தது. நவீன தாராளமய கொள்கைகளைத் துதிபாடும் கூட்டத்தில் கபில்சிபலுக்குத்  தனி இடம் உண்டு.    கபில்சிபல் பேச்சோடு  நின்று விடுவதில்லை; அவர் மத்திய கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற இரண்டாண்டு காலத்தில் கல்வியில் அதிலும் குறிப்பாக உயர்கல்வியில் 'சீர்திருத்தங்களுக்கான ' பல முன்முயறசிகள் எடுத்துள்ளார்.   சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த ஏதுவாக, ஏறக்குறைய  எட்டு  -ஒன்பது  சட்ட முன்வரவுகளை மனித வளமேம்பாட்டுத் துறை இறுதிப்படுத்தியுள்ளது   
  
  1. 1)         அந்நிய கல்விநிலையங்கள் (தொடக்கம் மற்றும் செயல்பாடுகளை  ஒழுங்காற்றும்) மசோதா   2010.
      2)   தொழில்நுட்ப கல்விநிலையங்கள், மருத்துவ கல்விநிலையங்கள்   மற்றும்   
            பல்கலைக்கழகங்களில் நெறியற்ற செயல்பாடுகளைத்  தடுக்கும் மசோதா        2010
      3)   கல்வி தீர்ப்பாயம் மசோதா 2010
      4)   உயர்கல்வி  நிறுவனங்களுக்கான  தேசீய  தர கட்டுப்பாட்டு அதிகாரம் மசோதா  2010௦
     
      5)   புதுமைக்கான  பல்கலைக்கழகங்கள்  மசோதா  2010௦
6)        பொது நிதியில் உருவான அறிவுச் சொத்துடைமை பாதுகாப்பு மற்றும் பயன்பாடு  
       மசோதா 2008 
     7)   உயர்கல்வி மற்றும் ஆர்ரய்ச்சிக்கான தேசீய குழு (NCHER) மசோதா 2010 
     8)   தேசீய  கல்வி  வைப்பு  மைய  மசோதா 
     9)   கல்வியில் அரசு மற்றும் தனியாரின் கூட்டிற்கான ஒரு மசோதா
இச்சட்ட முன்வரைவுகள் வெவ்வேறு நிலையில் உள்ளன. தீர்ப்பாய மசோதா பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு செல்லாமலேயே மக்களவையின் ஒப்புதலைப் பெற்றுவிட்டது, ஆனால் மேலவையின் ஒப்புதலை பெற முடியாமல் நிற்கிறது;  வேறு சில முன்வரைவுகள் பாராளுமன்றத்தில் அறிமுக நிலையில் உள்ளன; ஒரு சில பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளன. 
முடை நாற்ற முன்வரைவுகள் :
                      இச்சட்ட     முன்வரைவுகள் அனைத்திலும்  ஒரு பொதுவான நோக்கத்தையும் பொதுவான சில அம்சங்களையும் பார்க்க முடிகிறது.  முதலாவதாக கல்வியை பெரும் அளவில் சந்தையிடம் விட்டுவிட வேண்டும் என்பதே அனைத்து  முன்வரவுகளின் பார்வையாக உள்ளது.  இரண்டவதாக, உயர்கல்வியை கடைச்சரக்கக்குவதையும், தனியார்மயமாக்குவதையும், வணிகமயமாக்குவதையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஊக்குவிக்கின்றன. மூன்றாவதாக, தற்போது செயல்பட்டு வரும் UGC போன்ற அமைப்புக்களை நீக்கிவிட்டு புதிய அமைப்புக்களை உருவாக்க  வேண்டும் என்ற பார்வை உள்ளது. அடுத்து, உயர்கல்வி உள்நாட்டு சமூக பொருளாதார தேவைகளைப் புறந்தள்ளிவிட்டு உலக தேவைகளுக்கேற்ப அமைய வேண்டும் என்று சில முன்வரைவுகள் சொல்கின்றன.   பல முன்வரைவுகள் புதிய சுயாட்சி பெற்ற அமைப்புகளை உருவாக்கிட முன்மொழிகின்றன. இவ்வமைப்புக்கள் அரசு, சமூகம் உள்ளிட்ட எதற்கும் கட்டுப்பட்டதல்ல என்பதோடு யாருக்கும் பதிசொள்ள வேண்டிய அவசியமில்லை என்ற அபாய மகிஷாசுர அதிகாரம் கொண்டவையாக உள்ளன. கல்வி நிறுவனங்களில் நெறியற்ற செயல்பாடுகளைத் தடுக்கும் மசோதா, தீர்ப்பாய மசோதா போன்ற முன்வரைவுகள் பெயரளவில்  சிறப்பானவையாக உள்ளன. உண்மையில் கல்வி நிறுவனங்களில் நடக்கும் ஊழல்களையும் அநியாயங்களையும் தடுப்பதற்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குமான  வலுவான சட்டங்களாக  அவை இல்லை. (வலுவிருந்தாலும் பெரிதாக கிழித்தி விட மாட்டீர்கள்   என்பதை 2G, KG, CWG ஊழல்கள் பறைசாற்றுகின்றன என்பது வேறு). கல்வி பொதுப் பட்டியலில் உள்ள துறை. மத்திய அரசை விட மாநில அரசுகளே கல்விக்கான செலவினங்களில்  பேரு பங்கை ஏற்கின்றன. முன்பெல்லாம் கல்வி குறித்த கொள்கை  முடிவுகள் மாநில கல்வி அமைசர்களும் பங்கேற்கும் 'கல்விக்கான மைய ஆலோசனைக் குழுவில் (CABE) விவாதிக்கப்படும். இதற்கு மாறாக NCHER மசோதா நீங்கலாக வேறு எந்த சட்ட முன்வரைவுகளும் CABE ல் விவாதிக்கப்படவில்லை. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு வேட்டு வைப்பதாகாதா? (இந்த லட்சணத்தில் 'உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம்' என்று வீர வசனம் பேசுகிற திமுக உங்கள்  கூட்டணி கட்சிகளில்  ஒன்று!)  இம்முன்வரைவுகளில் பல வரைவுகள்  பரந்த விவாதத்திற்கும்  பொது மக்கள் கருத்துக்கும் உட்படாமலே அவசர அவசரமாகவும் ரகசியமாகவும்  பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டதே, ஏன்? மொத்தத்தில், சமூக   வளர்ச்சியில் கல்விக்குப் பங்குண்டு என்ற தொலை நோக்குச் சிந்தனையும் முழுமையான பார்வையும் அற்ற ஊனங்களோடு உங்கள் சட்ட முன்வரைவுகள் வரையப்பட்டுள்ளன. 
வாழ்த்த  மனமில்லை  
மிகச் சுருக்கமாக சொல்வதென்றால் மக்களுக்கான கல்வி என்ற உயர்ந்த சித்தாந்தம் பின்னுக்குத் தள்ளப்பட்டு லாபத்திற்கான, சந்தைக்கான கல்வி என்ற மலிவான சித்தாந்தத்தின் முடை நாற்றம் உங்கள் அரசு உயர்கல்வி குறித்து  கொண்டுவந்துள்ள, கொண்டுவரயிருக்கிற  அனைத்து சட்ட முன்வரைவுகளிலும்    நீக்கமற பரவிக்கிடக்கிறது.
                          'வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை நீங்கி வரவேண்டும் திரு நாட்டில் பொதுவுடைமை'
என்று  பாடித் திரிகிற புதிய ஆசிரியன் நான். 120 கோடி இந்திய மக்களின் நலனை காவு கொடுத்து பத்து இருபது பேரு முதலாளிகளின் வளம் குவிக்கிற தாராளமய தனியார்மய கொள்கைகளை விடாப்பிடியாகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் உங்களை- நீரே பாரதப் பிரதமராக இருப்பினும்- வாழ்த்த மனம் வரவில்லை, மனம் வரவில்லை.

                                                                                                                                                                        பணிவுள்ள, 
                                                                                                                                                                     புதிய ஆசிரியன்.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com