Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Thursday, 1 March 2012

சினிமா: காதலில் சொதப்புவது எப்படி?

0 comments
 
cinema - kaathaili sothappuvathu eppadiகாதல் உயிர்களின் அடிப்படை உணர்வு. ஆனால் அது தமிழ் ஆசிரியர்களிடமிருந்து வேதியல் ஆசிரியர் வரையில் வெவ்வேறான அளவுகோல்களை வைத்து விவாதிக்கப் படுவது.

இளமை எழுதும் ஆத்திச் சூடி காதல். கால காலமாக அது கவிஞர்களை பிறக்க வைத்து, துடிக்க வைத்து, பரவ வைத்து, பரவசப் பட வைத்து, பிறகு ஓட வைத்து, விலக வைத்து, வெறுக்க வைத்து...என படிக்கட்டுகளை வடிவமைக்கிறது. ஆனாலும் காதல் சன்னதியில் அடுத்தடுத்த பக்தர்கள் வந்து நம்பி நின்று ஒரு கும்பிடு போட்டுப் போவது யாராலும் தடுக்க முடியாத இயற்கை விதியாகிவிட்டது. காதல் மனிதர்களின் முகத்திற்கு ஒரு புது மெருகு போடுகிறது. அவர்களது மொழியை போதையில் ஊறவைத்து எடுத்துக் கொடுக்கிறது. தெளியாமல் அலைகிறவரை அந்தக் காதல் தெளிவாக இருக்கிறது. தெளிந்த பிறகு காதல் குழம்பத் தொடங்குகிறது. மரத்தை மறைத்த மாமத யானை, பிறகு யானையை மறைத்து மரமாக உணர்ச்சியற்றுக் கிடக்கிறது. காதலை சமூகம் உற்பத்தி செய்கிறது. சமூகமே சிதைக்கவும் செய்கிறது.

காதலில் இருவர் மட்டுமே சம்பந்தப் பட்டிருப்பதாக அந்த இருவர் மட்டுமே நம்புகின்றனர். ஆனால் சுற்றி நிறைய மனிதர்கள் அதனால் நிலை குலைகின்றனர். அதனால் தான் அவ்வை, காதல் இருவர் கருத்து ஒருமித்து என்பதோடு நிறுத்தாமல் ஆதரவு பட்டதே இன்பம் என்கிறார். ஆதரவை விட பட்டதே அதிகம் இதில் எங்கே இன்பம் என்பது நாம் இதுவரை பார்த்த பல காதல் கதைகள். "காதலில் சொதப்புவது எப்படி" திரைப் படம் காதல் பிரச்சனைகளின் வேர்களை மிகுந்த காதல் ததும்பும்படி கவிதையாக அணுகி இருக்கிறது. பாலாஜி மோகன் முதல் படத்திலேயே கிளர்ச்சியுற வைக்கிறார்.

கல்லூரிக் காதல் படர்வதன் அவஸ்தைகளை நகைச்சுவையோடு பேசுகிறது படம். காதல் என்ற பிறகு அபத்தங்கள் இல்லாது போனால் எப்படி, அசடு வழிய அடி வாங்கும் காதல் திலகங்களையும் கூடவே இழுத்துச் செல்கிறது திரைக்கதை. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட இருவர், தாங்கள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விரும்பாத சில பண்புகளை திரும்பத் திரும்பக் கீறிப் பார்ப்பதில் விலகிக் கொள்வதும், அதன் வலி தாளாது பரஸ்பரம் விரும்பும் குணங்களின் மேடையில் திரும்பத் தழுவிக் கொள்வதுமாக நடக்கும் கண்ணா மூச்சி தான் கதை. இதில் ஆண் மனம் பற்றியும், பெண் மனம் பற்றியும் தத்துவ முத்துக்கள். தத்துவ ஆசானே தத்து பித்தென்று பேசி மீண்டும் மீண்டும் மாட்டிக் கொள்வதுதான் படம் பார்க்க வருவோரைச் சிக்க வைக்கும் தூண்டில். சித்தார்த், அமலா பால் ஜோடி டாக்டரேட் வாங்கும் அளவு ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள் தாங்கள் எப்படி பிரிந்து போய்த் திண்டாடலாம் அல்லது சேர்ந்து கொண்டு நொந்து கொள்ளலாம் என்று. துளியும் விரசம் தொடாது சில்லென்று ஒரு கிளு கிளுக்கும் காதல் பொருளை அழகாகப் படைத்திருக்கிறார் பாலாஜி மோகன்.

தனது மகனின் உணர்வுகளை மதிக்கும் கதாநாயகனின்  பெற்றோர் (ரவி ராகவேந்திரா-ஸ்ரீ ரஞ்சனி), தனது மகள் என்கிற ஒரு கதாபாத்திரம் இருப்பதையே பெரிதாக நினையாமல் விவாகரத்து செய்துவிடும் முடிவை எடுக்கும் கதாநாயகியின் பெற்றோர் (சுரேஷ்-சுரேகா வாணி ) என்ற இரண்டு எதிரெதிர் முனைகளில் படைக்கப்படும் முரண் சமூகத்தின் இரு கூறுகளை அப்படியே பிரதிபலிக்கிறது. இந்த இளம் வாலிப உள்ளங்களின் காதலை அவர்களே அவ்வப்பொழுது சீரான இடைவெளிகளில் எப்படி சொதப்பிக் கொள்கின்றனர் என்பதை மட்டுமல்ல, கணவன் - மனைவி திருமண வாழ்வை சொதப்பிக் கொள்ளாமால் இருப்பது எப்படி என்பதையும் பேசுகிறது படம்.

மனம் திறந்த உரையாடல்கள் இல்லாது போவது ஊகங்களின் ஊசியால் குத்திக் கிழிக்கிறது நம்பிக்கைகளை.  அதன் கண்ணீர் வலுவாகப் பிரிக்கவும் செய்கிறது. பிரிவை எண்ணிக் கதறவும் செய்கிறது. அன்பின் மடை திறப்பு ஒருவித உடைமை உணர்வுக்கும் நிறைய தீனி போட்டுவிடுகிறது. அந்த நேரம் காதல் அதிகார தளத்தில் போய் நின்று கொண்டுவிடுகிறது. அப்போது காதல் இயல்பாகவே மறைந்துவிடுகிறது. ஆதிக்கப் பார்வையைத் தள்ளி வைத்துவிட்டு மீண்டும் அன்பின் இதமான காற்றை வீசச் செய்யும்போது காதல் அறைக்குள் திரைச்சீலை தாளத்துடன் அசைய தொடங்கிவிடுகிறது. இளம் பருவத்துக் காதல் அதன் நேர்மையான உள்ளடக்கத்தோடு கெட்டிப் படும்போது வயது கடந்து பயணம் செய்து வயது மூத்த தம்பதியினரின் இதய விரிசல்களுக்குக் கூட சிகிச்சை அளித்து ஒன்று சேர்த்து வைக்க முடிகிறது. இப்போது காதல் மதிப்பு மிக்கதாக ஆகிவிடுகிறது.

சித்து மிக அசாத்தியமான தேர்வு...அமலா பால் நடிப்பும் அப்படித்தான். படம் முழுக்க கதை சொல்லியாக சித்துவின் குரல் கூடவே ஒலிக்கிறது. அமலா பால் கண்களால் அந்த வேலையைச் செய்துவிடுகிறார். உடன் வரும் வகுப்புத் தோழர்கள் பாத்திரம் வளமான நகைச்சுவை தெறிக்கும் வேலைச் செய்கின்றனர். அதிலும் கொஞ்சம் குண்டான-பேசும் விழிகளோடு வரும் சிவா பாத்திரம் (அர்ஜுன்) சளைக்காமல் ஒவ்வொரு பெண்ணிடமும் அடி வாங்குகிறார். அப்பாவி விக்னேஷ் (உண்மைப் பெயரும் அது தான்) என்ன பாந்தமாக வந்து போகிறார். மனம் விட்டுச் சிரிக்க நமக்கு இடைவிடாத வாய்ப்புகள் வரிசையாக வந்து கொண்டே இருக்கின்றன. பாடல்களும், படமாக்கப்பட்ட விதங்களும் ரசிப்புக்குரியவை என்றாலும், இரண்டாவது முறை கேட்காமல் அவற்றின் அழகைத் துய்க்க முடிவதில்லை. படத் தொகுப்பும் (டி எஸ் சுரேஷ்), இசையமைப்பும் (தமன்), ஒளிப்பதிவும் (நிரவ் ஷா) மிகுந்த பாராட்டுக்குரியவை.

முப்பதாண்டுகளுக்கு முன்பு இளஞ்ஜோடிகள்  படத்தைப் பார்த்தவர்கள் இதில் அப்பா பாத்திரத்தில் வரும் சுரேஷைப் பார்த்தால் அதிர்ந்து போவார்கள். காலம் கருணையற்றது. இரண்டு பெற்றோர் பாத்திரங்களும் சம காலத்தில் ஆரோக்கியமான குடும்ப உறவுகள் குறித்த இலேசான செய்தியையும் அதிகம் ஆர்ப்பரிக்காமல் பேசுகின்றன.

தேவையற்ற அகந்தைத் தனம் (ஈகோ) கணவன் மனைவிக்கிடையில் எப்படி அபத்தமான சண்டைகளை ஓய்வில்லாமல் மூட்டிக் கொண்டே இருக்கிறது என்பதை "ஒரு உலகம் ஒரு வீடு" சிறுகதையில்  அழகாகப் பின்னிக் கொடுத்திருப்பார் ஜா மாதவராஜ். ஆனால் புரிதல் நிரம்பி வழியும் இரண்டு உள்ளங்களுக்கிடையிலும் கூட அபத்தமான சண்டைகளே மேலும் காதல் பூக்களைச் சொரிய வைக்கின்றன என்பதை இந்தப் படமும் எடுத்துச் சொல்கிறது. எல்லைக் கோடுகளின் சூத்திரம் மட்டும் அவர்கள் இருவரது வசம் இருக்க வேண்டும் என்பது தான் அதன் அடிநாதம். அதை இன்னொருமுறை சரி பார்க்க விரும்பும் காதலர்கள் யாவரும் போய்ப் பார்க்க வேண்டிய படம் காதலில் சொதப்புவது எப்படி, வயது முக்கியமில்லை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. வயதை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு காதல் புரியப் போவதுமில்லை. 
                                                        
                        Posted by மாதவராஜ்                                             - எஸ்.வி.வேணுகோபாலன்

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com