Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Saturday, 11 February 2012

கண்ணுக்கு எட்டிய பிறகு சூரிய நமஸ்காரம் - புதுச்சேரி அரசியல்

0 comments

சின்ன சிங்கபூராக அமைதிப்பூங்காவாக மாற்றுவோம் என கூறிய புதுவை முதல்வர் ரங்கசாமி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொலை,கொள்ளை சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை பெரிய அளவில் தலைவலியாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.புதுச்சேரியில் கடந்த 2009ம் ஆண்டு 36 கொலைகளும்,2010 ம் ஆண்டு 29 கொலைகளும் காங்கிரஸ் ஆட்சியில் நடந்துள்ளதாகவும் அதை வைத்து பார்க்கும் போது தற்போதைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்பது கேள்வி குறியாக எல்லாம் இல்லை என மக்கள்முதல்வர் சின்ன காமராஜர் பேட்டி அளித்துள்ளார்.

முதலமைச்சர் தலைமையில் சட்டம் ஒழுங்கை காக்க அவசர ஆலோசனை கூட்டமா ?
வழக்கம் போல் புதுச்சேரி காவல் துறையினரின் உயரதிகாரிகள் கூட்டம் முதலமைச்சரின் தலைமையில் நடைபெற்று உள்ளது.இக்கூட்டத்துக்கு பின் முதலமைச்சர் ரங்கசாமி ரௌடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும்,இனி ரௌடிகளின் மாமுல் தொல்லை இருக்காது எனவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் என்.ஆர்.காங்கிரஸ் அரசு எடுத்து வருவதாக கூறியுள்ளார்.இருப்பினும் இதே போல் இரண்டு மாதங்களுக்கு முன் முதலமைச்சரின் வீட்டின் அருகே நடைபெற்ற கொலையின் போதும் இதே போல் காவல் துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்திய முதலமைச்சர் ரங்கசாமி அப்போதும் ரௌடிகள் மீது நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் பாதி பேர் தற்போது சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். 

காவல்துறையின் செயல்பாடு யாருக்கு சாதகம்!
சமீபத்தில் புதுவை சிறையில் இருந்து  யானம் சிறைக்கு மாற்றப்பட்ட கைதி கருணா அங்கிருந்து தொலைபேசி மூலம் புதுவை முன்னாள் தி.மு.க.நகரமன்ற து.தலைவரும் கேபிள் நெட்வொர்க் தொழிலை நடத்திவரும் ஜான்குமாரை மாமுல் கேட்டு மிரட்டியதாகவும்,கைதி கருணா மீது நடவடிக்கை எடுக்க கோரி புதுவை வடக்கு பிரிவு காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க சென்ற போதும் தொலைபேசியில் மிரட்டியதாக தகவல்கள் வெளியாகின.அதே போன்று ஈ.சி.ஆர். ரோட்டில் உள்ள கார் உதிரிபாகம் விற்கும் தொழிலதிபரை நடு ரோட்டில் மாமுல் தராததால் ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியது.புதுச்சேரி எல்லையோர பகுதியான மதகடிபட்டு,பாகூர் பகுதிகளில் மாமுல் கேட்டு தராத மதுக்கடைகளை ரௌடிகள்  சூறையாடினர்,செயின் பறிப்பு போன்ற சம்பவங்களால் போது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகிறார்கள்.

பிரச்சனைகளை திசை திருப்பும் புதிய அறிவிப்புகள்:
புதுச்சேரி முதலைமச்சர் திரு.ரங்கசாமி புதுச்சேரி மாநிலத்தில் ஒரு பிரச்சனை பூகம்பமாக உருவெடுக்கும் போது அதை சமாளிக்க புதியதாக ஒரு இலவச அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை திசைதிருப்புவதில் வல்லவர்.அதுபோலவே தானே புயலினால் பெரிய அளவில் மீனவகிராமங்கள் பாதித்தன,குடிசை வீடுகள் காற்றில் சூறையாடப்பட்டன,இன்னமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரணங்கள் சென்று அடையாத நிலை உள்ளது.ஆனால் ரேஷன் கார்டுகள் வைத்துள்ள அனைவருக்கும் இரண்டாயிரம் ரூபாயை நிவாரனதொகையாக வழங்கி உண்மையில் புயலினால் பாதித்த மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும் இல்லை,உரிய கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை. இன்று புதியதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பத்தாம் வகுப்பு தேர்வில் 75% மதிப்பெண் பெற்றால் லேப்டாப் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.ஆனால் இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படாமல் உள்ள இலவச சைக்கிள்,சென்டாக் மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை இன்னமும் வழங்கப்படாமல் உள்ளது.

எனினும் இவரது அறிவிப்புகளின் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர இது வரை புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான புதிய திட்டங்களை எப்படி செயல்படுத்த போகிறார் என்பது தான் சந்தேகம்!
                                                                                                                -அ.ஆனந்த் 
                                                                                                      இந்திய மாணவர் சங்கம்

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com