Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Friday, 27 January 2012

கபில்சிபலின் குரலில் ஒளிந்துள்ள காங்கிரசின் கோரமுகம் :

0 comments

இணையதளங்கள், சமூக தளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் ‘மோசமான’ ‘பாலியல்’ சார்ந்த விசயங்களை ஏகப்பட்டபேர் எழுதுவதால் இந்திய சமூகம் கெட்டுகுட்டிச்சுவர் ஆகி விடுவதாக இந்தியாவின் மிகமோசமான குட்டிச்சுவர் ஆட்சியான UPA-IIவின் மாண்புமிகு மந்திரி கபில்சிபல் வருத்தப்பட்டு கண்ணீர்,மூக்கு போன்றவற்றை சிந்தி வருத்தப்பட்டுள்ளார்.  டுனீசியாவில் தொடங்கி எகிப்து,சிரியா,லிபியா போன்ற கட்டுப்பெட்டியான அரபு தேசங்களிலும் மக்கள் எழுச்சி வீறுகொண்டு எழுந்து காலகாலமாக குடும்ப சர்வாதிகார ஆட்சி செய்த நபர்களை துரத்தியடித்த நிகழ்வானது சாதாரணமான ஒரு செய்தி அல்ல. இப்போராட்டம் அரபு பிராந்தியம் எங்கும் தீ போலப்பரவ சமூக இணையதளங்களானட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவை மிகப்பெரும் பங்காற்றின என்பது அத்தளங்களின் சொந்தக்கார்ர்களுகே கூட எதிர்பாராத அதிர்ச்சியை கொடுத்திருக்கலாம்! கபில்சிபலுக்கும் இந்த அதிர்ச்சி ஏற்பட்டதில் நமக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை – ஜனநாயகம் என்ற பெயரில் இந்தியாவில் குடும்ப ஆட்சியை ஸ்தாபித்த பெருமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உண்டு! தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களுக்குப் பின்னால் காந்தி என்ற பின்னொட்டை சேர்த்துக்கொண்டு இந்தக் குடும்பம் செய்கின்ற அட்டூழியம் கொஞ்சநஞ்சம் அல்லவே! இக்குடும்ப ஆட்சியின் நாசங்களை ஊடகங்கள் அம்பலப்படுத்தும்போதுதான் கருத்துரிமையை, பேச்சுரிமையை அடியோடு புதைக்கின்ற 1975 எமெர்ஜென்சி போன்ற காட்டுமிராண்டி சட்டங்களை காங்கிரஸ் கட்சி தயக்கம், வெட்கம் ஏதும் இன்றி மக்கள் மேல் திணிக்கும்! இப்போது கபில்சிபல் போன்ற நபர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றின் மீது கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும் என்று கடுப்பெடுத்துப் புலம்புவது ஏதோ போகின்ற போக்கில் புலம்புவது அல்ல! காங்கிரசின் அசிங்கமான வரலாறு ரத்தக்கறை படிந்தது என்ற பின்னணியில்தான் இதை பார்க்க வேண்டும்.

2)  விடுதலை பெற்ற இந்தியாவின் ஆகப்பெரிய முதல் ஊழலை தொடங்கி வைத்த பெருமை கபில்சிபலின் காங்கிரஸ் கட்சிக்குத்தான் உண்டு! தேசம் விடுதலை பெற்ற அடுத்த வருடமே இந்த புண்ணியகாரியத்தை செய்தார்கள்! 1948இல் காஸ்மீரில் ராணுவத்தேவைகளுக்காக ஜீப் வாங்கியதில் ஊழலை தொடங்கினார்கள். தொடர்ந்து முத்கல் வழக்கு (1951), முந்த்ரா வழக்கு (1957), மாளவியா-சிராஜுதீன் ஊழல் (1963), பிரதாப் சிங் கைரோன் (1963), இந்திராகாந்தியின் குரலில் தொலைபேசியில் பேசி லட்சக்கணக்கான ரூபாய்களை அரசு வங்கியில் இருந்து சுருட்டிய நகர்வாலா வழக்கு (1975) (அதாவது இந்திரா காந்தி சொன்னால் வங்கியில் இருந்து  மக்கள் பணத்தை சுருட்டலாம் என்று நிரூபித்த சம்பவம்!), அப்துல் ரஹ்மான் அந்துலே செய்த சிமெண்ட் ஊழல்...என அத்தனையும் நூறு வருட பாரம்பரியம் உள்ள கபில்சிபலின் காங்கிரஸ் கட்சி செய்த ஊழல்கள்!  உச்சக்கட்டமாக ஒரே இரவில் அவசரநிலையை அறிவித்து லட்சக்கணக்கான மக்களையும் எதிர்க்கட்சித்தலைவர்களையும் சிறைகளில் தள்ளிக் கொடுமை செய்தது காங்கிரஸ்தான்! ஆயிரக்கணக்கான படுகொலைகளை செய்ததும்  காங்கிரஸ்தான்! பல்லாயிரக்கணக்கானோர் வீடு திரும்பவில்லை! கோட்டுசூட்டோடு இங்லீசு பேசி திரியும் கபில்சிபல் போன்ற காங்கிரஸ்காரர்கள் இந்திய சமூகத்துக்கு சொல்ல வேண்டிய பதில்கள் வண்டி வண்டியாக மிச்சம் உள்ளன! இதுதான் காங்கிரசின் ரத்தம்தோய்ந்த வரலாறு!


3)  ஊழல் புகாரில் குற்றம் சாட்டப்பட்ட முதல் இந்தியப்பிரதமர் என்ற பெருமையை பி.வி.நரசிம்மராவ் பெறுகின்றார்! அவரது காங்கிரஸ் ஆட்சிக்கு பெருமை சேர்த்த ஊழல்களை பட்டியல்தான் போட வேண்டும்: ஃப்ரான்ஸ் தேச ஏர்பஸ் ஏ-320 விமானங்கள் வாங்கியது (ரூ.2500 கோடி அளவுக்கு), ஹர்ஷத்மேத்தா முக்கியப்புள்ளியாக இருந்த பங்குச்சந்தை ஊழல் (1992), கோல்ட் ஸ்டார் ஸ்டீல்ஸ் அண்ட் அல்லாய்ஸ் (1992), ஜார்கன்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம், ஹவாலா ஊழல் (ரூ.65 கோடி), யூரியா ஊழல் (1996)...என காங்கிரஸின் மெடல் பட்டியல் நீண்டு நாறுகின்றது!

4)  இவை அன்றி இந்தியாவின் பெயரை உலகத்தில் மூலைமுடுக்கெல்லாம் பரப்பிய ஃபேர்ஃபாக்ஸ், HPJ பைப்லைன், HDW நீர்மூழ்கிக்கப்பல், அனைத்திற்கும் மேலாக ராஜீவ்காந்தி, சோனியாகாந்தி குடும்பங்கள் முழுமையாக மூழ்கி முத்தெடுத்த போஃபார்ஸ் பீரங்கி ஊழல், போபால் நகரில் ஆயிரக்கணக்கான இந்திய மக்களை ஒரே ராத்திரியில் கொன்று குவித்த அமெரிக்க முதலாளி வாரன் ஆண்டர்சனை காசு வாங்கிகொண்டு தப்பிக்க வைத்த சாதனை...என கபில்சிபல்,சிதம்பரம் போன்ற முதலாளிகள் சட்டையில் குத்தி பெருமைப்பட்டுக்கொள்ள காங்கிரஸ் மெடல்கள் ஏராளம்! பல கோடி ரூபாய் ஊழல் செய்து இமெல்டா மார்க்வெஸ் போல தங்கத்தால் தனது வீட்டை அலங்கரித்துக்கொண்ட டெலிஃபோன் மந்திரி சுக்ராம் காங்கிரசை சேர்ந்தவர்தான்! பிற்பாடு இவர் தன் கட்சியில் இருப்பதே பொருத்தம் என பாரதீய ஜனதா கட்சி தனக்குள் சேர்த்துக் கொண்டது! (பாஜகவின் ஊழல் பட்டியல் தனியாக உள்ளது, அதாவது ரேஸில் ரெண்டாவது இடம், தனியே எழுதுவோம்).

5)  இந்த ஊழல் ஓட்டப்பந்தயப் போட்டியில் யார் ஓடினாலும் எப்போதும் முன்னால் வந்து பதக்கத்தை வெல்வது காங்கிரஸ்தான்! காங்கிரசை காங்கிரசால்தான் ஜெயிக்க முடியும்! மற்றவர்கள் எல்லாம் வாயில் நுரை தள்ள தரையில் விழ வேண்டியதுதான்! பாருங்கள், இப்போது எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல ஆல்டைம் சாம்பியன் ரூ.176000 கோடி அளவுக்கு 2ஜி ஊழல்! காங்கிரசைத்தவிர யாரால் முடியும்? தொடர்ந்து 3ஜி, காம்ன்வெல்த் விளையாட்டு, மும்பையில் சட்டவிரோதமாக கடற்கரையில் கட்டப்பட்ட பலமாடி குடியிருப்பு ஒதுக்கீடு ஆதர்ஸ் ஊழல்...என காங்கிரசை காங்கிரசால்தான் ஜெயிக்க முடியும்!

6) இப்படி கபில்சிபலின் காங்கிரஸ் கட்சியின் ஊழல்களை வெளிக்கொண்டு வந்ததில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு, ஒரு சில வருடங்களுக்கு முன்பு அச்சு ஊடகங்களின் பங்கே பிரதானம். ஆனால் கால மாற்றம், தகவல் தொழினுட்ப வளர்ச்சி, இணைய தளம் எல்லாமும் சேர்ந்து கடந்த காலத்தை விடவும் இந்த ஊழல்களை நொடியில் உலகம் பூராவும் பரப்பியதில் பெரும் பங்கு வகித்தன, பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி காங்கிரசை சந்தி சிரிக்க வைத்தன என்பது, முதலில் சொன்ன அரபு எழுச்சியின் காரணமாக ஆட்சி மாற்றங்களே நிகழ்ந்தன என்பதும் காங்கிரசுக்கு எரிச்சலையும் எச்சரிக்கையையும் ஒருங்கே வர வைத்துள்ளன. காங்கிரஸ் கட்சியின்  எரிச்சல்தான் கபில்சிபலின் வாய் வழியே வெளியே வந்துள்ளது என்பதை நாம் மறக்கவேண்டாம்.  முடிந்தால் மீண்டும் ஒரு எமர்ஜென்சியை கொண்டுவரவும் காங்கிரஸ் தயங்காது என்பதை  காங்கிரசின் ரத்தக்கறை படிந்த நீண்ட வரலாறு, குறிப்பாக 1975 வரலாறு நமக்கு சொல்லியுள்ளது. ஜனநாயக சக்திகள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com