Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Tuesday, 29 November 2011

"WHY THIS கொலவெறி டீ" பாடல் எழுத காரணம் என்ன?

0 commentsநடிகர் தனுஷ் எழுதி அவரது சொந்த குரலில் பாடிய இந்த பாடல் இப்போது மிகவும் பிரபலமாக பேசபடுகிறது அல்லது பேசவைக்கப்படுகிறது. இந்த பாடல் எப்படிபட்டது? ஏன் எழுதப்பட்டது? என்ற ஆராய்ச்சிகள் நடக்கத்துவங்கியுள்ளது. நல்ல வேலை கலைஞர் ஆட்சி இப்போது இல்லை, இருந்திருந்தால் இநத் ஆண்டின் சிறந்த பாடல் ஆசிரியராகவும் சிறந்த பின்னணி பாடகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார் தனுஷ். ஏனெனில் அவர் சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்ற கூடுதல் தகுதி கொண்டவராயிற்றே..

 இன்று இந்த பதிவு எழுதும் நேரம் வரை இணையத்தின் வழியாக இந்த பாடலை 55 லட்சம் பேர் பார்த்திருப்பதாக புள்ளிவிபர புலிகள் அறிவித்து உள்ளனர். இந்த இம்சைகள் ஒருபக்கம் இருக்க இந்த பாடல் பின் நவீநத்துவ பாடலாக இருக்கலாம் என பின் நவீநத்துவ வாதிகள் கட்டுரை எழுத கொலைவெறி எடுத்து அலையும் தகவலும் வெளியாவது பீதியை கிளப்புகிறது. நமது பிளாக்கர்களுக்கு (அதாங்க வலைப்பூ மன்னர்களுக்கு) அடிச்சு துவைச்சு காயப்போட ஒரு சூப்பர் மேட்டர் கிடைத்த சந்தோஷத்தில் இருப்பது மட்டும் ஒரு ஆறுதலான நிகழ்வு.

 இது ஒருபுறம் இருக்க இந்த பாடலை அவர் எழுத கீழ்கண்ட காரணங்களும் இருக்கலாமா என "அரசியல் நோக்கர்கள்" கருதுகிறார்கள். இது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். (யார்ரா இவனுவ அரசியல் நோக்கர்கள் என தாங்கள் குழம்புவது புரிகிறது! எல்லா பத்திரிக்கைகளும் தங்கள் சொந்த கருத்துக்களை இப்படிதானே எழுதுகிறார்கள். நாமும் எழுதுவோம்!?)

 "WHY THIS கொலவெறி டீ"
 உழைப்பாளி மக்கள் பைகளிலிருந்து அதிகார பூர்வமாக பகல் கொள்ளையடிக்க தமிழக அரசு அநியாயமாக உயர்த்தியுள்ள பேருந்து கட்டண உயர்வை மனதில் வைத்து இவர் எழுதினார் என ஒரு பகுதியினரும்.. இல்லை இல்லை அவர் பேருந்தில் பயணம் செய்பவர் அல்ல அதனால் அது குறித்து இல்லவே இல்லை என ஒரு பகுதியினரும் வாதிடுகின்றனர்.

 ஏழைக் குழுந்தைகளின் உணவாக பசியாற்றிய பால் விலையை ஏற்றி அக்குழந்தைகளுக்கு இலவசமாக "பால்தெளி சடங்கை" நடத்தியுள்ள கொடுமையை கண்டு சகிக்காமல் "பொல்லாதவன்" தனுஷ் பொங்கி எழுந்து எழுதியிருக்கலாம் என பலரும் வாதிடுகின்றனர்.

 அதுக்கூட இல்லை.. 400 யூனிட் வரை மின்சாரத்தை நுகர்ந்தவர்கள் உயர்வதற்கு முன்பாக ரூ.670ஐ கட்டணமாக செலுத்தினார்கள். இவர்கள் உயர்வுக்கு பின்னர் ரூ.1,300ஐ இரட்டிப்பான நிலையில் செலுத்த வேண்டி யுள்ளது. 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை நுகர்ந்தவர்கள் கட்டண உயர்வுக்கு முன்னால் ரூ.1,100ம். கட்டண உயர்வுக்கு பின்னர் அவர்களே ரூ.2,375ஐ மின் கட்டணமாக செலுத்த வேண்டிய அதிரடி உயர்வை அம்மா அரசு தமிழக மக்கள் மீது திணித்துள்ளதை கண்டித்துதான் இந்த பாடல் எழுதப்பட்டதோ எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

 அல்லது.. பரமக்குடி துப்பாக்கிச்சூடு, அண்ணா நூலக இடமாற்றம், சமச்சீர் கல்விக்கு ஆப்பு, மக்கள் நல பணியாளர்கள் குடும்பங்களி நடுரோட்டில் நிற்க வைத்தது போன்ற சம்பவங்களை வைத்து அவர் எழுதி இருக்கலாம் என சொல்கிறார்கள். அதில் வரும் வாழ்க்கையே டார்க்கு, பிளாக்கு போன்ற வார்த்தைகள் சூட்சுமமாக இவைகளை உணர்த்துவதாக சொல்கிறார்கள். அதிமுக அரசின் கொள்கைகளை அம்பலப்படுத்திய தனுஷ் இன்னும் பல பாடல்களை எழுத வேண்டும் என்றும் "அரசியல் நோக்கர்கள்" கூறுகிறார்கள்.

 ஆகவே நண்பர்களே.. இந்த பதிவின் நோக்கம் கீழ்காணும் ஒரே ஒரு "நல்ல" நோக்கத்திற்காக எழுதப்பட்டுள்ளது என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 அதிமுக நண்பர்கள் இதை "கவனித்து"  படித்து அதன் "விளைவாக" இனிமேல் தனுஷ் பாடல் எழுதுவதை நிறுத்தலாம் என்ற ஆசையின் விளைவே இந்த பதிவு.
                                                          
                                                                 கட்டுரையாளர் : எஸ்.ஜி.ரமேஷ்பாபு

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com