Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Friday, 25 November 2011

தற்கொலைக்கு - நான் பயப்படவில்லை

2 comments
சில வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட என் நண்பனின் கடிதமொன்றை வெகுநாட்கள் கழித்து நேற்று படித்தேன். அதில் அவன் எழுதியிருந்த வரிகள் என்னை ஒரு கணம் புரட்டிப் போட்டு விட்டன.
                                             


    "தற்கொலைக்கு
     நான் பயப்படவில்லை
     ஏனெனில்
     மரணத்திற்குப் பயப்படும்
     கோழைகள் தான் இங்கு அதிகம்.
     எனது வலியை
     உங்களுக்குத் தந்து விட்டுப் பிரிகிறேன்
     என்னை மன்னித்து விடுங்கள் நண்பர்களே!"
இதோடு கடிதமும் அவன் கதையும் முடிந்து போகிறது.

உண்மையில் அனைவரும் மரணத்திற்குப் பயப்படும் கோழைகளாகத்தான் வாழ்கிறோம் என்பதை என்னால் மறுக்க முடியவில்லை. இந்த பிரபஞ்சத்தின் சிறு எறும்பு தான் இந்த பூமி. இந்த பூமிக்குள்ளும் கண்ணுக்குத் தெரியாத சிறு எறும்புக்கூட்டம் தான் நாம்.

இந்த சிறு எறும்புக்கூட்டத்திற்குள் தான் எத்தனை மோதல்கள், எத்தனை சண்டைகள், எத்தனை பிரிவுகள், எத்தனை இழப்புகள். ஆனால் ஒரு மனிதன் விட்டுச் சென்ற வெற்றிடத்தை எவராலும் நிரப்ப முடிவதில்லை. ஒரு மனிதன் விட்டுச் சென்ற நினைவுகளை யாராலும் அழிக்க முடிவதில்லை. ஒரு மனிதன் கொடுத்து விட்டுச் சென்ற வலிகளை யாராலும் ஆற்ற முடிவதில்லை.

தனக்குப் பிடித்த நடிகனின் படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்பதற்காக தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் மனிதனையும், விபத்தில் தன் மொத்த உடம்பும் சிதைந்து போகும் சூழலிலும் மருத்துவமனைக்குச் சென்று எப்படியாவது தப்பித்து உயிர் வாழும் மனிதனையும் ஒரு சேர இங்கே நாம் பார்க்க முடிகிறது. வாழ வேண்டும் என்கிற ஆசை அனைவருக்கும் பொதுவானது தான். அது ஹிட்லராக இருந்தாலும் சரி சார்லி சாப்ளினாக இருந்தாலும் சரி. கோட்சேவாக இருந்தாலும் சரி காந்தியாக இருந்தாலும் சரி. ராஜபக்சேவாக இருந்தாலும் சரி கொத்துக்குண்டுகளால் மடிந்து போன என் ஈழத்து சொந்தங்களாக இருந்தாலும் சரி.

"ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்க்கைகள் வாழ எனக்கு வாய்ப்பு தரப்பட்டாலும் நான் அந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் என் தேசத்தின் நலனுக்காகவே அர்ப்பணம் செய்வேன்"
1915 நவம்பர் 17ம் தேதி தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மாவீரன் கத்தார்சிங்கின் இறுதி முழக்கங்கள் இவை.

"நாளை காலையில் மெழுகுவர்த்தியின் ஒளி மங்குவதைப் போல நானும் காலை ஒளியில் கரைந்து மறைந்து விடுவேன். ஆனால் நம்முடைய குறிக்கோள்கள், நம்பிக்கைகள், உலகத்தைப் பிரகாசிக்கச் செய்யும். இன்று போய் நாளை நாங்கள் மீண்டும் பிறப்போம். எண்ணற்ற இந்நாட்டு வீரர்கள் உருவில்........."
தூக்கிலேறுமுன் தன் தம்பிக்கு பகத் சிங் கடைசியாக எழுதிய வரிகள் இவை.

"எங்களது உடல் எங்களைச் சேர்ந்ததல்ல எங்கள் உடல், பொருள், ஆவியெல்லாம் இந்த நாட்டின் சொத்து என்றே நாங்கள் கருதுகிறோம். தாய்நாட்டின் சேவையில் உயிரை அர்ப்பணம் செய்யும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்பதைக் கண்டு நாங்கள் பெருமையடைகிறோம்"
கையூர்த் தோழர்களை மரணம் தழுவிக் கொள்ளும் முன் மக்களுக்குச் சொன்னவை இவை.

இப்படி நாட்டுக்காக இறந்து போனவர்கள் எல்லாம் ஏதோ எல்லாம் அனுபவித்து முடித்து இனி அனுபவிப்பதற்கு ஒன்றும் இல்லை என்று சொல்கிற குல்லாக்காரர்களின் வார்த்தைகள் அல்ல. இவை முழுக்க முழுக்க எதிர்கால வாழ்க்கையை பற்றிய கனவுகளோடு வாழ்ந்த இன்றும் வாழ்கிற நம்மைப் போன்ற இளைஞர்களின் வரிகள். இவர்களுக்கென்றும் சுய ஆசைகள் இருக்கவில்லையா? என்றால் இவர்களின் ஆசை இந்த தேசத்திற்கானது. மக்களுக்கானது. விடுதலைக்கானது. புரட்சிக்கானது.

இவர்கள் செய்த உயிர்த்தியாகத்தில் தான் நாம் இன்று சுகபோகமாய் வாழ்ந்து வருகிறோம். இன்றைய இளைஞர்களில் எத்தனை பேருக்கு இவர்களின் தியாகம் தெரிந்திருக்கிறது? எத்தனை பேர் இவர்களின் இலட்சியங்களை கையிலெடுத்துக் கொண்டார்கள்? எத்தனை பேர் இவர்களை நினைத்துப் பார்க்கிறார்கள்?

"நம்ம தலைவர் படம் எப்படா ரிலீஸ் ஆகும்?"
"நாளைக்கி அவ என்ன படத்துக்கு கூட்டிட்டு போகச் சொல்லிருக்காடா எப்படியாச்சும் அப்பா கிட்ட இருந்து ஆயிரம் ரூபாய கரெக்ட் பண்ணனும்டா"
"இந்த செமஸ்டர்ல எப்படியாச்சும் 85% மார்க் வாங்கி பிளேஸ்மெண்ட்ல செலக்ட் ஆகி எப்படியாச்சும் பாரின் போய் செட்டில் ஆகிடணும்"
"அவ 9 நாளா என் கிட்ட பேசல மச்சி சாகணும் போல இருக்குடா"
இவைகள் தானே இன்றைய பெரும்பாலான இளைஞர்களின் வரிகள் ஆகிப் போனது.

வெறும் தேர்விலும், காதலிலும் ஏற்படுகின்ற தோல்வியால் உயிரை மாய்த்துக் கொள்பவர்களும், சாலையில் அடிபட்டு உயிருக்காக போராடும் மனிதர்களைப் பார்த்து வெறும் "உச்" மட்டும் கொட்டுபவர்களும், அதைக் கண்டும் காணாமலும் செல்பவர்களும் தானே இங்கு அதிகமாக இருக்கிறார்கள்.....

நேற்று எனக்கு நெருங்கிய நண்பன் ஒருவன் நள்ளிரவில் திடீரென்று போன் செய்து, "மச்சி அவள உண்மையா லவ் பண்ணுனேன்டா, அவ அவ ப்ரெண்ட்ஸ் பேச்ச கேட்டு என்ன கழட்டி விட்டுட்டாடா. என்ன கடைசி வர புரிஞ்சிக்காமலே போய்ட்டாடா. என்னால அவ கிட்ட பேசாம இருக்க முடியல. அவ நெனைப்பாவே இருக்கு. அவ இல்லாம என்னால இருக்க முடியாது. நான் சாகப் போறேன்டா. என் சாவுக்காவது அவ வருவாளான்னு பாப்போம்" என்று தழுதழுத்த குரலில் கண்ணீரோடு போனை தூண்டித்து விட்டான். எனக்கோ உள்ளுக்குள் ஒரே பயம். அவனது மரணத்திற்குப் பின்னான சம்பவங்கள் என்னை பாடாய் படுத்தி எடுக்கத் தொடங்கின. அவனுக்கு போன் செய்து கொண்டே இருந்தேன். கடைசி வரை எடுக்கவே இல்லை. போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டிருந்தான். வெகு நேரப் போராட்டத்திற்கு பின்பு என்னை அறியாமலே உறங்கிப்போனேன். காலையில் அவன் நினைவு வரவே மீண்டும் அவனுக்கு முயற்சி செய்தேன். ரிங் போய்க் கொண்டே இருந்தது. அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு அவனுக்குப் பதிலாக அவன் அம்மா போன் எடுத்து "தம்பி அவன் தூங்குறான்பா. 7 மணிக்கு அவன எழுப்பிப் பார்த்தேன். அவன் இப்ப தூங்க விடுங்கன்னு சொல்லிட்டு மறுபடியும் படுத்துகிட்டான்" என்று சொன்னார்கள். அப்போது தான் எனக்கு உயிரே வந்தது போல இருந்தது. "சரிம்மா அவன் எந்திரிச்சதும் எனக்கு போன் பண்ணச் சொல்லுங்க" என்று கட் செய்தேன்.

இரவு 10 மணி இருக்கும் மீண்டும் அவனிடமிருந்து போன் வந்தது. ஆனால் இம்முறை ரொம்ப அமைதியாக "மச்சி, சாரிடா நேத்து ரொம்ப டென்சன் ஆகிட்டேன். போன சுவிட்ச் ஆப் பண்ணிட்டு கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்தேன். நான் உண்மையா தான்டா அவள லவ் பண்ணுனேன். அவ மேல இருக்குற அக்கறையில தான்டா அவ கிட்ட கோபமா நடந்துகிட்டேன். அவ என்ன புரிஞ்சிக்காம போன அதுக்கு நான் என்னடா பண்ண முடியும்? அவ ப்ரெண்ட்ஸ் என்ன சொன்னாலும் அவளுக்கு புத்தி எங்கடா போச்சி? அவளுக்கு அவ மேல இருக்குற நம்பிக்கை அவ்வளவு தான்னு புரிஞ்சிகிட்டேன். இப்ப கூட அவள நெஜமாவே விரும்புறேன். அவள நான் தப்பாவே நெனைக்கல. அவ போயிட்டா என் காதல் பொய்ன்னு ஆகிடுமா? என்ன கல்யாணத்துக்கு அப்புறம் போறது கொஞ்சம் சீக்கிரமா போய்ட்டா அவ்வளவு தான். நா செத்துட்டா என் வீட்ட யாரு பார்த்துப்பா? நல்லா படிச்சி நாட்டுக்கு நல்லது பண்ணனும்ங்கிற என்னோட லட்சியம் என்ன ஆகுறது. ஒரு சப்ப விசயத்துக்காகவா உயிர விடப்போறோம்ன்னு தோணிச்சி. முடிவ மாத்திகிட்டேன். கொஞ்ச நாளைக்கி வலி இருக்க தான் செய்யும். அப்புறம் தானா பழகிக்கும். என்னால முடிஞ்ச வரைக்கும் நாலு பேருக்கு நல்லது பண்ணுனா அதுவே போதும்டா. அவ எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்" என்று சொன்னான். நிஜமாக அப்போது அவனுக்குள் உண்மையான ஒரு மாவீரன் எனக்குத் தெரிந்தான்.

"இயற்கையையும், வலிகளையும் எதிர்த்து எந்த உயிர் வாழப் பழகுகிறதோ அதுவே நிலைக்கும்"
                                                                                                                       - சார்லஸ் டார்வின்


                                                                       என்றும் புன்னகையுடன்
                                                                                வெ.அருண்பாரதி

2 Responses so far.

  1. இதைச் சக இளைஞர்களிடம் சுற்றுக்கு விடுங்கள்; பலரைப் பாதுகாக்கும்.

  2. sfi says:

    this article which definitely read by each and every students whose mentally disturbed and suffered in lot of mind depression...

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com