Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Monday, 26 September 2011

பெண் கருக்கொலை - சமுதாயத்தின் அவமான சின்னம்

0 comments
                 இன்றைக்கு  ஆணாதிக்க சிந்தனை என்பது கொடிகட்டிப் பறக்கும் சமூக சூழ்நிலையில் பெண்களுக்கு எட்டு வகையான உரிமைகள் ஆண்களால் மறுக்கப்படுகின்றன என்று நான் சொல்லவில்லை.  எட்டு ஆண்டுகளுக்கு முன்பே ஐக்கிய நாடுகள் சபை தனது ஆய்வுகளின் மூலம் இந்த உலகத்திற்கு எடுத்துக் காட்டியது.
                      (1) பெண்கள் பிறப்பதற்கே உரிமை கிடையாது.
                      (2) பெண்கள் சாப்பிடுவதற்கு உரிமை கிடையாது.
                      (3) பெண்கள் படிப்பதற்கு உரிமை கிடையாது.  
                      (4) பெண்கள் தன் விருப்பப்படி ஆடைகளை அணிவதில் உரிமை 
                           கிடையாது.
                      (5) பெண்களுக்கு சம ஊதியம் உரிமை கிடையாது. 
                      (6) பெண்களுக்கு சொந்தமாக கருத்து சொல்லும் உரிமை கிடையாது.
                      (7) பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது.
                      (8) ஆணும் பெண்ணும் சமம் என்ற உரிமை கிடையாது.
              இது உலக நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளிலிருந்து கண்டெடுக்கப்பட்ட உண்மை. ஆனால் இவையனைத்தும் நம் நாட்டில் - நம் சமூகத்தில் கொஞ்சம் கூட குறையாமல் வளர்ந்து கொண்டே போகிறது என்பதும் உண்மை தான் என்பதை மிகுந்த வருத்தத்துடன் பார்க்கவேண்டி இருக்கிறது.
                ஆணாதிக்க சிந்தனை என்பது இன்றைக்கு  நாடு முழுவதும் மக்களிடம் ஆழமாக வேரூன்றி இருப்பத்தை  பெண் பிறப்பு விகிதம் குறைவதிலிருந்து நம்மால் காண முடியும்.
               யூனிசெப் புள்ளி விவரங்களின்படி,  இந்தியாவில் நாளொன்றுக்கு ஏழாயிரம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகிறார்கள் என்பதும்,   ஆறு வயதிற்குட்பட்ட பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பதும் இந்த தேசத்திற்கே ஆபத்தானது.  1991ல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 945 பெண் குழந்தைகள் என்ற நிலை மேலும் மோசமாகி, 2011ல் 911 பெண் குழந்தைகள் என்ற அளவில்தான் உள்ளன.
               தமிழ்நாட்டில் 2011ம் ஆண்டு கணக்குப்படி 13 மாவட்டங்களில் 6 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கைக் குறைந்துள்ளதை தமிழக அரசு மிகுந்த கவலையோடு பரிசீலிக்க வேண்டும். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் நிலைமை மிக மோசமாக உள்ளது. 900த்திற்கும் கீழேதான் பெண் குழந்தை விகிதம் உள்ளது. பெரம்பலூர், கடலூர், குமரி, நாகை, திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கடந்த பத்தாண்டுகளாக நிலைமையில்  பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
                  பொதுவாக தமிழகத்தில் 1991ம் ஆண்டு 948 பெண் குழந்தைகள் என்று இருந்தது. 946 என 2011ல் சற்று குறைந்துள்ளது. அகில இந்திய சராசரியோடு ஒப்பிடும்போது இந்த இழப்பு மிகக்குறைவு தான். ஆயினும், இந்தச் சிறு இழப்பையும் அரசு அனுமதிக்கக்கூடாது. மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள 13 மாவட்டங்களில் அரசின் கவனம் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
                பெண் குழந்தை பிறந்தவுடன் கள்ளிப் பால் ஊற்றிக் கொல்லுவது என்பது இன்றைக்கும்  கிராமப்புறங்களில்  கொடூரமான  நடைமுறையாக இருந்து வருகிறது. அதே போன்று, இன்றைய நவீன அறிவியல் வளர்ச்சியையும் பெண்களுக்கு எதிராகவே பயன்படுத்துவதுதான் மிகவும் ஆபத்தான போக்காக பெருகியுள்ளது. கருவிலே உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஸ்கேன் செய்து அறிந்திட முடியும். காசு கொடுத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற இன்றைய சூழ்நிலையில், அறிவியல்பூர்வமாக பெண் கரு என்பதை உறுதி செய்து கருவிலேயே அழிக்கும் கொடுமை இன்றைக்கு அதிகரித்துள்ளது. “பிறக்கும் உரிமை” கூட பெண்களுக்கு மறுக்கப்படுகிறது என்பது மிகவும் மோசமான மனித உரிமை மீறலாகும். ஆணாதிக்கச் சிந்தனையின் குரூர வெளிப்பாடாகும்.
            ஆண்களுக்குத்தான் முதல் உரிமை என்கிற சமூக அவலத்தை அடியோடு நீக்குவது நாகரீக சமுதாயத்தின் அடிப்படை நியதியாகும். வரும் ஆண்டுகளில் ஆணும் பெண்ணும் சமமாய்ப் பிறக்கும் வாய்ப்பு நோக்கி மக்கள் மனம் திருந்த  எல்லா வகையிலும் விழிப்புணர்வையும் சட்டத்தின் பற்களையும் பலப்படுத்துவோம்.   

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com