Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Thursday, 14 July 2011

நித்யானந்தாவின் பின்னால் இருப்பவர்கள் யார்? அம்பலமாகிறது!

0 comments
  • வந்துவிட்டார் ரஞ்சிதா புகழ் நித்யானந்தா!
  • தினமலர், தினமணி, ஜெயா டி.வி.க்கு நன்றி கூறினார்
  • பாரதீய ஜனதாவைப் பாராட்டிப் பேட்டி
சென்னை, ஜூலை 14- பாலியல் விவகாரத்தில் சிக்கி ஊர் சிரித்த நித்யானந்தா நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து தான் ஏதோ உத்தமப் புத்திரன் போல காட்டிக் கொள்ள முயற்சி செய்தார். செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணிறினார்.  இவருக்குப் பின் ஒரு மீடியா சக்தி - அரசியல் சக்தி இருக்கிறது என்பதை அவரின் பேட்டி  புலப்படுத்தியது.
வதை வாங்கிய ஒலிவாங்கி
செய்தியாளர்களை ஒரு மணி நேரத்திற்கு மேல் காக்க வைத்து, பின்னர் பேட்டிக்குத் தயார் என்ற நிலையில் அரங்கினுள் நுழைந்தார் நித்யானந்தா.  அவர் மேடையில் அமர்ந்து பேட்டி அளிக்கத் தொடங்கியபோது 20 நிமிடங்களுக்கு ஒலிவாங்கி வேலை செய்யவில்லை. ஒலி வாங்கி (Mike) செயல்படத் தொடங்கியதும் ஒலி பெருக்கி வேலை செய்ய மறுத்தது. இதனால் கோபமடைந்த ஒளிப்பதிவாளர்கள் குரல் கேட்காவிட்டால் பேட்டி தேவையில்லை என்று குரல் கொடுத்தனர். சாமி, உங்க Power- அய் வச்சு சரி பண்ணுங்க என்று கேட்ட குரலுக்கும் புன்சிரிப்புடனே அமர்ந்திருந்தார்.
செய்தியாளர்கள் எதிர்ப்பு!
தான் சிக்கலில் இருந்தபோது தினமலர், தினமணி, தினந்தந்தி, ஜெயா டி.வி., ராஜ் டி.வி. போன்ற ஊடகங்கள் சரியாக நடந்து கொண்டதாகவும், அதற்காக அவர் களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித் தார் நித்யானந்தா.  தன்னை அவதூறு செய்தவர்கள் என்று சில ஊடகங்களைத் தெரிவித்த நித்யானந்தா அவர்களை நோக்கித் துப்பியும், தனது பக்தர்கள் அவர்களின் உருவங்களை செருப்பாலடிப்பார்கள் என்றும் கூறி அநாகரீகமாக நடந்து கொண்டார்.
மேலும் நாய் போலக் கடித்தவர்கள் என்றும் ரவுடித்தனம் செய்வதாகவும் ஒரு சில பத்திரிகைகள் குறித்து அவர் எழுப்பிய விமர்சனத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த பத்திரிகையாளர்கள் அவர் சொன்னதைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூச்சல் எழுப்பினர்.
காவல்துறை தலையிட்டதால்  கொதிப்படைந்த பத்திரிகையாளர்கள் தாங்கள் வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர். பின்னர் காவல்துறையினரை வெளியேறச் சொல்லி நித்யானந்தா கேட்டுக் கொண்டார். இருப்பினும், தொடக்கம் முதல் சூழ்ந்தும், ஆங்காங்கு பத்திரிகையாளர்களோடு அமர்ந்து கண்காணித்துக் கொண்டும், கைதட்டி ஆரவாரம் செய்தும் எரிச்சல் ஊட்டிய நித்யானந்தாவின் பக்தர்களை அடக்கி வைக்குமாறும் கூச்சல் எழுப்பினர்.
மித்ர பேதம் செய்த நித்யானந்தா
பேட்டி தொடங்கியதிலிருந்து குறிப்பிட்ட பத்திரி கையையும், தொலைக்காட்சியையும் மட்டும் குற்றம்சாட்டி, அந்த ஊடகங்களின் நிருபர்களை அவமானப்படுத்தும் விதமாகப் பேசி மற்ற பத்திரிகைகளுக்கும் குறிப்பிட்ட ஊடகங்களுக்கும் இடையே மித்ரபேதம் செய்தபடியே இருந்தார். அவருடைய முயற்சியும் வென்றது. எப்போதும் பத்திரிகா தர்மம், பத்திரிகையாளர் உரிமைபற்றிப் பேசும் மூத்த பத்திரிகையாளர்கள் என்போர், எந்தக் கேள்வியும் எழுப்பாமல், அமைதி காத்ததன் பின்னணியில் இருப்பது என்ன? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தது.
அறிவியல் ஆன்மீக ஆராய்ச்சியாம்!
ஜூலை 15 ஆம் தேதி குரு பவுர்ணமி நாளாகக் கொண்டாடப்பட இருப்பதாகவும், பெங்களூர் பிடதியில் உள்ள தங்கள் தலைமையகத்தில் ஆன்மீக குண்டெலினி சக்தியை எழுப்பும் அறிவியல் ஆன்மீக ஆராய்ச்சியை சர்வதேச அறிவியலாளர்கள் முன்னிலையில் செய்து காட்ட இருப்பதாகவும், அந்த ஆராய்ச்சி மூலம் பல்வேறு நோய்களைக் குணப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.  ரேடியேஷன் மூலமாக 40 விழுக்காடு மட்டுமே புற்றுநோய் போன்றவை குணமாகும் என்றும், குண்டெலினியை எழுப்புவதன் மூலம் 1300 விழுக்காடு அதிகமாக சக்தி கிடைக்கும் என்றும் ஓரிரு நிமிடங்கள் அந்தரத்தில் பறக்க முடியும் என்றும் தெரிவித்தார். செல் எனர்ஜியை அதிகப் படுத்த முடியும் என்று அவர் சொல்லத் தொடங்கும் போதெல்லாம் தொந்தரவு செய்த ஒலிவாங்கியை மட்டும் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. யாரந்த அறிவியலாளர்கள் என்ற கேள்விக்கும் பெயரைச் சொல்லாமல் மழுப்பினார் நித்தியானந்தா.
இணையத்தில் அதிகமாக பார்க்கப்பட்ட குரு நான்தான்!
தான் எழுதிய நூற்றுக்கணக்கான நூல்களையும், ஆயிரக்கணக்கான மணி நேரம் ஆற்றிய உரைகளையும் உலகம் முழுக்க உள்ள நாடுகளில் பக்தர்கள் மதிப்பதாகவும், இணையத்தில் அதிக நேரம் பார்க்கப்பட்ட  இளைய குரு நான்தான் என்றும் தெரிவித்தார். அதற்கு முன்பு, தனது ஆபாச வீடியோவைப் போட்டு நக்கீரன் இணையம் அதிகமான வாசகர்களைச் சென்றடைந்திருப் பதாக alexa.com அறிக்கையை ஆதாரமாகக் காட்டிப் பேசியதைத்தான் தன் பெருமையாகச் சொல்கிறாரோ என்று செய்தியாளர்கள் சந்தேகப்பட்டனர்.
பதில் சொல்ல மறந்த (மறுத்த) கேள்விகள்
சொத்து மதிப்பு? பெப்பெப்பே....!
120 நாடுகளில் கிளைகள் உள்ளதாகப் பெருமை பேசிய நித்யானந்தாவிடம் உங்களின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு? என்று செய்தியாளர்கள் கேட்டதும், திடுக்கிட்டுப் போன சாமியார் சமாளித்துக் கொண்டு, ஆங்காங்கு வரும் வருவாயைக் கொண்டு பக்தர்கள் கிளைகளை நடத்துவதாகவும், அவற்றின் பொருளாதாரக் கட்டுப்பாடு தன்னிடம் இல்லை என்றும் சொன்னார். ஆனால் கடைசிவரை தன் சொத்து மதிப்பு - ஆசிரமத்தின் சொத்து மதிப்பு விவரங்களைத் தவறியும் வெளியிடவில்லை.
தொலைக்காட்சியில் காட்டப்பட்ட வீடியோவும், தடயவியல் ஆராய்ந்த வீடியோவும் ஒன்றுதானா? என்று தமக்குத் தெரியவில்லை என்று குறிப்பிட்ட நித்யானந் தாவிடம், அப்படியென்றால் தொலைக்காட்சியில் காட்டப்பட்டதை விட வேறு காட்சிகளும்  உள்ளனவா? அவை உண்மையானவையா? என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் தப்பித்தார் சாமியார்.
குறிப்பிட்ட பத்திரிகைகளின் சார்பில் தங்களை மிரட்டியோர், பணம் கொடுத்தால் வழக்கிலிருந்து விடுவித்து விடுவதாக பேரம் பேசினார்கள் என்று குற்றம் சாட்டினார் நித்தியானந்தா. அப்படியானால் காவல்துறை இதில் கூட்டுச் சதி செய்தது என்று குற்றம் சாட்டு கிறீர்களா? என்ற கேள்விக்கும் பதில் சொல்லாமல் தவிர்த்துவிட்டார்.
தங்களை அரசியல் ஆதிக்கம்தான் கைது செய்யச் செய்தது என்று குற்றம் சாட்டியவரிடம், உங்களைக் கைது செய்தது பெங்களூர் காவல்துறை அல்லவா? அங்கு ஆளும் எடியூரப்பாவும், பி.ஜே.பி.யும் உங்களுக்கு எதிராக சதி செய்தார்களா? என்ற கேள்விக்கு, அவர்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், பி.ஜே.பி.யை தான் குற்றம் சொல்ல மாட்டேன் என்றும் உதறிக் கொண்டார்.
மடாதிபதிகள் சுயநலவாதிகளா? உங்களுக்கு ஆதரவாக, எந்தவொரு சாமியாரும், மடாதிபதியும் ஆதரவு தரவில்லையே என்று கேட்கப் பட்டதற்கு, அவர்களைக் குறை சொல்ல மாட்டேன். அவர்களை சுயநலவாதிகள் என்றும் நான் சொல்ல மாட்டேன். அவர்கள் தங்களைக் காத்துக் கொள்ள அவ்வாறு இருந்திருக்கலாம் என்றார். தனக்கு நேர்ந்தது இந்து மதத்தின் மீதான மதத் தாக்குதல் என்றும் குற்றம் சாட்டினார். உங்கள் மடங்களைத் தாக்கியதும் படங்களை எரித்ததும் இந்து மக்கள் கட்சி என்போர்தானே? என்று  கேட்டதற்கு, யாரு அர்ஜூன் சம்பத்தா? அவருடைய பொண்டாட்டியையே அவரால் இந்து மதத்தல் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பற்றி சொல்லத் தொடங்கியவர் பாதியில் நிறுத்தி விட்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்தார். சரசம்... சல்லாபம்... சாமியார் என்று தன்னைப்பற்றி குமுதம் ரிப்போர்ட்டரில் தொடர் எழுதிய சாருநிவேதிதா பணம் சம்பாதிப்பதற்காக அவ்வாறு செய்ததாகவும், அவருடைய மனைவியே சாருவைக் குறித்து எழுதிய அந்தரங்கக் கடிதத்தை வெளியிடுவதாகவும் கூறி 9 பக்கக் கடிதத்தை வெளியிட்டார் நித்யானந்தா.
அதற்கு முன்பு உங்களைப் பாராட்டி எழுத எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்? என்று கேள்வி எழுப்பினர் பத்திரி கையாளர்கள்.
அதுதான்... அது இல்லை... அதுவும் இதுவும்
அத்துமீறி (Trespass)  (தனது அறையில்) எடுக்கப்பட்ட காட்சிகளுடன், அதன் மேல் மார்பிங் செய்து வீடியோ வெளிவந்திருப்பதாக முதலில் கூறிய நித்யானந்தா, பிறகு மற்றொரு கேள்விக்கு பதிலளித்த போது, மொத்தக் காட்சிகளும் அவதார் படத்தைப் போல மார்பிங் செய்யப்பட்டது என்றும் அதில் தன் உருவம் இல்லை என்று கூறினார். பிறகு அது தனது அறையே இல்லை என்றும் கூறினார். மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கும்போது, தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட வீடியோவை தான் சரியாக பார்க்கவில்லை என்றும் கூறினார். முன்னுக்குப் பின் முரணாகவே அவரது பதில்கள் இருந்தன.
இது மார்பிங் தான் என்று அமெரிக்காவின் ஹிண்டு பெடரேசன் என்ற அமைப்பு ஆய்வு செய்து தெரிவித்திருப் பதாக கூறினர் நித்யானந்தா. வேலிக்கு ஓணான் சாட்சி! ஆனால் கருநாடகக் காவல்துறையோ, இவை மார்பிங் அல்ல; உண்மையான காட்சிகளே என்று சான்றிதழ் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பேசத் தொடங்கியது முதல் அருவருப்பான தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தி வந்த நித்யானந்தா, தனது தற்காப்புக்காகவே தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்து வதாகத தெரிவித்தார். கழுத்தில் கிடந்த நித்யானந்தா டாலரை கையால் சுற்றி விளையாடியபடியே இருந்த மேடையில் அமர்ந்திருந்த நடிகை ரஞ்சிதா பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் சொல்ல மறுத்து, தான் ஏற்கெனவே எல்லாவற்றையும் சொல்லி விட்டதாகத் தெரிவித்தார்.
வாய்மூடிக் கிடந்த ஆங்கில ஊடகங்கள்
எந்த ஒரு பேட்டி என்றாலும் முண்டி அடித்துக் கொண்டு பிறரைக் கேள்வி கேட்க விடாமலும், பேட்டியாளரை பதில் சொல்லவிடாமலும் துளைத் தெடுக்கும் ஆங்கில ஊடகங்கள் நித்தியானந்தாவிடம் மட்டும் கேள்வி எழுப்பாமல் வாய் மூடிக்கிடந்தன. கடைசி நேரத்தில் நித்தியானந்தா சொல்ல நினைத்தவற்றை மட்டும், அதாவது சன் டி.வி., நக்கீரன் மீதான பழித்தலை மட்டும் பதிவு செய்து கொண்டு திரும்பினர்.
ஆட்சி மாற்றம் - காட்சி மாற்றம்
ஆட்சி மாற்றத்தின் காரணமாகத்தான் நீங்கள் தைரியமாக வெளியில் வந்து பேட்டி தருகிறீர்களா? தற்போதைய அரசு உங்களுக்கு ஆதரவாக இருக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இந்த அரசின் மீதுள்ள நம்பிக்கையில்தான் வெளிப்படையாக புகார் கொடுத்திருப்பதாகவும், விரைவில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திப்பேன் என்றும் அறிவித்தார். அவர் வழங்கியிருக்கும் புகார்களும், தெரிவித்த குற்றச்சாட்டு களும், அண்மையில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள பழி வாங்கும் நடவடிக்கைகளின் தொடர்ச்சி என்பதைப் போலவே இருந்தன. நில மோசடி, சக்சேனாவும் அவருடைய உதவியாளர் அய்யப்பனும் மிரட்டினார்கள், பணம் கேட்டார்கள், பெரும் பணக்காரர்கள் நாட்டை விட்டு ஒடி விட்டனர் என்றெல்லாம் அவர் பயன்படுத்திய வாசகங்கள் அண்மைக்கால நிலவரத்தில் அதிகம் செய்தியில் இடம் பெற்ற, தமிழக அரசின் நடவடிக் கைகளின் பிரதிபலிப்பாகவே இருந்தது.
காவல்துறை வழி நடத்தலா?
காவல்துறையிடம் புகார் கொடுக்க தன் தரப்பிலிருந்து சென்றிருப்பதாகவும், அதற்குமுன் ஆதாரங்களை வெளியிடாமல் இருக்குமாறு காவல்துறை கேட்டுக் கொண்டதாகவும் கூறிய நித்யானந்தாவிடம் அப்படியென்றால், காவல்துறை எப்படி நடந்து கொள்ள வேண்டுமென உங்களை வழி நடத்துகிறதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
பெரும்பாலான கேள்விகளுக்கு, பதில் சொல்வதைத் தவிர்த்தும், மழுப்பியும், காவல்துறை வெளியிடக் கூடாது என்று சொல்லியிருப்பதாக சமாளித்தும், பத்திரிகை யாளர்களிடம் சிண்டு முடிந்து விட்டும், தான் தப்பிக் கொள்ளும் தந்திரரோபாயத்தைத் தொடக்கம் முதலே கைக் கொண்டார் நித்யானந்தா. தான் அவதூறு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய சாமியார் நித்யானந்தா எழுத்தாளர் சாருநிவேதிதா, அர்ஜுன்சம்பத், ஊடகங்கள், மடாதிபதிகள் என எண்ணற்றோர் குறித்து அவதூறு செய்தபடியே இருந்தார்.
கூச்சலும் குழப்பமுமாக நடந்து முடிந்த செய்தியாளர் சந்திப்பில் எடிட் செய்யப்படாத, மார்பிங் செய்யப்படாத தனது முதல் வீடியோவைத் தான் செய்தியாளர்களிடம் வெளியிடுவதாகத் தெரிவித்த நித்யானந்தா, கடைசி வரையில் வீடியோ காட்சியைத் தராமல் செய்தியாளர் களை ஏமாற்றத்தில் ஆழ்த்தினார்.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com