Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Thursday, 14 July 2011

சமச்சீர் கல்வியின் முக்கியத்துவம்

0 comments

பள்ளி நாட்கள் வீணாகிறது..! குழந்தைகளை படிக்கவிடுங்கள்..!


-ஜே.கிருஷ்ணமூர்த்தி
              சமச்சீர் கல்வி என்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பதை முதலில் பதிவு செய்ய விரும்புகிறேன். நான்கு விதமான பாடத்திட்டங்களை ஒரே முறையில் மாற்றியதும் வரலாற்று சாதனைதான். இந்த சமச்சீர் கல்வியில் உள்ள குறைகளைக் களைய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற் றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் அது சமச்சீர் கல்வி அமலாக்கத்தை நிறுத்தி விட்டுச் செய்ய வேண்டும் என்ற அவசியத் துடன் தொடர்புடையது அல்ல. திட்டத்தை அமலாக்கிக்கொண்டே குறைகளைக் களை யலாம். அதுதான் மாணவர்களின் எதிர்காலம் குறித்த அக்கறை உள்ள செயலாக இருக்கும். தற்போது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
       தமிழக பாடத்திட்டம், மெட்ரிக்குலேசன் பாடத்திட்டம், ஓரியண்டல், ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டம் என்ற நான்கு முறைகள் மாற்றப்பட்டுள்ளது அனைத்து மாணவர்களுக்கும் நல்லது. இந்த நான்கு பிரிவுகளின் தேவை என்ன? தனியார் கல்வி நிறுவனங்கள் செழித்து வளரவும், பாடநூல் அச்சிடும் பல்வேறு வணிக புத்தக நிறுவனங்கள் கொள் ளை லாபம் அடிக்கவும்தான் பயன்பட்டது. மக்களிடம் உருவாக்கப்பட்ட ஆங்கில மோகத் திற்கு தீனிபோட இந்த மெட்ரிக் பள்ளிகள் உதவின. இதற்கு தரம் என்ற பெயரில் விளம்பரம் வேறு செய்யப்படுகிறது.
         மூன்று மாதங்களுக்கு முன்பு தனியார் மற்றும் அரசுக்கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஒரு சர்வே எடுப்பதற்காக ஒரு தேர்வு நடத்தப்பட்டது. அதாவது அவர்கள் நடத்தும் பாடத்திலிருந்து கேள்விகள் தயாரிக்கப்பட்டு இந்தத்தேர்வு நடந்தது. இந்தத் தேர்வு முடிவில் 60-70 சதவிகிதம் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் மிகவும் மோசமாகத் தேர்வை எழுதியிருந்தனர். ஆனால் அதே அளவு அரசுக்கல்லூரி ஆசிரியர்கள் சிறப்பான முறையில் தேர்வை எழுதியிருந்தனர். இதிலிருந்து நீங்கள் எந்த முடிவுக்கு வருவீ ர்கள்? இந்த நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் 90 சதவீதம் பேர் அரசுப் பள்ளிகளிலும் தாய்மொழியிலும் படித்தவர்கள் தான். ஆக, தரம் என்பது எவ்வளவு அதிகமான அழுத்தமான பாடங்களை நடத்துவது என்பதில் இல்லை. எவ்வளவு தெளிவாக மாணவர்கள் கற்றுக் கொள்கிறார்கள் என்பது தான். தரம் என்ற சொல்லைப் பயன்படுத்தி தங்கள் லாபவேட்டையைத் தொடரவே தனியார் கல்வி நிலையங்கள் திட்டமிடுகின்றன.
        நாம் அரசுப்பள்ளிகளின் பிரச்சனைகளைத் திறந்த மனதுடன் விவாதிக்கின்றோம். எனவேதான் தனியார் பள்ளிகள் திறமை என்ற வாதத்தால் இதனை திசைதிருப்பி மக்களை அழைக்கிறது. தனியார் பள்ளி களில் இருப்பதும் ஒருபக்க இயக்கம்தான். அது மதிப்பெண் சார்ந்த ஒரு பக்க இயக்கமாகும். அதாவது அங்கு தரமான கல்வி என் பது தேர்ச்சி சார்ந்த இயக்கமாக கட்டண மாக்கப்படுகிறது. அவர்களுக்கு அதுதான் முக்கியம். அங்கு இன்றைய நாட்டின் தேவை சார்ந்த சந்ததியை உருவாக்குவதில் 
அக்கறை இல்லை. சந்தைக்குத் தேவையான சந்ததியை உருவாக்குவது, அவர்களின் நோக்கமாக உள்ளது. அதுவும் 1990க்குப் பின் பன்னாட்டுச் சந்தையின் தேவையைக் கொண்டே சந்ததியை உருவாக்குகிறார்கள்.

       ஆக, கடுமையான உழைக்கும் ஆசிரியர்கள், மாணவர்களின் முகம் கொண்டு அவர்களைப் புரிந்துகொள்பவர்களாக இருப்பதுடன், வகுப்பறைகள் ஜனநாயகத் தன்மையுடன் இருபக்க இயக்கம் உள்ளதாகவும் இருக்கும் இரு விஷயங்களும் முக்கியமானவை.
           80 சதவிகித மக்கள் வறுமையில் உழல்கின்றனர். தொலைந்துபோன தங்கள் வாழ்க்கையை உழைப்பால் அவர்கள் தேடித்திரிகின்றனர். இப்படியான ஒரு சூழலில் மக்கள் குறித்தும், சமயச்சார்பு, இறையாண்மை போன்ற நடவடிக்கைகளில் மாணவ சமூகம் இயல்பாக கவனம் செலுத்தும் சந்ததியாக வெளிவராதது ஏன்? வகுப்பறைதான் ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது எனில் அந்த இடத்தில் மேற்கண்ட விவாதங்கள் நடக்கிறதா? வகுப்பறை ஜனநாயகம் என்பது ஆசிரியரும் மாணவரும் சமமாக இணைந்து கற்றலில் பங்கேற்பது. ஆனால் நடப்பது என்ன? அதிகாரம் - அடங்குதல் என்ற ஒருபக்க இயக்கம்தானே. இது சமூகத்தில் ஒரு அங்கமாக வரும் மாணவனை அதிகாரம் செலுத்தும் அல்லது அடங்கிப்போகும் ஒருவனைத்தானே உரு வாக்கும்.
       ஆக, சமூகத்திற்கான மாணவர்களை சந்தைக்கான மாணவர்களாக மாற்றுவது சரியான வளர்ச்சியா? அதுவும் குறிப்பாக மதிப்பெண்களே அவர்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்றால், அவர்களின் சமூக அக்கறை எப்படி இருக்கும்.
       சிறந்த எதிர்கால சமுதாயத்திற்கான பாடத்திட்டம் என்பதிலிருந்து அன்றைய ஆட்சியாளர்களின் தேவையை உள்ளடக்கிய பாடத்திட்டங்களாக மாற்றப்படுவது வேதனைக்குரியது. கல்வியாளர்களும் இந்த மாற்றத்திற்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்கிறார்கள். இருப்பினும் பாடத்திட்டம் அதிகபட்சம் நமது நாட்டின் அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு உட்படுத்தப்பட்ட பிரதானஅம்சங்களை இன்னும் இழந்து விடவில்லை.
    பாடத்திட்டம் எப்படி இருப்பினும் அதை அடிப்படையாக வைத்து வகுப்பறையை எப்படி நடத்துகிறோம் என்பது முக்கியம். ஆசிரியர்கள் நினைத்தால் இந்தப்பாடத்திட்டத்தை வைத்தும் மாற்றத்தை உருவாக்க முடியும்.
    நமது நாட்டின் இருபெரும் தலைவர்களான ஜோதிபாசுவும் இந்திராகாந்தியும் வெளிநாட்டில் ஒரே பல்கலைக்கழகத்தில் தான் படித்தார்கள். அங்கு வரும் இந்திய மாணவர்களுக்கு ஆங்கில டியூசன் 
நடத்தினார்கள். அவர்களின் சிந்தனைப் போக்கு இரு துருவங்களாகப் பிரிந்து நின்றது. இதில் அவர்களின் வகுப்பறைக்குப் பங்கு இல்லை எனச் சொல்ல முடியுமா?
            நாற்பது ஆண்டுகளுக்கு முன் அதாவது 1970களில் சோவியத் யூனியனில் ஒரு பரிசோதனை நடத்தப்பட்டது. அதாவது அப்போதெல்லாம் அங்கு ஐந்து வயது நிறைவடைந்தால்தான் பள்ளியில் சேர்க்க முடியும். ஆனால் அதே சமயம் அமெரிக்கா போன்ற நாடுகளில் மூன்று வயது நிறைவடைந்தால் மழலையர் பள்ளிகளில் சேர்க்கலாம். இரண்டு வருடம் முன்பே குழந்தைகள் கல்வி நிலையத்திற்கு வரும் முறையை நாமும் ஏன் செய்யக்கூடாது என்று எண்ணிய சோவியத் அரசு, அதற்காக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர் அடங்கிய குழுக்களை உருவாக்கியது. ஒன்றியத்திற்கு ஒரு பள்ளி என்ற அடிப்படையில் மாதிரிப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவ்வப்போது பெற்றோர்களுடன் கலந்துரையாடல், குழந்தைகளின் விருப்பங்களைக் கேட்டறிதல் என நடந்தது.
       இறுதியாக பெற்றோர்களின் உதவியுடன் ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டது. 1.வகுப்பறை செயல்பாடுகள் குறைந்த அளவு இருக்க வேண்டும். 2. விளையாட்டுக்கான நேரம் கூடுதலாக்கப்பட வேண்டும். 3.ஓய்வுக்கான சூழல் இருக்க வேண்டும். 4. எழுத்துப்பயிற்சி மிகக்குறைந்த அளவே வேண்டும் என ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் சுற்றுக்கு விடப்பட்டது. பெற்றோர்களிடம் விவாதம் நடத்தப்பட்டது. இரண்டு வருடம் முன்பே கல்விக்கூட ஒழுங்கு முறைக்கு குழந்தைகள் பழகுவது மகிழ்ச்சி என்றாலும் “எங்கள் குழந்தையின் 
விளையாட்டுப்பருவம் இரண்டு வருடம் திருடப்பட்டு விடுமோ என அஞ்சுகிறோம்” என பெரும்பாலான பெற்றோர்கள் கருத்துச் சொன்னார்கள். இந்த எண்ணம் குழந்தைகளுக்கு ஏற்படாத வண்ணம் அமலாக்க வேண்டும் என்றனர். அதற்கு பின்னரே சோவியத் அரசு இந்த முறையை ஏற்றுக்கொண்டது.
     எனவே பெற்றோர்-மாணவர் பங்கேற்புடன் கல்வித்திட்டம் அமலாவதுதான் ஒரு சிறந்த சமூக அமைப்பின் அடிநாதமாய் இருக்க முடியும்.
        ஏழைகள் மேலும் ஏழைகளாக, பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறவே இன்றைய கல்வி இதுவரை பயன்பட்டுள்ளது. ஏழைகள் தங்கள் வாழ்வில் முன்னேற வேண்டாமா? இது நிகழ வேண்டுமெனில் கல்வியை அரசியல்மயப்படுத்தாமல் சமூக மாற்றத்திற்கு சாத்தியம் இல்லை. இது நிகழும் போதுதான் சமூகம் அரசியல்மயப்படுத்தப் படும். அரசியல் என்பதைக் குறுகிய கண்ணோட்டத்துடன் இங்கு பொருத்திப்பார்க்க வேண்டாம் என குறிப்பிட விரும்புகிறேன்.

ஏழைகள் அதாவது உழைப்பாளி மக்கள் வாழ்க்கையில் மாற்றம் வரவேண்டுமானால் அதற்கு தேவையான கல்விச்சூழலும், கல்வி முறையும், நாளைய சமூகத்தை உருவாக்கும் ஜனநாயகப்படுத்தப்பட்ட வகுப்பறைகளும் தேவை. இதுவே சிறந்த அரசியலாக இருக்க முடியும்.

நன்றி: புத்தகம் பேசுது நேர்காணல் (ஜூலை 2011)

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com