Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Wednesday, 6 July 2011

மாணவர் மூளையைக் குப்பை லாரியாக மாற்ற...

0 comments
by Kumaresan Asak on Wednesday, July 6, 2011 at 12:53pm

ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும் அறிக்கை
6-7-2011
 எதிர்பார்த்தபடியே தமிழக அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளும் தனியார் பள்ளி உரிமையாளர்களும் கொண்ட நிபுணர் குழு சமச்சீர் கல்வி பாடத்திட்டமும் பாடப்புத்தகங்களும் தரமற்றவை என்று உயர்நீதிமன்றத்துக்கு அறிக்கை கொடுத்துள்ளது.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பழைய பாடப்புத்தகங்களையும் புதிய சமச்சீர் பாடப்புத்தகங்களையும் ஆய்வு செய்து பழைய புத்தகங்களைவிட புதிய புத்தகங்கள் தரத்திலும் வடிவமைப்பிலும் மேம்பட்டதாக இருப்பதாக தொடர்ந்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.

கல்வியாளர்கள்,பெற்றோர்கள்,ஆசிரியர்கள் என யாரையும் கலந்தாலோசிக்காமல் இரண்டே வாரத்தில் 40 பாடப்புத்தகங்களையும் விரிவாக ஆய்வு செய்து 800 பக்கத்துக்கு ஆய்வறிக்கை தயாரித்துள்ளனர்.ஏற்கனவே எழுதப்பட்ட தீர்ப்புக்கு ஏற்றாற்போல வசனம் எழுதும் வேலையைத்தான் இந்நிபுணர்குழு செய்துள்ளது.இக்குழுவின் அறிக்கை தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள்தான் தரத்தின் தாய்-தகப்பன் போலவும் கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்கள் உடனடியாக அந்தத் தரத்தை எட்டும் திறனற்றவர்கள் என்றும் போகிறபோக்கில் கருத்துக் கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கான பிரச்சார மேடையாக இவ்வாய்வறிக்கையை இக்குழு பயன்படுத்தியுள்ளது.

தரம் என்ற பெயரில் ஏற்கனவே பள்ளிக்கல்வியில் நிலவி வரும் ஏற்றத்தாழ்வை நிரந்தரபடுத்தும் முயற்சிதான் இப்போது நடைபெற்று வருகிறது.தமிழக அரசுக்கும் தனியார் மெட்ரிக் பள்ளியாரின் கருத்துத்தான் கல்வி குறித்த கருத்தாக இருக்கிறது என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.கட்டணக் கொள்ளையர்களான தனியார் பள்ளிகள் மாணவர் மூளைகளைக் குப்பை லாரி போலக்கருதி தேவைக்கு அதிகமான தகவல் குப்பைகளை ஏற்றி விடுவதே தரமான கல்வி என்கிற கருத்தில் இருப்பவை. 11000 தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களைப்பார்க்கிலும் 45000 அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்பால் அக்கறை கொண்டதாக அரசு இருக்க வேண்டும்.

அடிப்படைக்கட்டமைப்பு வசதிகள் இல்லாத அரசுப்பள்ளிகளில் பயிலும், வருமான ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் சமூகரீதியாகவும் பின் தங்கிய லட்சோப லட்ச ஏழை மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்திப், பன்னெடுங்காலமாக கல்வித்துறையில் நிலவி வரும் ஏற்றத்தாழ்வைப் போக்கிட சமச்சீர் கல்வி மிக அடிப்படையான தேவையாகும்.தமிழக கல்வி வரலாற்றில் அனைவருக்கும் ஒரே பாடத்திட்டம் ஒரே பாடப்புத்தகம் என்று கொண்டுவரப்பட்டதானது ஆயிரம் குறைபாடுகள் இருந்தபோதும் , மிக முக்கியமான திருப்புமுனையாகும். அதுவும் தானாக வரவில்லை.மாணவர்களும் பெற்றோர்களும் , பல்வேறு அமைப்புகளும் குறிப்பாக இந்திய மாணவர் சங்கம் அடியும் உதையும் பட்டுப் போராடிக் கொண்டுவரப்பட திட்டமாகும்.அதை ஒரு நாளில் இல்லாமல் செய்ய நடக்கும் இம்முயற்சிகள் முறியடிக்கப்பட்டாக வேண்டும்.

கல்வியாளர்களும்,மாணவர்களும் பெற்றோர்களும்,பல்வேறு ஜனநாயக அமைப்புகளும் ஒரு மனிதனைப்போல எழுந்து நின்று இச்சதிகளை முறியடிக்க வேண்டும்.

நன்றி :
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com