Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Thursday, 23 June 2011

சமச்சீர் கல்வி சில கேள்விகள்

0 comments

சமச்சீர் கல்வி சில கேள்விகள் 

கண்ணைக்கட்டிக் காட்டில்விட்டதைப்போல் இருக்கிறது என்ற பழமொழிக்கான பொருளை இப்போது தெளிவாக உணர முடிகிறது. சமச்சீர் கல்வி தமிழகத்தில் வருமா? வராதா? எந்தப் பாடத்திட்டத்தைப் படிப்பது? 3 வாரகாலத்துக்குக் காத்திருக்கவேண்டிய நிலையில் தமிழக மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் உள்ளனர். சமச்சீர் கல்வி என்ற விவாதம் கடந்த ஐந்தாண்டுகளாகத் தீவிரமாக இருந்தது.

தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் ஆட்சிமாற்றம் விவாதத்தை மேலும் நீடிக்கச் செய்வதாக அமைந்திருக்கிறது. கடந்த ஐந்தாண்டு காலத்தில் முனைவர் ச. முத்துக்குமரன் தலைமையில் பல்வேறு விவாதங்களை, கருத்தறிதல்களை மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு பரிந்துரைத்தவைகளிருந்து ஒரு சிலவற்றைமட்டுமே கடந்த திமுக ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். முழுமையாக அமல்படுத்தவில்லை என்றும் நான்குவாரியங்களைக்
கலைத்து ஒன்றாக இணைக்கும் ஆற்றலை திமுக அரசு கொண்டிருக்கவில்லையென்றும், கல்வியாளர்தரப்பு, திமுக மீது விமர்சனங்களை முன்வைத்தது.

மேலும் அதை எதிர்த்துப் பிரசாரங்களையும் மேற்கொண்டிருந்தனர்.
இந்த விமர்சனங்களும், வெறுப்புகளும் அதிமுக மேற்கொண்ட நடவடிக்கையால், அதிமுக மீது திருப்பிவிடப்பட்டிருக்கிறது என பெற்றோர்கள் பரவலாகப் பேசிக்கொள்வதைக் கேட்க முடிகிறது.
முனைவர் ச. முத்துக்குமரன் குழு பரிந்துரைகள் அனைத்தையும் அப்படியே ஏற்று அமலாக்க வேண்டுமென, தமிழகப் பெற்றோர்கள் எதிர்பார்க்கவோ விரும்பவோ இல்லை. ஆனால், பாடத்திட்ட அளவில் வந்துவிட்ட அமலாக்கத்தை முழுமையாக நிறுத்திவைத்து, புதிய குழுவை அமைத்து, புதிய வகையில் தரம் உயர்த்தப் போவதாக இப்போதைய மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகளும், சட்டத்திருத்தமும் பெற்றோர்களை 10-ம் வகுப்பு மாணவர்களை, கல்வியாளர்களைச் சங்கடத்துக்கு ஆளாக்கியுள்ளது.

இப்போது உச்ச நீதிமன்றம் 3 வாரகாலத்துக்குப் பள்ளிகள் திறந்து இருக்கலாம்; எந்தப் பாடத்திட்டமும் நடத்தப்படக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. அமலுக்கு வந்துவிட்ட கல்வியாண்டைக் கணக்கில்கொண்டு, மாநில அரசு தரம் உயர்த்துவதற்கான குழுவை மட்டும் நியமித்திருந்தால், கல்வியாளர்கள் பலரும் ஏகோபித்த வரவேற்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். ஏனென்றால், கடந்த திமுக ஆட்சியின்போது பாடத்திட்டங்களை மட்டும் ஒருங்கிணைத்து ஒன்றாக்குவதை சமச்சீர் கல்வி என்கிற சாதனைப் பட்டியலுக்குள் அடைக்கப்பார்த்தது.

இந்நிலையில் பாடத்திட்டம் அமலுக்கு வரும் என்கிற நம்பிக்கையோடு இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பத்தாம் வகுப்புக்குச் செல்லும் மாணவர்கள் பாடப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கிவிட்டனர். உளவியல் ரீதியில் இதுதான் பாடப் புத்தகம் என்கிற மனநிலைக்கு வந்துவிட்ட மாணவர்கள், இப்போதைய அரசின் அறிவிப்பால் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும் தங்களின் எதிர்ப்புகளைப் பதிவுசெய்து வருகின்றனர்.

கல்வி குறித்த விவாதத்தில், ஐரோப்பிய நாடுகளை விடவும் நாம் பின்தங்கி இருந்தாலும், 100 ஆண்டுகளுக்கு முன்பாகவே காந்தி, விவேகானந்தர், அம்பேத்கர், ரவீந்திரநாத் தாகூர், பெரியார், பாரதியார் என பல இந்திய அறிஞர் பெருமக்கள் கல்வி குறித்த சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இவை அனைத்தையும் உள்வாங்கியதாக இந்தியக் கல்விமுறை இன்னும் மாற்றம் பெறவில்லை.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை தமிழ்மொழிக் கல்வி அவசியம் என்கிற சட்டத்தை அறிமுகம் செய்த நேரத்தில், அன்றைய நீதிமன்றம் தலையிட்டு அதற்குத் தடை விதித்தது. அன்றைக்குப் பெற்றோர்களும் ஆங்கில அறிவு இல்லாமல் உயர்கல்விக்குச் செல்வது, புரிதலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என பிரசாரம் செய்தனர். அன்றைக்கும், இன்றைக்கும் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுக் கொண்டாடியவர்கள் தமிழகத் தனியார் பள்ளி உரிமையாளர்கள் ஆவர்.

உலகில் முன்னேறிய நாடுகள் அனைத்தும் அருகாண்மை பொதுப்பள்ளி முறையை அமலாக்கி வருகின்றன. இந்தியாவில் உள்ள பலர் தங்களின் வாதத் தேவைக்காக அமெரிக்காவை முன்னுதாரணம் காட்டுவது உண்டு. அத்தகைய அமெரிக்காவில் அருகாண்மை பொதுப்பள்ளிகள்தான் அமலில் உள்ளன. நம்முடைய தமிழகத்தில் இத்தகைய பள்ளிமுறை வருவதை எதிர்க்கும் நோக்கம் புரியாததாகவே உள்ளது.

குடிக்கும் தண்ணீரைக்கூடப் பணம் கொடுத்து வாங்கும் பண்பாடு வளர்ந்துவிட்ட நம் நாட்டில், கல்வி பெறுவதற்கு எவ்வளவு பணம் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே அது உயர்ந்த தரமான கல்வியென மதிப்பீடு செய்யப்படுகிறது. கல்வி பெறுவதை உரிமையாக அளிப்பதற்குப் பதிலாக, வணிகப் பொருளாக ஆட்சியாளர்கள் மாற்றியிருப்பது அவலத்தைப் பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது.

குறிப்பாக, ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வும், போராட்டங்களும், காலவரையற்ற உண்ணாவிரதங்களும் அதிகரித்துள்ள இன்றைய நிலையில் கல்வி வணிகமாவது ஏன் என்கிற கேள்விக்கு உள்ளாக்கப்படவில்லை. பள்ளிக் கல்வியை முடிப்பதற்குப் பல லட்சங்களைச் செலவிடும் மாணவரும், பெற்றோரும் அந்தச் செலவினத்தை எதிர்காலத்தில் அடைவதற்காகத் தவறு செய்யமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஊழல் எதிர்ப்பில் முன்னின்று கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் பெரும்பாலும் நடுத்தர மக்களே. ஊழலுக்கான ஊற்றுக்கண்ணாக கல்வி வணிகம் அமைந்திருப்பதைக் கணக்கில் கொள்ளாதது வியப்பளிக்கிறது.

இன்று தமிழகத்திலும் மத்திய ஆட்சிப் பொறுப்பிலும் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பல்வேறு கல்லுரிகளையும், பள்ளிகளையும் நடத்தும் தாளாளர்கள் என்பதை மறுக்க இயலாது. இன்றைக்கு அரசியலுக்கு வருகிற பணத்தில் கணிசமான பங்கு சுயநிதிக் கல்லுரிகளிலும், பள்ளிகளிலும் உற்பத்தி செய்யப்படுகிறது என்று கல்வியாளர் முனைவர் ச. அனந்தகிருஷ்ணன் தெரிவித்தார்.

எனவே, இன்று ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கிற கல்வி வணிகத்தைத் தடுப்பது குறித்து தீவிர கருத்துப் பிரசாரம் அவசியப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் சமவாய்ப்பை அளிக்கிற சமச்சீர் கல்வி அமலாக்கத்தை வலியுறுத்துவதில் நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த பெற்றோர்களுக்குப் பெரும்பங்கு இருக்கிறது.

ஐரோப்பிய யூனியன் உருவான பிறகு, கரன்சி, வர்த்தகப் பரிமாற்றம் ஆகியவற்றில் ஒருங்கிணைப்பை உருவாக்கியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக பொதுக் கல்விமுறை உருவாக்கத்தையும் அமலாக்குவது குறித்து திட்டமிட்டு வருகின்றனர்.

அதற்காக 2010-ம் ஆண்டில் 30 லட்சம் மாணவர்களைக் கொண்டு கல்வித்துறையில் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் நோக்கம் ஏற்கெனவே பெற்ற வளர்ச்சியை அடுத்த தளத்துக்குக் கொண்டு செல்வதைத் தவிர வேறில்லை. அதேநேரத்தில் இந்தியா போன்ற நாட்டில் யுனேஸ்கோ குறிப்பிட்ட கருத்தை உள்வாங்கிக் கொள்வது தேவையாகி இருக்கிறது. தரமான கல்வி என்பது குறித்து பல்வேறு வரையறைகள் உள்ளன. வளர்ந்துவரும் நாடுகளில் கல்வியின் தரம், குடும்பத்தின் பங்களிப்பு, வழிகாட்டுதல், உள்ளூர் வளம், பண்பாடு ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது.

வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற கல்வி, குறிப்பிட்ட பகுதி மக்களின் பண்பாட்டைக் குறைத்து மதிப்பிடுவதற்காகவும், அதைத் தனிமைப்படுத்துவதற்காகவும் பயன்படுகிறது. குழந்தைகளை ஒருவித அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறது. எனவே, இவைகுறித்து தீவிர விவாதங்களிலிருந்து தரமான கல்வியை அடைவதற்கு முயற்சிக்க வேண்டுமென யுனேஸ்கோ ஆய்வு அறிக்கை (2008) தெரிவிக்கிறது.

ஒரு வாதத்துக்காகக் கூறுவது என்றால், அனைத்துவிதமான அரசுகளும் தங்களுக்கு என்று சாதகம் உள்ள அமைப்பு ரீதியாக ஏற்பாடுகளை கொண்டிருக்கத்தான் செய்கின்றன. கல்வித்துறை, பாடத்திட்டம் இதற்கு விதிவிலக்கல்ல என்று ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் ஒரு கருத்தரங்கில் தெரிவித்தார். தமிழகத்தில் சமச்சீர் கல்வி அமலாக்கத்தைப் பொறுத்தவரையில், அத்தகைய சாதக அம்சங்களை கொண்ட தன்மையில் அமைய வேண்டும் என விருப்பம் கொண்டவர்களாக திமுக மற்றும் அதிமுக ஆட்சியாளர்கள் இருக்கிறார்களா என்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை.

சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் திமுக தலைவர் மு. கருணாநிதி எழுதிய பாடல் இடம்பெற்றிருப்பதை ஆளும்கட்சி விவாதம் ஆக்கவில்லை என்றாலும், கருணாநிதி வலிய முன்வந்து பாடலை அகற்றக்கோரி இருப்பது ஏற்கமுடியாத அரசியல். இப்போது சொல்வதைக் கடந்த ஆண்டே எடுத்திருந்தால் ஒருவேளை பாராட்டுக்குரியவராக இருந்திருப்பார். இன்னொரு வகையில் பார்க்கிறபோது யார் எழுதியது என்பதைவிட என்ன எழுதப்பட்டது என்ற கோணத்தில் புரிந்துகொள்கிற அரசியல் பண்பாடு தேவையாக இருக்கிறது. இதுபோன்ற பெருந்தன்மைக் குறைவால் தமிழக மாணவர்களும், பெற்றோர்களும் சிரமத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

3 வார காலம் 1 மற்றும் 6-ம் வகுப்புகளைத் தவிர மற்ற மாணவர்கள் தேவையற்ற காத்திருப்புக்கு ஆளாகியுள்ளனர். பாடப்புத்தங்களைப் பின்பற்றுவது என்பது இயலாத இந்த 15 நாள்களைக் கண்டு பெற்றோரும், மாணவர்களும் அஞ்சத்தேவையில்லை. பாடப்புத்தகங்களுக்கு அப்பால் கல்வி முறையும், போதனைமுறையும், அறிவு வளர்ச்சிக்குத் துணைசெய்கிற வகையில் ஏராளமான உதாரணங்கள் நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றன. அவைகளைப் பின்பற்றுவது அவசியம்.

இக்காலத்தில் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான செயல்வழி கல்வித் திட்டம் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அடிப்படைக் கணிதம், அறிவியல் துறைகளில் உயர் கல்வி மாணவர்களுக்கும்கூட சில பயிற்சிகளை அளிப்பது குறித்து ஆசிரியர் சமூகம் திட்டமிட வேண்டும். செய்முறைக் கல்வி, கல்விச் சுற்றுலா, நூலகத்தைப் பயன்படுத்துதல், விளையாட்டு மற்றும் எழுத்துத் துறைகளில் மாணவர்களை மேம்படுத்த இக் கால அவகாசம் பயனளிக்கலாம். ஆட்சியாளர்களுக்கு நமது வேண்டுகோள் 3 வாரத்தோடு இந்த ஆண்டுக்கான பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே.
 - எஸ். கண்ணன்
 

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com