Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Sunday, 26 June 2011

முற்றும் துறந்த சாமியார்கள் அறையைத் திறந்தால்... மகா கேவலம்...!

0 comments
                 இன்றைக்கு   நாட்டில் சாமியார்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்பது அதீதமானது.  ஏராளமான மக்கள் - குறிப்பாக படித்த மக்களேக் கூட சாமியார்கள்  செய்யும் சித்து விளையாட்டுகளில் மயங்கி அவர்களது காலடியிலேயே விழுந்து கிடக்கின்றனர். இப்படியாக மாயஜால வித்தைகளை காட்டி அப்பாவி மக்களின் பணங்களையும், சொத்துக்களையும் அபகரிக்கும் சாமியார்களை தான் நாம் இப்போது நம் கண் எதிரே பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்படித்தான் பல லட்சம் கோடி சொத்துக்களை இந்த சாமியார்கள் சேர்த்துவிடுகிறார்கள். இன்றைக்கு இந்தியாவில் மூலதனமே இல்லாமல் பல லட்சம் கோடிகளை சம்பாதிக்கும் தொழில்களில் ஒன்று இந்த சாமியார் தொழில் என்பது தான் உண்மை. ஆட்சியாளர்களின் துணை இருப்பதால்  இப்படி சம்பாதிக்கும் பணத்திற்கு கணக்கு வழக்கு கிடையாது. வருமானவரி கட்டத் தேவை இல்லை. குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர்கள், மத்திய - மாநில அமைச்சர்கள் மற்றும் பெரும்பணக்காரர்கள் என மேல்தட்டு குடிமக்கள்  முதல் சாதாரண குடிமக்கள் வரை  இவரது பக்தகோடிகளாக இருக்கிறார்கள். அதனால் அரசு இவர்களது வருமானத்தைப் பற்றியோ, வளர்ச்சிகளை பற்றியோ  கண்டுகொள்வதே இல்லை. பெரிய, பெரிய சாமியார்களின் (அதிகாரப்பூர்வ) சொத்து விபரங்களைப்  பார்த்தால் மலைப்பூட்டும் அளவிற்கு சொத்துக்கள் மலையாய் குவிந்த்திருக்கிறது. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை பல முற்போக்குச் சிந்தனையாளர்களும், பகுத்தறிவாதிகளும் சாமியார்களின் சித்து விளையாட்டுகளை பற்றியும், ஏமாற்று வேலைகளை பற்றியும் எவ்வளவோ எடுத்து சொல்லியிருக்கிறார்கள். ஆனால்  இப்போது தான் இந்த சாமியார்களெல்லாம்  ஒரு மோசடி சாமியார்கள் என்பதை  மக்கள்  ஒவ்வொன்றாக புரிய ஆரம்பித்திருக்கிறார்கள்.          
 
புட்டபர்த்தி சாய்பாபா : 

             அண்மையில் மரணமடைந்த புட்டபர்த்தி சாய் பாபா பயன்படுத்தி வந்த அவரது சொந்த அறையை திறந்து பார்த்திருக்கிறார்கள். அங்கு அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி தான் காத்திருந்தது.  அந்த சாமியாரின்  ஆசிரமத்தில் கட்டுக்கட்டாக பல கோடி பணம் ( சுமார் 12 கோடி ரூபாய் ), கட்டிக்  கட்டியாகத் தங்கம் ( சுமார் 22 கோடி ரூபாய் ), வெள்ளி வகைகள் ( சுமார் 1.64 கோடி ரூபாய் ) மற்றும் வைரக்குவியல்கள் - வகை வகையான  தங்கச் சிலைகள்  என்று  அரை முழுதும் தாராளமாகக் கொட்டிக் கிடந்தன என்று சொல்கிறார்கள்.. புட்டபர்த்தியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பணம் இரண்டு இடங்களில் பிடிபட்டிருக்கிறது. வோல்வோ பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 5 கோடி ரூபாய் மற்றும் மற்றொரு வாகனத்தில் 35 லட்சம் ரூபாய் ஆகியவை ரொக்கமாகக் கைப்பற்றப்பட்டுள்ளன.

 வேலூர் ஜூனியர் சாமியார் நாராயணி : 

                வேலூரில் வெகு அண்மைக்காலத்தில் திடிரென சாமியாராக தோன்றிய சிறு பையன்,  நாராயணி என்ற பெயரில் கண்ணுக்கு நேரிலேயே மூக்கில் கையை வைக்கும் அளவிற்கு மிகப்பெரிய வளர்ச்சி. வேலூரிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் கொஞ்ச கொஞ்சமாக நிலங்களை ஆக்கிரமித்து, அந்த பகுதிக்கு ஸ்ரீபுரம் என்று பெயர் வைத்து, மிக சமீபத்தில் அங்கே ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான  தங்கத்தை பயன்படுத்தி மிகப்பெரிய "பொற்கோயிலை" கட்டி, பார்ப்போர் வியக்கும் அளவிற்கு  பிரமிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறார். அந்த பகுதியே இன்று சுற்றுலா ஸ்தலமாக மாறிவிட்டது. ஒரு பொற்கோயிலை கட்டுமளவிற்கு ஒரு சிறுவனுக்கு கோடிக்கணக்கான பணம் எப்படி கிடைத்தது என்பது தான் அந்த கோயிலை பார்போருக்கு எழும் கேள்வியாகும். சாதாரண மக்களுக்கே அப்படிப்பட்ட கேள்வி எழும் போது, ஏன் ஆட்சியாளர்களுக்கு மட்டும் அப்படிப்பட்ட கேள்வியோ - சந்தேகமோ எழவில்லை என்பது தான் நமது கேள்வியாகும்.  மாதா அமிர்தானந்தமயி:

           இவர்தான் இந்தியாவிலேயே பணக்கார சாமியாரினியாக இருப்பார் என்று சொல்லப்படுகிறது. மிகவும் குறைவாக மதிப்பிட்டால்கூட அவரது  அமிர்தானந்தமயி டிரஸ்டின் சொத்து மதிப்பு ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும் என்கிறார்கள். தனது பதின்பருவ வயதிலேயே சாமியாரினியாக மாறிவிட்ட அமிர்தானந்தமயியின் சொந்த ஊரான வள்ளிக்காவு என்ற தீவில் அவரது ஆசிரமம் அமைக்கப்பட்டிருக்கிறது. அது பல  அடுக்குமாடிக் கட்டிடமாகும். அவரது பக்தகோடிகளிடமிருந்து வரும் நன்கொடைகள் ஒருபுறம் குவிகிறது. மற்றொரு புறம், அவர் நடத்தும்  கல்வி நிறுவனங்கள் மூலம் கொள்ளை லாபம்.  தனியார் கல்விச் சந்தையில் வசூலிக்கும்  கட்டணங்களையே அவர்களும் வசூலிக்கிறார்கள். இதோடு ஒரு மருத்துவமனை, தொலைக்காட்சி நிறுவனம் என்று பணம் கொட்டுகிறது.


ஆஷாராம் பாபு:

           இந்திய சாமியார்களில் அதிகமான அளவு சர்ச்சைகளில் அடிபட்டவர்களில்  இந்த ஆஷாராம் பாபு என்ற சாமியாரும் ஒருவர். . ஏராளமான நில ஆக்கிரமிப்பு புகார்கள் இவரின் ஆசிரமங்கள் மீது உள்ளன.   2009 - ஆம் ஆண்டில், இவருடைய ஆசிரமங்கள் கிட்டத்தட்ட 67 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலான நிலங்களை ஆக்கிரமித்துள்ளன என்று நரேந்திர மோடி அரசு சட்டமன்றத்திலேயே அறிவித்தது. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் 350க்கும் மேற்பட்ட ஆசிரமங்களை ஆஷாராம் பாபு அமைத்துள்ளார். அமெரிக்காவில் நியூஜெர்சி உள்ளிட்ட பல இடங்களில் இவரது  ஆசிரமங்கள் உள்ளன.


ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் :

                 151 நாடுகளில் 30 கோடி பக்தர்கள் அவருக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பொதுவாக, சாமியார்கள் காவி உடுத்துவதை வாடிக்கையாகக் கொள்வார்கள். இவர் மட்டும் வெள்ளை உடையை உடுத்துபவர். 1980களின் துவக்கம் வரை அவர் யார் என்றே வெளியுலகிற்கு தெரியாமல் இருந்தது. கடந்த முப்பது ஆண்டுகளில் அசுர வளர்ச்சி கண்டுள்ளார். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்பில் அவரது சொத்து இருக்கும் என்று கூறப்படுகிறது.  தமிழகத்தின் பாபநாசத்தில் அவர் பிறந்தார். பெங்களூருவில் வாழும் கலை மையத்தை அவர் அமைத்தார். அவரது மையம் சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக உருவானது. பெங்களூரு-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் 15 ஏக்கர் நிலத்தை ரவிசங்கரின் ஆசிரமம் கபளீகரம் செய்ததாக வெளிநாடுவாழ் இந்தியரான பால் குற்றம் சாட்டினார். ஆனால் அந்த சர்ச்சை மறைக்கப்பட்டது.


பாபா ராம்தேவ் :

           ராம் கிருஷ்ண யாதவ் என்ற இயற்பெயரைக் கொண்ட ராம்தேவின் சொத்து மதிப்பு 1,100 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பாக ஹரித்துவாரின் தெருக்களில் அலைந்து திரிந்து கொண்டிருந்த இவர், ஏழாம் வகுப்பு வரைதான் பள்ளிக்கூடத்தில் பயின்றிருக்கிறார். பின்னர் சமஸ்கிருதம் மற்றும் யோகா பயின்றார். பின்னர், உலக வாழ்க்கையைத் துறந்து சந்நியாசம் மேற்கொள்வதாக அறிவித்தார். பின்னர், திவ்யா யோக மந்திர் டிரஸ்டு ஒன்றைத் துவங்கினார்.

           இப்படியாக நம் நாட்டில்  நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக சாமியார்கள் எண்ணிக்கையும் அவர்கள் சேர்க்கும் சொத்துக்களும் உயர்ந்துகொண்டே தான் போகிறது. ஆனால் ஆட்சியாளர்களோ சாமியார்கள் சேர்க்கும் சொத்துகளுக்கு ஒரு கட்டுப்பாடோ, விதிமுறைகளையோ விதிப்பதில்லை. ஆட்சியாளர்கள் கவனம் தங்கள் பக்கம் திரும்பாத அளவிற்கு ஆட்சியாளர்களை சாமியார்கள் ''கவனித்து'' விடுகிறார்கள்.
           மேலே சொன்ன அத்தனை சாமியார்களும் இலவச மருத்துவமனைகளை நடத்தி அப்பாவி மக்களின் கண்களையும் கட்டிவிடுகிறார்கள் என்பது தான் உண்மை. 

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com